Tuesday, December 25, 2012

வேங்கி நாட்டு அரசியல் சூழல் பாகம் 2

விஷ்ணுவர்தன் பிறப்பு:

நரேந்திரன் ஆட்சி கட்டிலில் ஏறியவுடன் விவகாரம் ஓய்ந்துவிடவில்லை. மேலை சளுக்கர்கள் வேங்கியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஓயாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் ராஜேந்திரன் தன்னுடைய கங்கை படையெடுப்பிற்கு ஏதுவாக வேங்கி நாடு இருக்கவேண்டும் என்பதற்காக சோழர்கள்-வேங்கி இடையே இருந்த கொள்வினை கொடுப்பினை உறவு தொடருமாறு செய்தான். ராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். நரேந்திரன்-அம்மங்கா தேவி இவ்விருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுடைய இயற்ப்பெயர் விஷ்ணுவர்தன்.

நரேந்திரன் மரணம் - மற்றுமொரு குழப்பம் 

காலச்சக்கரம் உருண்டோட சோழ நாட்டில் ராஜேந்திரனுக்கு பிறகு நாம் வீரராஜேந்திரன் காலத்திற்கு மாறுகிறோம். வீரராஜேந்திரன்  தன்னுடைய  மகளை நரேந்திரனுடைய தம்பியாகிய விஜயாதித்தனுக்கு மணமுடித்து வைத்து விஜயாதித்தனும் மேலை சளுக்கர்கள் வசமாகாமல் பார்த்துக்கொண்டான். இந்நிலையில் நரேந்திரன் இறந்து விடவே  சோழ அரியணையில் வீற்றிருந்த வீரராஜேந்திரன் தன்னுடைய மருமகனான விஜயாதித்தனுக்கு முடி சூட்டினான். நரேந்திரனின் மகனான விஷ்ணுவர்தனுக்கு கிடைக்கவேண்டிய அரியணை விஜயாதித்தனை சென்றடைந்தது. சோழர்கள் செய்த தவறுகளுள் இதுவும் ஒன்று.

விஷ்ணுவர்தனின் செய்கை:
அரியணை கிடைக்காவிடிலும் விஷ்ணுவர்தன் சோழர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்தான். எனினும் பொறுத்தார் பூமியாள்வார் என்பதேர்கர்ப்ப விஷ்ணுவர்தனுக்கு காலம் கனிந்து வரத்தொடங்கியது. வீரரஜெந்திரன் இறந்த வேளையில் உள்நாட்டுக்கலகம் ஏற்பட்டதையும் அதைத்தொடர்ந்து அதி ராஜேந்திரனை அரியணையில் ஏற்ற விஜயாதித்தன் சோழ நாட்டிற்கு வந்து அதி ராஜேந்திரனை அரியணையில் அமர வைத்தான். இதைப்பற்றி பிறிதொரு வலைபதிவில் எழுதியுள்ளேன்.

விஷ்ணுவர்தன் --> குலோத்துங்கன் 
அரியணையில் ஏறிய சிற்சில திங்களில் அதி ராஜேந்திரன் மரணமடைய மன்னனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமையால்  சோழ நாடு உள்நாட்டு கலகத்தில் சிக்கி தவிக்க ஆரம்பித்தது. இதையடுத்து விஷ்ணுவர்தன், தான் ராஜேந்திர சோழரின் மகள் வயிற்று பேரன்தான் என்றும் தனக்கும்  இந்த சோழ நாட்டில் உரிமையுள்ளதைப்பற்றி எடுத்துரைக்க சோழ நாட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் விஷ்ணுவர்தனை சோழ நாட்டின் மன்னனாக முடிசூடினர்.

இதுவே விஷ்ணுவர்தன் முதலாம் குலோத்துங்கனாய் மாறிய வரலாறு.

இதற்கிடையில் வேங்கியில் விஜயாதித்தனும் இறந்து விடவே விஜயாதித்தனுக்கும் நேரடி வாரிசுகள் இல்லாமையாலும் வேங்கி நாடு  சோழர்களின் நேரடிக்கட்டுப்பாடில் (குலோத்துங்கன் காலத்தில்) வந்தது. இதற்கு தகுந்த ஆதாரமாக முதலாம் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனை வேங்கி நாட்டில் இருத்தியிருந்ததை கூறலாம்.

இதன் மூலம் சோழர்கள்-கீழை சளுக்கர்களுடனான உறவு ஒரு முடிவுக்கு வந்தது எனக்கூறலாம்.


