Sunday, July 21, 2013

சோழ நாட்டில் கல்வி

இது வரை எனது பதிவுகளில் சோழ அரசர்களை பற்றியும் சோழ நாடு மேற்கொண்ட போர்களை பற்றி எழுதியுள்ளேன். அப்பதிவுகளிளிருந்து சற்றே விலகிய பதிவாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம். இந்த பதிவில் சோழ நாட்டில் மக்கள் எவ்வாறு தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொண்டார்கள் என்பதை பற்றியாகும். இதற்கு நான் பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்பதை ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டுவிடுகிறேன். இந்த பதிவிற்க்கென்று நான் படித்தது நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் மட்டுமே.

இன்றைய நாட்களில் இருப்பது போல் எந்திரத்தனமான, முட்டாள்தனமான கல்வி முறைகள் அன்றைய நாட்களில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அனைத்து வகையான கல்விகளையும் அனைத்து பிரிவு மக்களும் படித்திருக்க இயலாது. சாதி மற்றும் வர்ணங்கள் வாரியாக மக்கள் வகைப்படுத்தப்பட்டதால் இது சாத்தியமாகியிருக்காது. உதாரணமாக அந்தணர்கள் வேதங்கள் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பார்கள். மறவர்கள் போர்கலைகளில் ஆர்வம் செலுத்துவார்கள். இதை பற்றி சுருக்கமாக காண்போம்.

கல்வெட்டுகளில் காணப்படும் வட்டெழுத்துகளில் சில தவறுகளும், வட்டார சொலவடைகளும், கல்வெட்டு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மொழிப்புலமை இருந்திருக்காது என்பதை தெளிவுப்படுத்துகிறது. அரசரின் ஆணைகளை ஓலையில் எழுதுபவரான திருமந்திர ஒலைநாயகம் கல்வெட்டு பணியில் ஈடுபடுபவர்களை விட அதிகம் கற்றிருப்பார். இன்னும் சொல்ல போனால் அவருக்கு அதிகாரிகள் பிரயோகிக்க கூடிய அனைத்து சொற்களும் அதற்கான அர்த்தங்களும் தெரிந்திருக்கும். மேலும் இவர் அரசரின் வாய் வழி உத்தரவுகளை ஓலையில் எழுதுபவர் என்பதால் மிகவும் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்திருக்கும். கவனம் சிதறாமல், அதே சமயம் மிக வேகமாக எழுதுபவராக இருக்க வேண்டியதிருக்கும்.

அந்தணர்கள் வழி வழியாக ஆலயங்களில் பூசைகளை மேற்கொள்பவர்களாக இருந்ததனால் அவர்கள் வேதங்களையும் பூசனை முறைகளையும் கற்றறிந்து இருப்பார்கள். இதைப்பற்றி கற்க அவர்கள் நிறுவிய பாட சாலைகளே மடங்கள் ஆகும். மடங்களுக்கு அரசர்களும், படைத்தலைவர்களும், ஆளுங்கனத்தார்களும் நிவேதங்கள் அளித்திருப்பார்கள். இது மடங்களுக்கு மட்டுமல்ல, விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும் பொருந்தும். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைய அரசாங்கம் அளிக்கும் SUBSIDYயை போன்றதாகும்.

எனினும் சில அந்தணர்கள் அரசர்களுக்கு மிகவும் நம்பகமான பணியில் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக அநிருத்த பிரம்மராயர் சுந்தர சோழர் முதல் முதலாம் ராஜராஜர் வரை பிரம்மராயராக இருந்திருக்கிறார். அதே போல் அருன்மொழிப்பட்டன் என்பவர் ராஜேந்திர சோழருக்கு பிரம்மராயராக இருந்துள்ளார். எனவே அந்தணர்கள் விரும்பினால் அவர்களுக்கு அனைத்து வகையான கல்விகளும் அளிக்கப்படும் சூழ்நிலை அப்போது இருந்திருக்க வேண்டும்.

ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று ராஜராஜசதுர்வேதிமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஒரு கல்விக்கூடத்திற்கு அளிக்கப்பட நிவந்தங்களை கூறுகிறது. நீலகண்ட சாஸ்திரி இதை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். (பக்கம்: 630 - ஆங்கிலம்) .  மடங்களில் மீமாம்சம், வியாகர்ணம், ரூபவதாரங்களும், வேதங்களும் கற்றுக்கொடுக்கப்படுவதாக கல்வெட்டு கூறுகிறது. மீமாம்சம் என்பது வேத உபநிடந்தங்களில் ஒன்றாகும். ரூபவதாரம் என்பது சமஸ்கிருத மொழியின் அடிப்படை இலக்கணமாகும்.


இதேப்போன்று வீரராஜேந்திரர், விக்கிரம சோழர், இரண்டாம் குலோத்துங்கர் ஆகியோர் நிவேதங்கள் அளித்திருப்பதாக தெரிகிறது.

வீரர்கள் பெரும்பாலும் போர்க்கலைகளை அதற்கென்று நிறுவப்பட்ட பாடசாலைகளில் கற்றிருக்க வேண்டும். காந்தளூர் பாடசாலை அதைப்போன்றதொரு பாடசாலையே.  மேலும் வீரர்கள் பல வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப்ப பயிற்சிகள் அளிக்கபட்டிருக்க வேண்டும். உதாரணமாக வலங்கை இடங்கை வீரர்களை கூறலாம்.

அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் புத்தகங்களில்  மற்றும் சினிமாவில் கூற/காண படுவதைப்போல் அதற்கென்று பிரத்யேகமாக நிறுவப்பட்ட சாலைகளில் படித்திருக்கலாம். அனுமானங்களில்தான் வரலாற்றை சித்தரிக்க வேண்டியுள்ளது. :)

எனினும் பெரும்பாலான பாடசாலைகள் சமஸ்கிருதம் கற்றுக்கொடுப்பவை என்பது நமக்கு தெரிய வருகிறது. தமிழ் பாடசாலைகள் எதுவும் இருந்திருக்கவில்லையா, இல்லையெனின் தமிழ் எவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டது என்பது கிட்டவில்லை. இது வருத்தத்திற்குரிய விடயம்.

ராஜேந்திர சோழர் மற்றும் அவரை தொடர்ந்து அரசாட்சி புரிந்தவர்கள் கொடுத்த நிவந்தங்கள் பற்றி மற்றொரு வலைப்பதிவில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.






Tuesday, July 9, 2013

கலிங்கத்துப்பரணி - ஒரு அறிமுகம்

வரலாறு சம்பந்தமான புத்தகங்களில் பிரதானமானதாக இருப்பது அன்றும் இன்றும் என்றும் பொன்னியின் செல்வனே.பொன்னியின் செல்வன் படித்து முடித்தவர்கள் வழக்கமாக சில காலம் வரலாறு சம்பந்தமான நூல்களில் அடுத்து என்ன படிப்பது என்று திணறுவதுண்டு. ஆம். எனக்கும் அந்த திணறல் ஏற்ப்பட்டது. அந்த சமயத்தில் தான் கடல் புறா கையில் சிக்கியது. சாண்டில்யனின் அவர்களின் கை வண்ணத்தில் உருவான மிகச்சிறந்த புத்தகம். அதிலும் முதல் பாகம் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாத ஒன்று.

அப்புத்தகத்தை நம் திரைக்கலைஞர்கள்  ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. முதல் பாகத்தில் தோன்றும் அநபாய சோழன் நம்மை கவர்ந்திழுக்க கூடிய வகையில் உருவாக்கி இருப்பார். இப்படியே எழுதி கொண்டு போனால் அது கடல் புறா பற்றிய விமர்சனம் போல் ஆகிவிடும். சிறுவனாகிய எனக்கு அந்த தகுதி கிட்டிவிட்டதாக கருதவில்லை. விடயத்திற்கு வருவோம். அந்த அநபாயன் தான் சோழ நாடு அரசனில்லாமல் தவித்த போது சோழ நாட்டை பிற மன்னர்கள் கவராமல் அரியணை ஏறி காப்பாற்றியவன். ஆம். அநபாயனே முதலாம் குலோத்துங்கன் ஆவான். இதைப்பற்றி ஏற்கனவே ஒரு சில வலைப்பதிவுகள் எழுதி விட்டேன்.

சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர்கள் ராஜ ராஜனும் ராஜேந்திரனுமே. முதலாம் குலோத்துங்கனும் அவர்களுக்கு நிகராக சோழ நாட்டை ஆண்டவன். சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனுடைய ஆட்சி காலத்தில் கவிஞர் சயங்கொண்டார் அவர்களால் அரங்கேற்றப்பெற்றதே கலிங்கத்துப்பரணி.

குலோத்துங்கன் தனது ஆட்சி காலத்தில் புரிந்த அரும் பெரும் சாதனைகளுள் ஒன்றாக தென் கலிங்கத்துடன் போரிட்டு அந்நாட்டை சோழ வள நாடுடன் இணைத்தமையை குறிப்பிடலாம். இப்போரை பற்றியும் அப்போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் குலோத்துங்கனின் அரசவைப்புலவர் ஜெயங்கொண்டார் இயற்றியதே கலிங்கத்துப்பரணி.

பரணி என்பது போர்க்களங்களில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றியடைபவர்களை புகழ்ந்து பாடுவதாகும். இதை நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சமீபமாக அப்புத்தகத்தின் பிரதி ஒன்று நண்பன் மூலம் கிடைத்தது.

புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

போர் பகுதி இன்னும் படிக்கவில்லை. இது வரை படித்ததில் குலோத்துங்கன் பெருமையே போற்றப்படுகிறது. படித்த வரை எனக்கு பிடித்த வரிகளை கீழே எழுதியுள்ளேன்.

                    "பனி ஆழி உலகு அனைத்தும் 
                     பரந்த கலி இருள் நீங்க 
                     தனி ஆழி தனை நடத்தும் 
                     சய துங்கர் வாழ்க"

பொருள்(நான் புரிந்து கொண்டது):
பனி சூழ்ந்த உலகத்தில் எதிர் வரும் பொருட்கள் எப்படி ஒருவனின் கண்ணுக்கு புலப்படாதோ அது போல் கலி சூழும் உலகத்தில் நாளை என்ன நடக்கும் என்று புலப்படாது.

எளிமையாக கூற வேண்டும் என்றால் சோழ நாடு உள்நாட்டு கலகத்தாலும், சிற்றரசர்களின் புரட்சியாலும், எதிரிகளின் படைகளாலும் சூழப்பட்டு எதிர்வருவது என்னவென்று தெரியாமல் தவிக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருளை நீக்கி, சூரியனாய், சுடர் விடும் விளக்காய் வருகிறான் குலோத்துங்கன்.

தொடரும்....