Tuesday, November 22, 2016

அவனி முதல் பாகம் (Avani - First Part by Balakumaran) - ஒரு விமர்சனம்

வெகு நாட்களுக்கு பிறகு வலைப்பதிவை மறுபடியும் எழுத துவங்க முடிவு செய்துள்ளேன். :-)

பொன்னியின் செல்வன் முதலே சோழர்களை பற்றிய புத்தகம் என்றாலே எனக்கு தனி பிரியம். புத்தகத்தை வாங்கும் முன்னரே அவனி புத்தகத்தின் முன்னுரையை படிக்க சென்னையில் நடந்த புத்தக திருவிழாவில் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்பொழுதே பாலகுமாரன் அவர்கள் எழுதிய புதிய வரலாற்று புதினமான இந்த புத்தகத்தை வாங்கிவிட நினைத்தேன். ஆனால் வாங்க இயலவில்லை. இரு வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த எனது பிறந்த நாளை ஒட்டி எனது மனைவி இந்த புத்தகத்தை எனக்கு வாங்கிதந்தார்.  

இரண்டாம் குலோத்துங்க சோழருக்கு பிறகு சிம்மாசனம் ஏறிய இரண்டாம் ராஜராஜ சோழர் (அ) ராஜகம்பீரர் பற்றி எழுதப்பட்ட வரலாற்று புதினம். தாராசுரம் பகுதியில் மிகவும் நுட்பமாக கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவில் எப்படி கட்டப்பட்டது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டது. 

இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது. 

புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது.


ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது. 


ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். :-)

1 comment:

  1. Great insights shared in this blog, very informative and engaging. Looking forward to more such valuable content. Keep up the excellent work and consistent posting!

    South India tour packages
    North India Tour Packages
    Central India Tour Packages

    ReplyDelete