Tuesday, November 13, 2012

வேங்கி நாட்டு அரசியல் சூழல்

இப்பதிவு எதைப்பற்றியது என்பது தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

சோழர்களுடனான கீழை சாளுக்கியத்தின் உறவு வீரராஜேந்திரனின் காலம் வரை நீடித்தது. ஆனால் இந்த உறவில் மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை ராஜேந்திர சோழரின் காலத்தில் நிலவியது. அதைப்பற்றியே இப்பதிவில் காணவிருக்கிறோம். இதையும் இரண்டு   பகுதிகளாக பிரித்து எழுதுவதே உத்தமம் என்று நினைக்கிறேன்.

அதைப்பற்றி காணும் முன்னர் ஒரு சிறிய அறிமுகம் வாசகர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன்.

வேங்கி நாடென்பது சாளுக்கிய நாட்டின் ஒரு சுதந்திர பகுதியாகும். அதாவது சாளுக்கிய நாடு மேலை சாளுக்கியம் என்றும் கீழை சாளுக்கியம் என்றும் பிரிந்திருந்தது.இதில் வேங்கி நாடே கீழை சாளுக்கியம் என்றறியப்படுகிறது.

சோழர்களின் அரசர்களுள் மங்காப்புகழ்ப்பெற்ற ராஜ ராஜ சோழன் கீழை சாளுக்கியம் மேலை சாளுக்கியதுடன் இணைந்துவிடக்கூடாது என்பதற்க்காக கீழை சாளுக்கியத்தை அச்சமயத்தில் ஆண்ட விமலாதித்தனுக்கு தனது மகளான குந்தவை தேவியை மணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் கீழை சாளுக்கியம் மேலை சாளுக்கியருடன் இணைய மாட்டாமல் பார்த்துக்கொண்டனர் சோழர்கள்.

ராஜ ராஜரின் தந்திரத்தை பார்த்த மேலை சாளுக்கியத்தின் மன்னன் தனது மகளையும் கீழை சாளுக்கிய மன்னனுக்கு மணமுடித்து சோழர்களுடன் கீழை சாளுக்கியம் முற்றிலும் இணையாத வண்ணம் பார்த்துக்கொண்டான்.

ராஜ ராஜரின் காலத்தில் தொடங்கிய இவ்வுறவு ராஜேந்திரரின் காலத்திலும் தொடர்ந்தது. ராஜேந்திர சோழன் தனது மகளான அம்மங்கை தேவியை விமலாதித்தன் மகனான ராஜ ராஜ நரேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். இதைப்பற்றி மேலும் தெளிவு பெற ஒரு படிநிலை வரைவுப்படம் அவசியமாகிறது.




மேலே உள்ள வரைவு படம் வாசகர்களுக்கு சற்றே ஒரு தெளிவை ஏற்ப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் இறக்கவே அவனுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்வது யார் என்று பிரளயம் உருவானது. அதாவது வயதில் மூத்தவனான நரேந்திரனுக்கே அரியாசனம் என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் விஜயாதித்தனுக்கே என்றும்  உரிமை கோரினர். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் சோழர்களுக்கும் மேலை சளுக்கியர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட மறைமுகப்போர்.

விஜயாதித்தன் ஆட்சிக்கட்டிலில் ஏறினால் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டனர் மேலை சாளுக்கியர்கள். நரேந்திரன் மன்னனானால் மேலை சாளுக்கியத்தின் கொட்டத்தை அடக்க எளிதாக இருக்கும் என்று சோழர்கள் நினைத்தனர்.

இறுதியில் சோழர்கள் கை ஓங்கியது. நரேந்திரன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தான். ஆனால் விவகாரம் இத்துடன் நின்றுவிடவில்லை. அதைப்பற்றிய விவரங்கள் அடுத்த பகுதியில்.







Saturday, October 6, 2012

மற்றுமொரு மரணம் - தொடர்ச்சி

சென்ற வலைப்பதிவின் தொடர்ச்சி......

2) உள்நாட்டுக்கலகம்

பில்ஹனர் தனது நூலில் அதிராஜேந்திரன்  உள்நாட்டுக்கலகத்தால் மரணத்தை தழுவினான் என்று கூறுகிறார்.

