Saturday, August 18, 2012

மற்றுமொரு மரணம்

வரலாற்றில் நிகழ்த்தப்படும் சில இறப்புகள் அதன் பாதையை மாற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட இறப்புகளை இறவாபுகழ்ப்பெற்ற சோழகுலமும் பெற்றிருப்பது திண்ணம். அப்பேர்பட்ட ஒரு இறப்பைப்பற்றியே இந்தப் பதிவு.

அது அதிராஜேந்திர சோழனுடய இறப்பு ஆகும்.

அவனுடைய இறப்பைப்பற்றிப் பார்க்கும் முன் அவனைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் வாசிப்பிற்க்கு அவசியமென்று நினைக்கிறேன்.

அதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு சோழ நாட்டின் பேரரசனாய் முடிசூட்டபெற்றிருக்கிறான். இவன் சில மாதங்களே ஆட்சிப்பீடத்தில் இருந்தது  இவனது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இவனது மரணம் இயற்கையான ஒன்றா அல்லது கொலையா என்பதை பற்றியே இந்த பதிவு.

இவனுடைய மரணம் கொலையாக இருக்குமெனில் கொலைக்கான காரணக்கூறுகள் இரண்டாக இருக்கலாம்.

1) ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப்பேரன் விஷ்ணுவர்தன் (அ ) குலோத்துங்க சோழன் I. இவனுடைய தந்தையார் வேங்கி நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு பின் வேங்கி நாடு இவனையே ஆட்சிக்கட்டிலில் கண்டிருக்கவேண்டும். எனினும்  இவனது மாமன்களாகிய இரண்டாம் ராஜேந்திர சோழன் மற்றும்  வீரராஜேந்திர சோழன் (1063-1070) விஷ்ணுவர்தனின் சிற்றப்பனாகிய விசயாதித்தனை வேங்கி நாட்டில் ஆதரித்து வந்தனர்.

எனவே விஷ்ணுவர்தன் ஆட்சிக்கட்டிலில் அமரவில்லை என்பது ஒருதலை. இக்காரணங்களால் இவனுக்கும் சோழ நாட்டின் அரச குலத்தினருக்கும் பகைமை ஏற்பட்டிருக்கக்கூடும்.

எனினும் விசயாதித்தன் தனது மகனை தனது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே இழந்துவிட்டமையாலும் அவனுக்கு வேறு வாரிசுகள் இல்லாத காரணத்தினாலும் இப்பகைமை நாளுக்கு நாள் குறைந்திருக்க வேண்டும்.

ஆகவே விஷ்ணுவர்தன் இவன் மரணத்திற்கு காரணமில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுகிறது.

மேலும் இவனது இளமைகாலத்தில் இவன் சோழ நாடு மேற்கொண்ட சில போர்களில் இவன் கலந்து கொண்டிருப்பதும் சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திரம் நூலில் கூறப்பட்டிருக்கிறது.

மேலைச் சளுக்க நாட்டை சேர்ந்த பில்ஹனர் எழுதிய நூலில் அதிராஜேந்திர சோழன் உள்நாட்டு கலகங்களால் கொல்லப்பட்டான் என்று கூறுவதிலிருந்து விஷ்ணுவர்தனுக்கும் அதிராஜேந்திரனுக்கும் எவ்விதப்பகைமையும் இல்லை என்பது திண்ணம். நிற்க.

சோணாட்டிலிருந்து பன்னூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு புலவரின் நூலில் அதுவும் தன் மன்னனின் புகழ்ப்பாடும் நூலில் கூறும் கருத்துக்கள் சில மிகைப்படுத்தப்பட்டோ அல்லது திரித்தோ கூறப்பட்டிருக்கலாம். அது போன்றொன்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். எனினும் அவர் விஷ்ணுவர்தனை இதில் சம்பந்தப்படுத்தாதலிருந்து அவனுக்கு இம்மரணத்தில் எவ்விதப்பங்குமில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.


2) உள்நாட்டுக்கலகம் - அதன் காரணங்கள் அடுத்த வலைப்பதிவில்.

 வேலைப்பளுவின் காரணமாக என்னுடைய இந்த வலைப்பதிவு மிகுந்த தாமதத்திற்குப்பின்  எழுதுகிறேன்.

இந்த வலைபதிவுக்காக நான் படித்த புத்தகங்கள்.

1) பிற்காலச் சோழர் சரித்திரம் - T V. சதாசிவ பண்டாரத்தார்.
2) கடல் புறா - சாண்டில்யன்
3) விக்கிபீடியா வலைத்தளம்