Monday, March 10, 2014

அல்புகேர்க் – போர்ச்சுகீஸ் படைத்தலைவன்

நெடு நாட்களாகவே விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி ஒரு வலைப்பூ எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை பற்றி படிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சோழர்களை பற்றி மட்டுமே படித்து வந்ததால் அவர்களை பற்றி மட்டுமே எழுத முடிந்தது. அதற்கான உந்துதலும் இருந்து வந்தது. சில நாட்களுக்கு பிறகு ஹம்பி, ஹோஸ்பெட் செல்ல நேர்ந்த பொழுது அங்கு கண்ட காட்சிகள் நான் மறந்திருந்த விஜயநகர ஆவலை மீட்டது. அதன் தொடர்ச்சியாக “A forgotten Empire by Domingos Paes” என்னும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

 

முதலில் ஹக்கரையும் புக்கரையும் படித்த பிறகு கிருஷ்ணதேவராயரை பற்றி படிக்க பக்கங்களை பிரட்டிய பொழுதுதான் அல்புகேர்க்-கிருஷ்ணதேவராயர்-அடில் ஷா எனும் மூன்று முனை போட்டியை பற்றி படிக்க நேர்ந்தது. இந்த போட்டியை ஒரே வலைப்பூவில் முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. எனினும் முயற்சி செய்கிறேன். இந்த மும்முனை அரசியலுக்கு களமாக இருந்தது கோவா.

 

அல்புகேர்க் லூயிஸ் என்னும் போர்ச்சுகீசிய படைத்தலைவனுக்கு மாற்றாக இந்தியாவிற்கு வந்தார். முதலில் கோவாவை அடில் ஷாவிடமிருந்து பிடித்த அல்புபெர்க் விஜயநகரத்தின் உதவியுடன் மட்டும் தான் அதை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து தூது அனுப்பினார். எனினும் ராயர் கோவாவை பிடித்ததற்கு வாழ்த்துக்கள் மட்டும் கூறி கழுவிய மீனில் நழுவும் மீனாக இருந்து விட்டார்.

 

சிறிது நாட்களில் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா கை நழுவி மீண்டும் அடில் ஷாவிடம் போனது. அடில் ஷாவின் வளர்ச்சியை கண்ட ராயருக்கு சற்றே உதறியிருக்க வேண்டும். இந்நிலையில் அடில் ஷாவிற்கு உள்நாட்டு பிரச்சனைகள் வந்து விடவே அவரின் கவனம் அந்த பிரச்சினைகளை களைவதில் இருந்தது. இதை பயன்படுத்தி அல்புகேர்க் மீண்டும் கோவாவை தன் வசப்படுத்தினார்.

 

மிக சிறந்த குதிரைகள் தனது படையில் இருந்தால் அடில் ஷாவுடன் ஏற்படவிருக்கும் போர்களில் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த ராயருக்கு போர்சுகீசியரின் கோவா துறைமுகத்தின் வாயிலாக பரிகளை வரவழைப்பது நல்லது என்று உணர்ந்தார். அல்புகேர்க் கோட்டைக்கு விஜயநகரம் தூது அனுப்பியது. முதலில் சிறிது காலம் அடில் ஷாவுடன் நட்பை கடைபிடித்த அல்புகேர்க் பின்னர் ராயரை ஆதரிப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து விஜயநகரம் பக்கம் சாய்ந்தார்.

 

1514 ஆம் ஆண்டு விஜயநகரம் 20000 பவுண்டுகள் போர்ச்சுகீசியருக்கு செலுத்தும் ஒரு ஒப்பந்தத்தை முன்னிறுத்தியது. காரணம் என்னவென்றால், கோவா கடற்கரை வாயிலாக குதிரைகளை இறக்குமதி செய்யும் உரிமை தங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பதுதான். ஆனால் அல்புகேர்க் இந்த ஒப்பந்தத்தை மறுத்து விட்டார்.

 

ஆனால், வருடா வருடம் 30000 பவுண்டுகள் செலுத்தினால் குதிரைகள் மற்றும் போர்ச்சுகீசிய துருப்புகள் விஜய நகரத்திற்கு ஆதரவாக போரில் ஈடுபடும் என்னும் ஒப்பந்தத்தை முன் வைத்தார் அல்புகேர்க். இதே போன்று ஒரு ஒப்பந்தத்தை அடில் ஷாவிடமும் முன் வைத்திருந்தார் அல்புகேர்க். எனினும் அடில் ஷாவிடம் முன்னிறுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் அல்புகேர்க் 30000 பவுண்டுகள் கேட்கவில்லை. அதற்கு பதிலாக கோவாவிற்கு அருகில் இருக்கும் சிறிய நிலபரப்பை போர்சுகீசியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் பக்கம் இருந்து கொள்ளலாம் என்பதே அல்புகேர்க்கின் எண்ணம். எனினும் இதன் முடிவு தெரியும் முன்னரே அல்புகேர்க் மரணமடைந்தார்.

 

குறிப்பெடுக்க உதவியவை:

1)    http://en.wikipedia.org/wiki/Afonso_de_Albuquerque

      2)    A forgotten Empire (Vijayanagar): A contribution to the history of India by Domingos Paes