Wednesday, February 27, 2013

சங்கதாரா - ஒரு சிறிய விமர்சனம்

சமீபமாக சங்கதாரா என்னும் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் ஆதித்ய கரிகாலன் கொலை பற்றியது. வரலாற்றில் சில மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. அவற்றுள் ஆதித்ய கரிகாலன் கொலையும் ஒன்று. இக்கொலையை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் ஆசிரியர் நமக்கு வழங்கியுள்ளார். இப்புத்தகத்திற்கு ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளது அவருடைய எழுத்து நடையில் தெரிகிறது.

இப்புத்தகத்திற்க்காக  ஆசிரியர் பல சான்றுகள் வைத்துள்ளதாக கூறியுள்ளார். எனினும் சரித்திரத்தில் நீங்கா புகழ்ப்பெற்ற ஒரு மன்னனை சுற்றி கதைக்களம் அமைந்திருக்கின்றபோது எழுத்தாளர் சிறிது கவனத்தை கடைப்பிடிதிருக்கலாமோ என்றே எண்ணத்தோன்றுகிறது,

இப்புத்தகத்தில் அருள்மொழிவர்மர் (ராஜ ராஜ சோழன்) கி .பி 956 ஆம் வருடம் பிறந்ததாக ஒரு தகவல் தரப்பட்டுள்ளது. இதுதான் என்னை இந்த வலைப்பதிவு எழுதத்தூண்டியது. ஒரு வருடம் தானே, அதில் என்ன குறை கண்டுவிட்டீர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆண்டுதான் புத்தகத்தின் ஆணிவேர். எனவேதான் அதைக்குறித்து எனது கருத்துகளை தங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.

ராஜ ராஜ சோழன் கி.பி 956 ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஆசிரியர் எடுத்துரைப்பதை நாம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். ராஜ ராஜ சோழன் கி.பி 986 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறார். அப்படி என்றால் அவர் தனது 30 ஆம் அகவையில் ஆட்சிக்கு வருகிறார். ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 986-1012 என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1014 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் இறக்கிறார். அதாவது இந்த புத்தகத்தின் படி ராஜ ராஜ சோழன் தனது 58 ஆம் வயதில் சிவனடியை அடைகிறார்.

இது வரை வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் ஏற்ப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன.

ராஜ ராஜ சோழரின் திருக்குமரனான ராஜேந்திர சோழன் கி.பி 1012 ஆம் ஆண்டு சோழ சிம்மாசனத்தில் அமர்கிறார். தமிழ்நாட்டின் பொற்காலம் என்று வர்ணிக்கக்கூடிய ஆட்சியை கி.பி 1044 ஆம் ஆண்டு வரை அளிக்கிறார். இவர் இறக்கும் பொழுது இவருடைய அகவை 82 என கல்வெட்டுகளில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கி.பி 1044 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழரின் வயது 82 என்றால் கி.பி 1014 இல் அதாவது ராஜ ராஜ சோழர் இறக்கும் பொழுது ராஜேந்திர சோழரின் வயது சரியாக 52.

இரு பத்திகளுக்கு முன்னர் தான் ராஜ ராஜ சோழரின் வயதை யாம் கூறியிருந்தோம். அதாவது தனது 58 ஆம் வயதில் அவர் சிவனடியை அடைந்ததாக கூறியிருந்தேன். அதே வருடத்தில் ராஜேந்திர சோழரின் வயது 52. அதாவது தந்தைக்கும் மகனுக்கும் வெறும் 6 வயது வித்தியாசம். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

அடுத்த புத்தகத்தில் இதற்கான விடையை அவர் அளிக்கக்கூடும். எனினும் வருடம் தப்பாக குறிப்பிடப்பட்டுள்ளம்மையால் இப்புத்தகத்தின் வாயிலாக ஆசிரியர் கூறவரும் அனைத்துமே சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

ஆனால் புத்தகம் நல்ல விறுவிறுப்பாக உள்ளது என்பது ஒத்துக்கொள்ளபடவேண்டிய உண்மை. வாசகர்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்பதி எனக்கு எந்த ஐயமும் இல்லை.

வாசகர்களின் கருத்தை எதிர்நோக்கி ....