Sunday, October 27, 2013
சோழ கங்கம் – முதற் பகுதி – ஒரு சிறிய விமர்சனம்
நம்மில்
பெரும்பாலானோருக்கு சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் ஒரு முக்கியமான
விஷயத்தை பற்றி கற்பனை செய்து எழுதப்பட்டதே இந்த சோழ கங்கம் என்ற புத்தகத்தின்
முதற் பாகம்.
அந்த சம்பவம் இதுதான். முகமது
கஜினி வட இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார். அதே சமயத்தில் தெற்கு
இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் ஒரு மாவீரன் இந்தியாவின் வட கிழக்கு
நாடுகளை நோக்கி தனது படைகளை செலுத்துகிறார். அந்த வீரன் வேறு யாரும் அல்ல.
ராஜேந்திர சோழர். ராஜேந்திர சோழர் வடக்கு நோக்கி நகர்த்திய படைகள் கங்கை நீரை கொணர்வதற்கு
மட்டும் அல்ல, கஜினியுடன் மோதுவதற்கும் தான் என்ற வாக்கில் புனையப்பட்டதே சோழ
கங்கம் – முதற் பகுதி.
புத்தகத்தை பற்றி விமர்சிப்பதற்கு
முன் ஒரு சிறிய முன்னோட்டம் சம்பவத்தைப்பற்றி. கஜினியுடன் மிகப்பெரிய படையுடன் போர்
புரியக்கூடிய வல்லமை தென் இந்தியாவில் அன்று இருந்த இரு பெரும் சாம்ராஜ்யங்களான
மேலை சளுக்கர்களுக்கும், சோழர்களுக்கும் உண்டு. எனினும் மேலை சளுக்க படைகள்
அச்சமயத்தில்தான் சோழர்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். எனவே படை பலம் மற்றும்
மீதமிருந்த படைகளின் உற்சாகமும் குன்றியிருக்கும். எனவே போர் நடந்திருந்தால்
வெற்றி கிட்டியுருக்குமா என்று சந்தேகம்தான்.
சோழர்களும் கஜினியுடன்
மோதியதாக எந்தவொரு வரலாற்று குறிப்பும் கிடைக்கவில்லை. மேலும் கஜினி வட
இந்தியாவில் கிடைத்த செல்வங்களே போதும் என்று நினைத்து தெற்கு இந்தியாவில்
படையெடுக்காமல் இருந்திருக்கக்கூடும். மேலும் கஜினியின் ஒற்றர்கள் சோழப்படைகளைப் பற்றியும்
, மேலைசளுக்கப் படைகள் பற்றியும் உளவு பார்த்திருக்ககூடும். வட இந்தியாவில் நிலவிய
கோஷ்டி மோதல்கள் தென் இந்தியாவில் அப்பொழுது அடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும்
காரணமாக இருந்திருக்கலாம்.
இப்புத்தகத்தை நான்
வாங்கி பல மாதங்கள் ஆனாலும் ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்ததால்
சற்றே தாமதமானது. அதற்குள் எனது நட்பு வட்டாரங்கள் புத்தகத்தின் விமர்சனத்தை
அடுக்கினர். அவற்றின் தொகுப்பே இது. என்னதான் சம்பவத்தை சுவாரசியமாக கூறினாலும் சம்பவத்தில்
பங்கு பெறும் மனிதர்களின் பெயர்களும் அவர்களின் நாடும் பல சமயத்தில் நமக்கு மறந்து
போகின்றன என்பது மறுக்க முடியாத விமர்சனமாக உள்ளது. புத்தகத்தை வாசித்த அனைவரும்
கூறுகின்றதாக உள்ளது.
முதல் 200 பக்கத்தில்
சுமார் 150-160 கதாப்பாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப்படுத்திவிடுகிறார். அதை
ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் ஆங்காங்கே பக்கங்களில் கீழ்
கொடுக்கப்படும் அடிக்குறிப்புகளில் ஆசிரியரின் கடும் உழைப்பு புலனாகிறது. சில
சம்பவங்களை படிக்கும்பொழுது நமக்கு உண்மையாகவே மயிர்க்கூச்செரிதல் ஏற்படுகிறது.
இந்த சம்பவம் நடந்திருந்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்று நமக்கு
தோன்றசெய்வதில் ஆசிரியர் வெற்றியடைகிறார்.
ஒரே
வரியில் சொல்ல வேண்டுமென்றால் புத்தகத்தின் முதல் பாகம் சில சமயங்களில் ஏமாற்றத்தையும்,
சில சமயங்களில் சுவாரசியமாகவும், சில சமயங்களில் ஏக்கத்தையும் வரவழைக்கின்றன. ஆசிரியரின்
முதல் முயற்சி என்பதை புத்தகத்தின் அளவில் மட்டுமல்ல, புத்தகத்தின் பக்கங்களிலும்
நம்ப முடியவில்லை. முதல் முயற்சியிலே 1500 பக்கங்கள் எழுதுவது
சாத்தியமல்ல. ஆனால் சக்திஸ்ரீ அவர்கள் அதில் மட்டுமல்லமால் வாசகர்களையும் வெற்றி
கண்டிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment