சத்யாஸ்ரேயனுடனான ராஜ ராஜரின் போர் மிகவும் உக்கிரமானதாக இருந்திருக்க
வேண்டும். சளுக்கர்களிடம் சோழர்கள் அடைந்த தோல்வி அவர்களை உசுப்பேற்றியிருக்க
வேண்டும். மேலும் ராஜ ராஜர் தனது கனவான தஞ்சை பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்க
தொடங்கியிருந்தார். அதற்கு தேவையான பொருட்களும், அடிமைகளையும் அங்கிருந்து
கிடைக்கப்பெறும் என்பதும் ஒரு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.
சத்யாஸ்ரேயருடைய கல்வெட்டு ராஜராஜர் ஒன்பது இலட்சம் கொண்ட படையோடு வந்து வெகு
உக்கிரமாக போர் புரிந்தனர் என்றும் இந்த மாபெரும் படைக்கு ராஜராஜரின் புத்திரன் ராஜேந்திர
சோழர் தலைமை தாங்கியதாகவும் கூறுகிறது. சளுக்கர்களை போரில் வீழ்த்தினாலும் அவர்கள்
நாட்டை ராஜராஜர் தனது ஆளுமைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சளுக்க நாட்டில் ராஜ ராஜரின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது இதை உறுதிப்படுத்துகிறது.
அடுத்து, பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று
புகழப்பெறும் முதலாம் ராஜேந்திர சோழரின் சளுக்க படையெடுப்புகளை பார்ப்போம்.
ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வரும் முன்னரே மேலை சளுக்கம் இரு மன்னர்களை
இழந்துவிட்டது (சத்யாஸ்ரேயர் மற்றும் ஐந்தாம் விக்ரமாதித்யன்). இவர்களுக்கு பின் ஜெயசிம்மன்
ஆட்சிக்கு வந்தார். ஜெயசிம்மனின் ஆட்சிக்காலத்தில் சளுக்க படைகள் எழுச்சிப்பெற்றன.
ராஜ ராஜரின் காலத்தில் சோழர்களிடம் இழந்த தெற்கு பகுதிகளை மீட்டெடுத்தது. இக்கூற்றை பெல்லாரி
மற்றும் இன்றைய மைசூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதாக
இராசசேகர தங்கமணி தனது “முதலாம் ராஜேந்திர சோழன்” புத்தகத்தில் கூறுகிறார். மேலும் ஜெயசிம்மன் சோழ
யானைக்கு சிங்கம் போன்றவன் என்ற புனைப்பெயர் உடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலை சளுக்கரின் இந்த வெற்றி ராஜேந்திர சோழரின் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள்
நடக்கபெற்றிருக்க வேண்டும் என்பது ஜெயசிம்மனின் பெல்காம் கல்வெட்டு மூலம் உணரலாம்.
இக்கல்வெட்டு வரையப்பெற்ற ஆண்டு 1017.A.D.
ஜெயசிம்மனின் படையெடுப்பு சோழர்களின் படைகளை உசுப்பேற்ற ராஜேந்திரர் தனது
படைகளை காஞ்சியில் திரட்டினார். சோழப்படைகள் முயங்கியில் சளுக்க படைகளை சந்தித்தது. சம
பலம் பொருந்திய இரு படைகள் பொருதின. இறுதியில் சோழர்கள் வெற்றி பெற்றனர். இப்போர் 1020.A.D நடைப்பெற்றது.
இந்த போரில் தோற்றாலும் ஜெயசிம்மன் விடாது
கறுப்பு என்பதைப்போல் மீண்டும் படை திரட்டி துங்கபத்திரை நதிக்கு வடக்கில் உள்ள
பகுதிகளை சோழர்களிடமிருந்து மீட்டெடுத்து தனது தெற்கு எல்லையாக துங்கபத்திரை
நதிக்கரையை கொண்டார். துங்கபத்திரை நதியை தாண்டி சோழப்படைகளால் செல்ல
முடியாததால் சோழர்களும் தங்களது வட எல்லையாக நதிக்கரையை கொண்டனர்.
எனினும் போர் மற்றொரு இடத்தில, மற்றொரு
விதத்தில் தொடர்ந்தது. அதற்கு மேலை சளுக்கர்களின் தாயாதிகளான கீழை சளுக்கதில்
ஏற்ப்பட்ட குழப்பங்களே காரணம். இதைப்பற்றி ஏற்கனவே இரு வலைபூக்கள்
எழுதப்பட்டுவிட்டன.
வேங்கியில் நடந்த போர்களில் சோழர்கள் அரையன் ராஜராஜன்
தலைமையிலான படைகள் மேலை சளுக்க படைகளை புறமுதுகிட செய்தன. வேங்கியில் சளுக்கர்கள் மற்றும் சோழர்களின் தலையீடு முதலாம்
குலோத்துங்கர் ஆட்சிக்கு வரும் வரை நீடித்தது.
சோழ கங்கம் முதற்பகுதி - விமர்சனம் விரைவில் ..
No comments:
Post a Comment