உள்நாட்டுக்கலகம் நிகழும் அளவிற்கு சோணாட்டில் என்ன பிரச்சனை நடைபெற்றிருக்ககூடும் என்று வாசகர்கள் நினைக்கலாம். முதலில் அது நடந்ததற்கு காரணமாக இருந்திருக்கக்கூடியவைகளை பார்ப்போம். பிறகு அதன் மறுப்புகளையும் பார்ப்போம்.

உள்நாட்டுக்கலகம் நிகழ்வதற்கு கூறுகள் இரண்டாக இருந்திருக்கலாம்.

அ) வீரராஜேந்திர சோழன் இறந்தப்பிறகு சோழநாட்டில் உள்நாட்டுக்கலகம் நிகழ்ந்ததாகவும் அதை மேலை சளுக்க மன்னன் அடக்கிய பின் அதிராஜேந்திரனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதாகவும் பில்ஹனர் தனது நூலில் உரைக்கிறார். எனினும் முன்னமே கூறியபடி மன்னன் புகழ் பாடும் நூல் சில விடயங்கள் மிகைப்படுத்தப்படுவது இயற்கையே.

சோழ நாட்டிற்க்கு தொன்றுதொட்டு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்து வரும் சிற்றரசர்கள் உள்நாட்டுக்கலகத்தை உண்டாகியிருப்பார்கள் என்றோ அல்லது மக்களே  போராட்டம் நடத்தும் அளவிற்கு சோழ நாட்டில் பஞ்சமோ அல்லது பீதியோ எதுவும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

மேலும் அதிராஜேந்திரனின் முடிசூட்டு விழாவில் சோழ மன்னனின் மைத்துனான  சளுக்க மன்னன் விக்கிரமாதித்தன் பங்கு பெற்றிருப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதை பில்ஹனர்  சற்று மிகைப்படுத்திக்கூறுகிறார்  என்பதே எனது வாதம்.

ஆ) கிருமி கண்ட சோழன்???

சில வரலாற்றாய்வாளர்கள் இம்மன்னனையே  கிருமி கண்ட சோழன் என்று கூறுகிறார்கள். அதாவது தில்லை கோவிலிலிருந்து பெருமாள் சிலையை பெயர்த்தெடுத்து கடலில் எறிந்தவன் இவனே என்பது இவர்களின் வாதம். இச்சம்பவத்தால் கொதித்தெழுந்த அந்தணர்கள் இவனுக்கு எதிராக தீய சக்திகளை (பில்லி, சூன்ய வகையறாக்கள்) ஏவி இவனை அழித்ததாகவும் கூறுகின்றனர். இது முற்றிலும் மறுக்கப்படவேண்டிய ஒன்று.

 எனினும் இச்சம்பவம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்தது என்பது தெளிவாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது(தில்லை கோவிலில் இருந்து சிலை பெயர்த்தெடுத்த சம்பவம்). எனவே  கிருமி கண்ட சோழன் இவரில்லை என்பது உறுதியாகிறது.


 மேலும் இம்மன்னன் போர் எதிலும் பங்கேடுத்துக்கொண்டதுக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இம்மன்னன் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்பதே  எனது கருத்து.

இம்மன்னனுடன் விசயலாயர் நிறுவிய சோழப்பேரரசு முடிவுக்கு வருகிறது. அதாவது இடைக்கால சோழர்களின் காலம் முடிவடைகிறது.

 இதன் பிறகு சிம்மாசனத்தில் அமரவிருக்கும் முதலாம் குலோத்துங்கன் எதிர்கொண்ட சம்பவங்கள் குறித்து மற்றொரு தருணத்தில் எழுதுகிறேன்.





Saturday, August 18, 2012

மற்றுமொரு மரணம்

வரலாற்றில் நிகழ்த்தப்படும் சில இறப்புகள் அதன் பாதையை மாற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட இறப்புகளை இறவாபுகழ்ப்பெற்ற சோழகுலமும் பெற்றிருப்பது திண்ணம். அப்பேர்பட்ட ஒரு இறப்பைப்பற்றியே இந்தப் பதிவு.

அது அதிராஜேந்திர சோழனுடய இறப்பு ஆகும்.

அவனுடைய இறப்பைப்பற்றிப் பார்க்கும் முன் அவனைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் வாசிப்பிற்க்கு அவசியமென்று நினைக்கிறேன்.

அதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு சோழ நாட்டின் பேரரசனாய் முடிசூட்டபெற்றிருக்கிறான். இவன் சில மாதங்களே ஆட்சிப்பீடத்தில் இருந்தது  இவனது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இவனது மரணம் இயற்கையான ஒன்றா அல்லது கொலையா என்பதை பற்றியே இந்த பதிவு.

இவனுடைய மரணம் கொலையாக இருக்குமெனில் கொலைக்கான காரணக்கூறுகள் இரண்டாக இருக்கலாம்.

1) ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப்பேரன் விஷ்ணுவர்தன் (அ ) குலோத்துங்க சோழன் I. இவனுடைய தந்தையார் வேங்கி நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு பின் வேங்கி நாடு இவனையே ஆட்சிக்கட்டிலில் கண்டிருக்கவேண்டும். எனினும்  இவனது மாமன்களாகிய இரண்டாம் ராஜேந்திர சோழன் மற்றும்  வீரராஜேந்திர சோழன் (1063-1070) விஷ்ணுவர்தனின் சிற்றப்பனாகிய விசயாதித்தனை வேங்கி நாட்டில் ஆதரித்து வந்தனர்.

எனவே விஷ்ணுவர்தன் ஆட்சிக்கட்டிலில் அமரவில்லை என்பது ஒருதலை. இக்காரணங்களால் இவனுக்கும் சோழ நாட்டின் அரச குலத்தினருக்கும் பகைமை ஏற்பட்டிருக்கக்கூடும்.

எனினும் விசயாதித்தன் தனது மகனை தனது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே இழந்துவிட்டமையாலும் அவனுக்கு வேறு வாரிசுகள் இல்லாத காரணத்தினாலும் இப்பகைமை நாளுக்கு நாள் குறைந்திருக்க வேண்டும்.

ஆகவே விஷ்ணுவர்தன் இவன் மரணத்திற்கு காரணமில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுகிறது.

மேலும் இவனது இளமைகாலத்தில் இவன் சோழ நாடு மேற்கொண்ட சில போர்களில் இவன் கலந்து கொண்டிருப்பதும் சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திரம் நூலில் கூறப்பட்டிருக்கிறது.

மேலைச் சளுக்க நாட்டை சேர்ந்த பில்ஹனர் எழுதிய நூலில் அதிராஜேந்திர சோழன் உள்நாட்டு கலகங்களால் கொல்லப்பட்டான் என்று கூறுவதிலிருந்து விஷ்ணுவர்தனுக்கும் அதிராஜேந்திரனுக்கும் எவ்விதப்பகைமையும் இல்லை என்பது திண்ணம். நிற்க.

சோணாட்டிலிருந்து பன்னூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு புலவரின் நூலில் அதுவும் தன் மன்னனின் புகழ்ப்பாடும் நூலில் கூறும் கருத்துக்கள் சில மிகைப்படுத்தப்பட்டோ அல்லது திரித்தோ கூறப்பட்டிருக்கலாம். அது போன்றொன்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். எனினும் அவர் விஷ்ணுவர்தனை இதில் சம்பந்தப்படுத்தாதலிருந்து அவனுக்கு இம்மரணத்தில் எவ்விதப்பங்குமில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.


2) உள்நாட்டுக்கலகம் - அதன் காரணங்கள் அடுத்த வலைப்பதிவில்.

 வேலைப்பளுவின் காரணமாக என்னுடைய இந்த வலைப்பதிவு மிகுந்த தாமதத்திற்குப்பின்  எழுதுகிறேன்.

இந்த வலைபதிவுக்காக நான் படித்த புத்தகங்கள்.

1) பிற்காலச் சோழர் சரித்திரம் - T V. சதாசிவ பண்டாரத்தார்.
2) கடல் புறா - சாண்டில்யன்
3) விக்கிபீடியா வலைத்தளம்

Friday, March 2, 2012

உத்தம சோழன் நல்லவரா கெட்டவரா

முன்பே கூறியதுபோல் என் இரண்டாம் வலைப்பதிவு உத்தம சோழனை பற்றியே.

உத்தம சோழன் (மதுராந்தகன்) பற்றிய ஒரு சில தகவல்களை சென்ற வலைப்பதிவிலேயே கூறிவிட்டேன் எனலாம்.

உத்தம சோழனே இரண்டாம் பராந்தகனுக்கு பிறகு சோழ அரியணையில் அமர்ந்தவர். இவர் சோழ மாமன்னனாய் இருப்பினும், இவர் ஆட்சி பீடத்தில் ஏறிய விதமும் இவர் ஆட்சியில் நடந்த சில நிகழ்வுகளும் இவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஆராயமுடியாத வண்ணம் இருக்கின்றன. அவற்றை பற்றியே இந்த சிறிய வலைப்பதிவு.

ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்ட பின்பு சோழ அரியணையில் அமரப்போவது யாரென்ற கேள்வி எழத்தொடங்கியதும் அருண்மொழிவர்மன் உள்நாட்டுக் கலவரம் மூள்வதைத் தடுக்க தன் சிற்றப்பனுக்கு (மதுராந்தகன்) வழி விட்டமை நாம் அறிந்ததே.

ஆதித்ய கரிகாலனை கொல்வதன் மூலம் அருண்மொழிவர்மனுக்கும் மதுராந்தகனுக்கும் இடையே மூளும் பூசல் கலவரமாக உருவெடுக்க இடையே நாம் மதுரையை மீட்டு விடலாமென்ற பாண்டியர்களின் கணக்கீட்டை அருண்மொழிவர்மன் மிகவும் சாதுர்யமாக முறியடித்தார். ஆக
பாண்டியர்களின் திட்டம் தவிடு பொடியானது.

உத்தம சோழன் பதினாராண்டு காலம் ஆட்சி பீடத்தில் இருந்ததாகவும் அக்காலத்தில் சோழர்கள் எவ்விதமான போரிலும் ஈடுபடவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இவர் சிறந்த சிவ பக்தராக இருந்திருக்க கூடும் என்றே தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் இவருக்கு பின்வந்த ராஜ ராஜனே சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து திருவாசகத்தை மீட்டார் என்று தெரியவருகிறது. எனவே சிறந்த சைவ பக்தனாக இருக்கும் ஒருவர் தான் வழிபடும் கடவுளின் பெருமை பாடும் ஒரு நூலை மீட்டெடுக்கத்தான் முயற்சிப்பாரே தவிர அந்த நூல் மக்களிடம் சேராதவாறு முடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சரி ஆதித்யனின் மரணம் பற்றிப் பேசுவோம். சோழம் ஒரு சிறந்த வீரனை இழந்திருக்கிறது. எனவே அடுத்து அரியணை ஏறும் அரசன் இக்கொலைக்குக் காரணமாக இருந்தவர்களை தண்டிக்க முற்படுவானே தவிர அவர்களை உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்க்கமாட்டான். ஆனால் உத்தமர் காலத்தில் ஆதித்யனை கொன்றவர்கள் பெரும் பதவியில் இருந்தது ராஜ ராஜனின் (அருண்மொழிவர்மன்) உடையார்குடி கல்வெட்டுகள் தெரியப்படுத்துகிறது.

ராஜ ராஜன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் உடையார்குடியில் வசித்து வந்த ஆதித்யனின் கொலைக்கு காரணமான சில பேரின் சொத்தை பறிமுதல் செய்து அவர்களை நாடு கடத்தினார் என்று அவரது கல்வெட்டுகள் தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. எனவே உத்தம சோழரின் ஆட்சி காலத்தில் ஆதித்யனை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்படுகிறது.

இவையெல்லாம் இவருக்கு எதிராக இருக்கும் சில விவரங்கள்.

ஆதரவான ஒரு தகவல் என்னவெனில் ராஜேந்திர சோழனின் பெயர்களில் மதுராந்தகன் என்பதும் ஒன்று.
எனவே உத்தம சோழன் (மதுராந்தகன்) மேல் ராஜ ராஜனுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்திருக்குமானால் தன் புதல்வன் ராஜேந்திரனுக்கு இந்தப்பெயர் கிட்டியிருக்க வாய்ப்பில்லை.

மேலும் உத்தம சோழரின் ஆட்சி காலத்தில் ஆதித்யகரிகாலனை கொலை செய்தவர்கள் தண்டிக்கப் படவில்லை என்றுதான் கூற முடிகிறதே தவிர இவரது ஆட்சி காலத்தில் அதற்கான விசாரணை நடைபெறவில்லை என்று கூறமுடியவில்லை.  விசாரணை நடைபெற்று கொலையாளிகளை அடையாளம் காணமுடியாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.

வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்றால் கூட சொல்லலாம் போலும். ஆனால் உத்தம சோழர் நல்லவரா கெட்டவரா என்று என்னால் வரையறுக்க முடியவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். :)

Saturday, January 14, 2012

காந்தளூர் போர் ஏன் நிகழ்த்தப்பட்டது?

