Monday, May 27, 2013

கிருமி கண்ட சோழன் - தொடர்ச்சி

வரலாற்றை சற்றே உற்று நோக்கினால் ராஜேந்திரனும் அவரது புதல்வர்களும் வைணவ நெறிகளை வெறுத்து ஒதுக்கியதாக வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே நமது பட்டியல் மேலும் சுருங்குகிறது. நமது முன் எஞ்சியிருப்பவர்கள் அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமன்  மற்றும் இரண்டாம் குலோத்துங்கன்.

இந்நால்வருள் அதி ராஜேந்திரனின் மரணத்தைப்பற்றி ஏற்கனவே ஒரு வலைப்பூ எழுதப்பட்டுள்ளது. அரியாசனத்தில் அமர்ந்து சில திங்கள்களே ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுக்கலவரங்கள் மிகுந்திருந்ததாகவும், அதை கீழை சளுக்க மன்னன் தனது படைகளுடன் வந்திருந்து அடக்கினான் என்றும் அதி ராஜேந்திரனை ஆட்சியில் அமர்த்தினான் எனவும் பில்ஹனர் கூறுகிறார்.

இந்த உள்நாட்டுக்கலவரங்கள் தனக்கு கிடைக்க வேண்டிய வேங்கி நாடு தனக்கு கிடைக்காததால் அநபாயன் (எ) முதலாம் குலோத்துங்கன் செய்த சூழ்ச்சியே என்று கூறப்படுகிறது. மேலும் அவன் மரணத்தை சுற்றியும் மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. கீழை சளுக்கன் தனது மைத்துனனை ஆட்சியில் அமர்த்திவிட்டு 6 மாதங்கள் சோழ நாட்டிலேயே தங்கியிருந்து கலவரங்கள் ஓய்ந்தவுடன் வேங்கி திரும்பினான் என்று கூறப்படுகிறது. அவன் அப்புறம் சென்ற சில நாட்களில் அதி ராஜேந்திரன் இறந்துபட்டான். இம்மரணம் உள்நாட்டுக்கலவரங்களால் ஏற்பட்டிருக்ககூடும் அல்லது அநபாயனின் சூழ்ச்சியால் நிகழ்ந்திருக்கலாம் அல்லது இயற்கையாகவே மரணம் சம்பவித்திருக்கலாம்.

உள்நாட்டு கலவரங்கள் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் இரண்டாக இருக்கலாம்.
ஒன்று, சோழ நாட்டுடன் தங்களை இணைத்துக்கொண்டு அரசனுக்கு கப்பம் செலுத்தி வந்த சிற்றசர்களுள் சில பேர் அரசனுடைய முடிவுகளிலோ அல்லது கொள்கைகளிலோ மாறுபட்டிருக்கலாம். அதனால் உள்நாட்டு கலகம் நிகழ்ந்திருக்கலாம்.

இரண்டு, மத நெறிகளில் மன்னன் கடைப்பிடித்த கொள்கைகள் காரணமாக இருக்கலாம். பன்நெடுங்காலம் கடந்த பின்பும் இந்த அவல நிலை தொடர்கிறது. மத நெறிகள் என்று பார்த்தோமானால் அக்காலகட்டத்தில் இருந்த மதங்கள் அல்லது நெறிகள் இரண்டே இரண்டு தான். சைவமும் வைணவமும். பௌத்தம் இருந்து வந்தாலும் பெரும்பான்மையை இழந்து சிறுபான்மையராய் இருந்து வந்த காலம் அது.

இரண்டாவது காரணத்தின் படி பார்த்தால், சைவர்களும் வைணவர்களும் கிளர்ச்சியுற்று உள்நாட்டுகலகம் நிகழ்ந்து, மன்னன் அதை அடக்க முன்வந்து ஒரு தலை பட்சமாய் நடந்திருந்து மற்றொரு தரப்பினிடம் எதிர்ப்பை சம்பாதித்திருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு, அத்தரப்பினர் மன்னனை சதியில் வீழ்த்தியிருக்கலாம்.

