Saturday, January 26, 2013

தில்லை கோவிலுடன் தென்னிந்திய அரசாங்கங்களின் பிணைப்பு - பகுதி 1

ஒரு சிறிய முன்னோட்டம் 

தில்லை சிற்சபேசனின் இருப்பிடம். சைவர்களின் பிரதான வழிப்பாட்டுத்தலம். சென்னையில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ளது. இதைப்போன்று தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி இந்த வலைப்பதிவை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.

இந்த வலைப்பதிவு மட்டுமில்லாது இன்னும் 2 அல்லது 3 வலைப்பதிவுகளில் இக்கோயில் தென்னிந்திய அரசாங்கங்களுடன் எப்படி பிணைந்திருந்தது என்பதை எழுதவிருக்கிறேன். மிகவும் முக்கியமான நிகழ்வுகளை அதாவது என் மனதில் அழியாத வண்ணம் பதிந்திருக்கும் நிகழ்வுகளை முதலில் எழுதிவிடுகிறேன். இது சம்பந்தப்பட்ட வலைப்பதிவுகள் 2 அல்லது 3 உடன் நின்றுவிடும் என்பது என்னுடைய தோராயமே. இது மேலும் நீளும் என்றே நினைக்கிறேன்.

தில்லை நடராஜப்பெருமான் 


சோழர்களின் தில்லை பிணைப்பு

இக்கோயில் அநேகமாக மூவேந்தர்களும் போற்றுதற்குரிய தலமாக இருப்பினும் சோழர்களே இச்சைவத்திருக்கோயிலின் வரலாற்றில் பிரதான இடம் வகிக்கிறார்கள்  என்றே கூறலாம். இதற்கு முழுமுதற்காரணம் சோழர்களின் முடிசூட்டுவிழா சிற்றம்பலத்தில் நடராஜரின் முன்னேதான் நடைபெறும் என்பதே ஆகும்.

யாருக்கும் வணங்காமுடியாக விளங்கும் சோழ நாட்டரசன் தில்லை வாழ் அந்தணர்களுக்கு முன் தலை வணங்கி தன்னுடைய முடி (கிரீடம் ) தரிப்பதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்த கோயிலுடன் மிகப்பெரும் அளவில் சம்பந்தப்பட்ட சோழ அரசர்கள் முதலாம் பராந்தகன், இரண்டாம் குலோத்துங்கன். இவர்களைத்தவிர சோழன் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் இரு மாமன்னர்கள் - முதலாம் ராஜ ராஜன்  மற்றும் முதலாம் ராஜேந்திரன்.

முதலாம் பராந்தகன்

சோழ நாட்டை ஒரு உன்னத நிலைக்கு எடுத்துச்செல்ல முயன்று அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றவர் முதலாம் பராந்தகன். இவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ வள நாடு தெற்க்கே பாண்டியர்களின் ராஜ்ஜியத்தையும் வடக்கே காஞ்சிபுரத்தையும் எல்லையாக கொண்டிருந்தது. தன வாழ்நாளில் பெரிதும் சிறிதுமாக பல போர்களை இவர் கண்டிருப்பினும் கோயில் திருப்பணிகளை மறந்துவிடவில்லை. இப்பராந்தகன்தான்  தில்லை அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தவன். இச்செய்தி ஆனைமங்கல செப்பேடுகளிலும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் காணப்படுவதாக முனைவர் சதாசிவ பண்டாரத்தார் தனது பிற்காலச் சோழர் புத்தகத்தில் எடுத்துரைத்துள்ளார்.

பொன்னம்பலம் 


மேலும்
                வெங்கோல் வேந்தன் தென்னாடும்மீழமும் கொண்டதிறற்
                செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன்
                பொன்னணிந்த 
                அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலம் 
என்று இவரது திருமகனார் கண்டராதித்த சோழன் தான் பாடிய திருவிசைப்பாவில் பொன் வேய்ந்த சிற்றம்பலம் பற்றி இவ்வாறு விளித்துள்ளார்.

முதலாம் ராஜராஜன்:

சோழன் என்று சொன்னாலே நம் மனதினில் தோன்றும்  சில பெயர்களுள் ராஜ ராஜ சோழனும் ஒருவன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தன்னை ஆட்சிக்கட்டிலில் பார்க்க விரும்பிய போதிலும் தனது சிறிய தந்தையாரான மதுராந்தகருக்கு அரியணையேறும் அவா இருந்ததாலும் உள்நாட்டுக்கலகத்தை தவிர்க்க வேண்டியும்  16 வருடங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது காலத்தை கழித்தவர்.

உத்தம சோழரின் ஆட்சிக்காலத்தில்தான்  தில்லை மூவாயிரமவர் கை சற்று ஓங்கியது என்று கூறலாம். சைவத்தின் மீது அளவற்ற பற்று (சில அரசர்கள் கொண்டிருந்தது வெறி என்றும் கூறலாம்)  கொண்டவர்கள் சோழர்கள். அப்பேர்பட்டவர்களின் வழிவந்த உத்தம சோழரின் காலத்தில்தான் நடராஜப்பெருமானின் புகழ்பாடும் திருமுறை, தில்லை கோயிலில் கரையான் அரிக்க கிடந்தது. இவ்விடயம் உத்தமருக்கு தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.

இத்திருமுறையை கரையான்களிடமிருந்தும் தில்லை அந்தணர்களிடமுமிருந்தும் மீட்டெடுத்து அதை தொகுத்த பெருமை ராஜ ராஜனையும்  நம்பியாண்டார் நம்பியையுமே சேரும். இன்றளவும் கோயிலில் திருமுறை காட்டிய விநாயகர் திருவுருவத்தை நாம் காணலாம். மேற்கு வாயில் வழியாக (வாயில் என்பது கோபுரம் என்கின்ற தொனியில் இங்கு குறிப்பிடப்படவில்லை) உள்ளே நுழையும் போது இவரை காணலாம். இவ்விநாயகரே நம்பியாண்டார் நம்பிக்கு திருமுறை இருக்குமிடத்தை சுட்டிக்காட்டினார்.

இக்கோயிலுடன் ராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோர் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதைப்பற்றியும்  மேற்கு கோபுரத்தைப்பற்றியும்  சில தகவல்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

                                                                                                                                       தொடரும்.....