நான் blogs எழுதவதில் சிறந்தவன் அல்ல. இதுவே எனது முதல் பதிவு. எனவே ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் பொருத்தருளுங்கள். :)

நம்மில் பல பேருக்கு ராஜ ராஜ சோழன் ஒரு மிக பெரிய அரசன் என்பது தெரியும். ஆனால் அவர் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர் கொண்டார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. ராஜ ராஜ சோழன் தன் தந்தைக்கு பிறகு ஆட்சி கட்டிலில் ஏறியிருக்க வேண்டியவர். எனினும் சிம்மாசனத்தை தன் சிற்றபனுக்கு விட்டு கொடுத்து விட்டு 16  வருடங்கள் அமைதியாக இருந்தார். ஏன் விட்டு கொடுத்தார்? ஏன் சோழ சிம்மாசனத்தை தூக்கி எறிந்தார்? இவை எல்லாவற்றையும் நான் கூறி விட்டால் நீங்கள் பொன்னியின் செல்வனை படிக்க மாட்டீர்கள். எனினும் ஒரு சிறிய தகவலை கூறாவிட்டால் இந்த வலை பதிவு உங்களுக்கு புரியாது. 

சுந்தர சோழருக்கு இரண்டு புதல்வர்கள் : ஆதித்ய கரிகாலன் மற்றும் அருண் மொழி வர்மன் (ராஜ ராஜ சோழன்). இதை தவிர அவருக்கு மதுராந்தகன் என்ற தம்பியும் உண்டு. மதுராந்தகனுக்கும் சிம்மாசனத்தின் மேல் ஒரு கண் உண்டு. 

சுந்தர சோழர் மன்னராக இருந்த போதே பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் இலங்கையின் வட பகுதியையும்  சோழர்கள் கை பற்றி விட்டார்கள். சுந்தர சோழர் தன்னுடைய மரண படுக்கையில் இருக்கும் போது பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ஆதித்ய கரிகாலனை மர்மமான முறையில் கொலை செய்து விட்டார்கள். சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்துக்கு வர வேண்டியவன் இறந்து விட்ட நிலையில் அடுத்து பட்டத்துக்கு அருண் மொழியே வருவார் என்று மக்களால் எதிர் பார்க்கப்பட்ட போது சிம்மாசனம் வேண்டாம். என் சிற்றப்பனே ஆட்சி செய்யட்டும் என்று கூறி அருண் மொழி உடையார்குடியில் வசிக்க தொடங்கி விட்டார்.

உத்தம சோழன் நல்லவனா கெட்டவனா என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்சி காலத்தில் ஆதித்ய கரிகாலனை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்க படவில்லை என்றே வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த 16 வருடத்தில் அருண் மொழி வர்மர் தன் தமயனை கொன்றவர் யார் என்று விசாரிக்க தொடங்கினார். தன் அண்ணனை கொன்றவர்கள் தன் சிற்றப்பனின் ஆட்சியில் கொழிப்பதையும் கண்டார். தன் சிற்றப்பனிடம் சென்றார். இதை பற்றி நியாயம் கேட்டார். கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவரை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நானே சோழ நாட்டின் சக்கரவர்த்தி என்று பிரகடன படுத்தி கொண்டார்.

எவன் தன் அண்ணனை கொலை செய்தானோ அவன் தலையை ராஜ ராஜனால் கொய்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் அவர்களையும் அவர் குடும்பத்தாரையும் நாடு கடத்தினார் (இப்படி செய்ததற்கு அவர்கள் அந்தணர்கள் என்பதும் காரணமாக இருக்கலாம் என்று பாலகுமாரன் உடையாரில் எழுதி இருந்தார்). ஆனால் அதுவே அவர் முதற் போருக்கு வழி வகுக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் அப்படி செய்திருக்க மாட்டார். ஆம். நாடு கடத்தப்பட்ட பாண்டிய நாடு ஆபத்துதவிகள் ராஜ ராஜனையும் கொலை செய்ய துடித்தார்கள். காந்தளுரில் ஆட்கள் சேர்த்து போர் முறையை பயிற்றுவிக்க ஆரம்பித்தார்கள். 

நாடு கடத்தப்பட்டும் இவர்கள் திருந்தவில்லையே என்று ராஜ ராஜ சோழர் காந்தளூர் படையெடுப்பை நிகழ்த்தினார். காந்தளூர் அடித்து நொறுக்கப்பட்டது. 

உத்தம சோழன் பற்றி எனது அடுத்த வலை பதிவு இருக்க கூடும்..