அல்ல இப்படியும் இருக்கலாம். இது ஒரு மித மிஞ்சிய கற்பனையாகக்கூட இருக்கலாம். தங்கள் தரப்பில் வாதாடிய மன்னர் இச்சமயம் மாண்டால் பழியை மற்றொரு தரப்பினர் மீது போட்டுவிட்டு அவர்களை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கலாம். அரசியலில் சூழ்ச்சிகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமில்லை. இதை சற்றே உற்று நோக்கினால், ராமானுஜர் சம்பவத்துடன் ஒற்றுப்போவது தெரியும்.

இதுவாக இருக்கலாம் என்பது என்னுடைய பார்வை. கவிகளும் ஆய்வாளர்களும் கல்வெட்டுகளும் நமக்கு உண்மையை தெளிவாக உரைக்கவில்லை. எனவே நமது கற்பனையை சற்றே தூண்டிவிட வேண்டியதிருக்கிறது.

எதைப்பற்றி வேண்டுமானால் தவறாக எழுதலாம். ஆனால் வரலாற்றை பற்றி எழுதும் பொது ஒருவன் கவனத்துடன் இருப்பது நல்லது. புகழ்ப்பெற்ற மன்னர்களை மக்கள் முன் குற்றவாளிகளாக முன் நிறுத்தமுடியாது. இவ்வலைப்பூவில் கூறப்பட்டிருப்பது எனது எண்ணங்களே ஆகும். வாசகர்கள் மனம் கோணாதபடி எழுத முயற்சிக்கிறேன்.

கிருமி கண்ட சோழன் குலோத்துங்கனாக இருக்குமோ என்பதை பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...

Wednesday, May 15, 2013

கிருமி கண்ட சோழன் - ஒரு எளியவனின் பார்வையில்

கிருமி கண்ட சோழன் என்பது இன்று வரை யார் என்று தெளிவான ஒரு முடிவிற்கு வரலாற்று பேராசிரியர்களால் வரவியலவில்லை. எனினும் இப்பெயர்க்கு பின்னால் நடைப்பெற்ற சம்பவங்கள் இலை மறை காயாக ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றை பொருத்தவரை மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் என்று நாம் மூவேந்தர்களையும் பல்லவர்களையும் கூறலாம். இவற்றுள், பாண்டியர்களும் பல்லவர்களும் பல மதங்களை கடைப்பிடித்திருக்கின்றனர்.

களப்பிரர்களின் ஆட்சி முடிவுற்றதை அடுத்து தமிழகத்தை பல்லவர்களும் பாண்டியர்களும் ஆட்சி புரியத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் இவ்விருவரும் சமண மற்றும் பெளத்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர். மலைகளில் எஞ்சி நிற்கும் சில ஓவியங்களும் சிற்சில சிற்பங்களுமே இதற்க்கு அத்தாட்சியாக எஞ்சியிருக்கின்றன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இந்த காலகட்டத்தில் இருந்திருக்கின்றனர். அவர்கள் முறையே சைவர்கள், வைணவர்கள் என்கிறோம் இன்றுவரை. சைவமும் வைணவமும் இருவேறாகத் தழைத்தோங்கின.

இவர்கள் தத்தம் நெறிகளில் இருக்கும் சிறந்த கொள்கைகளை மன்னர்களுக்கும் அவர்தம் மக்களுக்கும் எடுத்துரைத்து சைவ நெறிகளுக்கும் வைணவ நெறிகளுக்கும் மாற்றினர்.

பாண்டியர்களும் பல்லவர்களும் சமணம் மற்றும் பௌத்த நெறிகளை பின்பற்றினர். சேரர்கள் இதற்கு ஒரு படி மேல் சென்றுவிட்டனர் என்றே கூறலாம். ஏன் என்றால் பௌத்தமும் சமணமும் பரத கண்டத்தில் உதித்த மதங்கள். ஆனால் சேர மன்னர்களுள் ஒருவன் முஸ்லிம் மதத்தை தழுவியதாக வரலாறு கூறுகிறது.

