முதலாம் ராஜேந்திர சோழரின் புதல்வர்களுள் ஒருவருமான இரண்டாம் ராஜேந்திர
சோழருக்கு பிறகு சோழ மன்னனாக முடிசூட்டப்பெற்றவருமான வீர ராஜேந்திர சோழரின் காலத்திற்கு
வருவோம். இவருடைய மெய்க்கீர்த்திகளில் மேலை சளுக்கர்களை ஐந்து முறை புறமுதுகிட்டு ஒடச்செய்ததாக
குறிப்பிடப்படுகிறது.
மேலை சளுக்கர்களுடன்
இடை விடாது போர்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் வீர ராஜேந்திரர்.
வேங்கியின் மன்னனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருந்தார். வேங்கியின் மன்னனோ
இரு தலைக்கொல்லி எறும்பாக தவித்தான். ஒரு புறம் மேலை சளுக்கர்களும் சோழர்களும்
தங்களை பகடைக்காயாக உபயோகிப்பது. மற்றொரு புறம் உட்கட்சிப்பூசல். அதாவது
எந்நேரத்திலும் ராஜ ராஜ நரேந்திரரின் புதல்வன் அநபாயன் தனது சிம்மாசனத்தை பறிக்கலாம்.
வேங்கியின் நிலையை இன்றைய காஷ்மிரோடு ஒப்பிடலாம்
இவர்களது பகை
பெரும்பாலும் வேங்கியை சுற்றியே பின்னப்பட்டிருந்தது. வீர ராஜேந்திரர் காலத்திற்கு
வருவோம். எந்த சமயத்தில் எந்த இடத்தில நடைப்பெற்ற போர் என்று தெரியாத போரில் வீர
ராஜேந்திரர் சளுக்கர்களின் அணியில் போரிட வந்தான் 7 படைத்தலைவர்களின் தலையை
கொய்தார் எனவும் இது சோமேஸ்வரனை மிகவும் சினப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து
சோமேஸ்வரன் சோழ மன்னனுக்கு கடிதம் ஒன்றில் அடுத்த போருக்கு நாள் குறித்ததாகவும்
அதைக்கண்ட வீர ராஜேந்திரர் மிகவும் மகிழ்ச்சியுற்று தனது படைகளோடு குறித்த நாளில்
குறித்த இடத்திற்கு சென்று ஒரு திங்களாகியும் சோமேஸ்வரன் வரவில்லை என்றும் நீலகண்ட
சாஸ்திரிகள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதையடுத்து வீர ராஜேந்திரர் தனது
சேனாபதிகளை எரிப்பரந்தெடுத்தலில் ஈடுபடுத்துகிறார்.
எனினும் சோமேஸ்வரன்
வருகாமைக்கு தெளிவான காரணங்கள் குறிப்பிடப்பெறவில்லை. ஒரு சாரார் சோழர்களின்
பிரம்மாண்ட படைகளிடம் மீண்டும் தோல்வியுற பயந்தான் எனவும் மற்றொரு சாரார் சோமேஸ்வரனுக்கு
மரணம் சம்பவித்திருக்ககூடும் என்று கூறுகின்றனர். வீர ராஜேந்திரரின் வேங்கி
படையெடுப்பின் போதும் சோமேஸ்வரன் இருக்கப்பெறவில்லை என்பது அறியப்படுகிறது. தனது
மருமகனான விஜயாதித்யனுக்கு கிடைக்க வேண்டிய வேங்கி சிம்மாசனம் மேலை சளுக்கர்களிடம்
இருப்பதைக்கண்டு வீர ராஜேந்திரர் தனது படைகளை வேங்கியை நோக்கி நகர்த்தினார். அங்கே
நிலை பெற்றிருந்த மேலை சளுக்கர்களின் படைகள் சோழப்படைகள் முன் சிதறியோட
விஜயாதித்தனுக்கு மீண்டும் வேங்கி சிம்மாசனம் கிடைத்தது.
சோமேஸ்வரன் மரணத்திற்கு பிறகு இரண்டாம் சோமேஸ்வரன் மேலை சளுக்கர்களின் மன்னனாக
1068 ஆம் ஆண்டு முடிசூட்டப்பெறுகிறார்.
எனினும் இரண்டாம் சோமேஸ்வரனுக்கு சோழர்கள் மட்டும் எதிரியாக இருக்கவில்லை. அவனது
தம்பியான ஆறாம் விக்ரமாதித்தன் தனது அண்ணனை எதிர்க்க தொடங்கினான். தனது மற்றொரு
தம்பியான ஜெயசிம்மனுடன் கல்யாணி நகரத்தை விட்டு பெரும் படைகளுடன் செல்லத்தொடங்கினான்.
அவனை அழிக்க மற்றொரு படைப்பிரிவை சோமேஸ்வரன் அனுப்பிவைத்தான். அப்படைகளை
வெற்றிகரமாக முறியடித்த விக்ரமாதித்தன் சோழ நாட்டை நோக்கி முன்னேற தொடங்கினான். மற்றொரு
பெரும் போருக்கு தயார் நிலையில் இல்லாதிருந்த வீர ராஜேந்திரர்
விக்கிரமாதித்தனுக்கு தனது மகளை மணமுடித்து போரை தவிர்த்தான். இதையடுத்து
சளுக்கர்களின் ஒரு படைப்பிரிவோடு சோழப்படைகள் இணையக்கூடிய வாய்ப்பு அமைந்தது.
மீண்டும் கல்யாணி
நகரத்தை போர் மேகம் சூழ்ந்தது. இம்முறை சளுக்கர்களின்(சோமேஸ்வரன்) ஒரு படைப்பிரிவு
ஒரு அணியாகவும், சளுக்கர்களின்(விக்ரமாதித்தன்) மற்றொரு படைப்பிரிவு, சோழர்களின்
படை, கடம்ப(ஜெயசிம்மன்) நாட்டின் படை, வேங்கியின் படைகள் ஒரு அணியாகவும் திரண்டன. சோமேஸ்வரன்
நாட்டை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை தனது தமையனுக்கு தர வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டான். சளுக்கர்களின் உள்நாட்டு பகையை உபயோகபடுத்திக்கொண்ட வீர
ராஜேந்திரர் சோழர்களுக்கும் சளுக்கர்களுக்குமான பகையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
மேலும் மேலை சளுக்கர்கள் தங்களது வட எல்லையில் பாமரர்களை இடையறாது எதிர்கொள்ள
வேண்டியிருந்ததால் சோழர்களுடனான பகையை முடித்துக்கொண்டனர்.
முதன் முறையாக எடுத்து
கொண்ட தலைப்பை முழுமையாக முடித்திருக்கிறேன். :)
சோழர்களைப்பற்றிய
புதினங்களை தொடர்ந்து படிப்பது ஒரு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சோழ கங்கம்
புத்தகத்தின் இரண்டாம் பகுதி விமர்சனம் தாமதமாகும் என்று நினைக்கிறேன். தற்பொழுது சாண்டில்யனின்
ஜல தீபத்தை வாசிக்கிறேன். அடுத்ததாக உதயணின் கடல் கோட்டை படிக்கலாம்
என்றிருக்கிறேன்.
No comments:
Post a Comment