ஆனால் சோழர்கள் மட்டும் விதிவிலக்கு. ஆம். இடைக்கால சோழர்கள் ஆட்சியை நிறுவிய விஜயாலயன் முதல் இறுதியாக ஆண்ட மூன்றாம் ராஜேந்திரன் வரை சைவ நெறியையே கடைப்பிடித்தனர்.

பொதுவாக மன்னர்கள் எம்மதத்தை கடைப்பிடிக்கிறானோ மக்களும் அம்மதத்தையே கடைப்பிடிப்பர். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

ஆயினும் மன்னர்கள் தம்மதத்தை மக்கள் மீது திணிப்பவர்களல்ல. எனினும் சில மன்னர்கள் இதற்கு விதிவிலக்கு.

கிருமி கண்ட சோழன் சம்பவத்திற்கு வருவோம். சோழர்கள் சைவ நெறியை கடைப்பிடித்தாலும் பிற மதங்களை வெறுத்தொதுக்கவில்லை.சோழ நாட்டில்  வைணவமும், பௌத்தமும் கடைப்பிடிக்கப்பட்டது. பெளத்த விகாரைகளும்  வைணவ விண்ணகரங்களும் சோழ மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டன.

எனினும் ஆங்காங்கே சமய பூசல்கள் நடைபெற்றிருக்ககூடும்.

கிருமி கண்ட சோழன் என்னும் பெயருக்கு பின்னால் இருக்கும் சம்பவம் இதுதான். வைணவ மத நெறிகளை மக்களிடையே பரப்பி அதில் இமாலய வெற்றி கண்டவர் ராமானுஜ சுவாமிகள். இவர் ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு வைணவ நெறிகளை பரப்பி வந்தார்.

வைணவம் எதிர்பார்த்ததை விட அசுர வளர்ச்சியை அடையத்தொடங்க சைவ மதத்தை சார்ந்தவர்கள் சோழ மன்னனிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தனர். ராமானுஜரை அரசவைக்கு வரவழைத்து சைவ வல்லுனர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுத்தி சைவமே பெரியது என்று கூறிவிடலாம் என்று முடிவு செய்திட்டு, ராமானுஜருக்கு தகவலனுப்ப, ராமானுஜரின் சீடர்கள் இதில் ஏதேனும் திட்டமிருக்கலாம் என்று நினைத்து, ராமானுஜரிடம் சென்றிட வேண்டாமென்று கூறுகின்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட ராமானுஜர் ஹொய்சள (இன்றைய கர்நாடக மாநிலம்) நாட்டுக்கு செல்கிறார். இதையடுத்து, கூரத்தாழ்வார், தாமே ராமானுஜர் என்றுரைத்து அரசவையில் தர்க்கத்தில் ஈடுபடுகிறார். திருமாலே உயர்ந்தவன் என்று சைவப்பெரியோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கிறார். எனினும் அவருடைய கண்களும் அவருடன் வந்த பெரிய நம்பி அவர்களுடைய கண்களும் பறிக்கபடுகின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து, இதற்கு பின்னால் இருந்தவன் கிருமியால் ஆட்கொள்ளப்பட்டு மாள்கிறான்.

முதலில் கிருமி கண்ட சோழன் என்பது சோழ மன்னனை குறிக்கிறதா அல்ல சோழ நாட்டில் இருந்த சிற்றரசர்களுள் ஒருவனை குறிக்கிறதா என்பதே தெளிவுபடுத்தப்படவில்லை.

ராமானுஜர் வாழ்ந்த காலம் 1017 முதல் 1137 வரை. அதாவது 120 ஆண்டுகள். இந்த 120 ஆண்டுகளுக்குள், சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கள் - முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன்  ஆகியோர் ஆவர். இவர்களுள் யார் அந்த கிருமி கண்ட சோழனாக இருக்கக்கூடும் என்று பார்த்தால் எஞ்சுவது அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோர் ஆவர்.

தொடரும்....