Tuesday, November 13, 2012

வேங்கி நாட்டு அரசியல் சூழல்

இப்பதிவு எதைப்பற்றியது என்பது தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

சோழர்களுடனான கீழை சாளுக்கியத்தின் உறவு வீரராஜேந்திரனின் காலம் வரை நீடித்தது. ஆனால் இந்த உறவில் மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை ராஜேந்திர சோழரின் காலத்தில் நிலவியது. அதைப்பற்றியே இப்பதிவில் காணவிருக்கிறோம். இதையும் இரண்டு   பகுதிகளாக பிரித்து எழுதுவதே உத்தமம் என்று நினைக்கிறேன்.

அதைப்பற்றி காணும் முன்னர் ஒரு சிறிய அறிமுகம் வாசகர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன்.

வேங்கி நாடென்பது சாளுக்கிய நாட்டின் ஒரு சுதந்திர பகுதியாகும். அதாவது சாளுக்கிய நாடு மேலை சாளுக்கியம் என்றும் கீழை சாளுக்கியம் என்றும் பிரிந்திருந்தது.இதில் வேங்கி நாடே கீழை சாளுக்கியம் என்றறியப்படுகிறது.

சோழர்களின் அரசர்களுள் மங்காப்புகழ்ப்பெற்ற ராஜ ராஜ சோழன் கீழை சாளுக்கியம் மேலை சாளுக்கியதுடன் இணைந்துவிடக்கூடாது என்பதற்க்காக கீழை சாளுக்கியத்தை அச்சமயத்தில் ஆண்ட விமலாதித்தனுக்கு தனது மகளான குந்தவை தேவியை மணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் கீழை சாளுக்கியம் மேலை சாளுக்கியருடன் இணைய மாட்டாமல் பார்த்துக்கொண்டனர் சோழர்கள்.

ராஜ ராஜரின் தந்திரத்தை பார்த்த மேலை சாளுக்கியத்தின் மன்னன் தனது மகளையும் கீழை சாளுக்கிய மன்னனுக்கு மணமுடித்து சோழர்களுடன் கீழை சாளுக்கியம் முற்றிலும் இணையாத வண்ணம் பார்த்துக்கொண்டான்.

ராஜ ராஜரின் காலத்தில் தொடங்கிய இவ்வுறவு ராஜேந்திரரின் காலத்திலும் தொடர்ந்தது. ராஜேந்திர சோழன் தனது மகளான அம்மங்கை தேவியை விமலாதித்தன் மகனான ராஜ ராஜ நரேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். இதைப்பற்றி மேலும் தெளிவு பெற ஒரு படிநிலை வரைவுப்படம் அவசியமாகிறது.




மேலே உள்ள வரைவு படம் வாசகர்களுக்கு சற்றே ஒரு தெளிவை ஏற்ப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் இறக்கவே அவனுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்வது யார் என்று பிரளயம் உருவானது. அதாவது வயதில் மூத்தவனான நரேந்திரனுக்கே அரியாசனம் என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் விஜயாதித்தனுக்கே என்றும்  உரிமை கோரினர். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் சோழர்களுக்கும் மேலை சளுக்கியர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட மறைமுகப்போர்.

விஜயாதித்தன் ஆட்சிக்கட்டிலில் ஏறினால் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டனர் மேலை சாளுக்கியர்கள். நரேந்திரன் மன்னனானால் மேலை சாளுக்கியத்தின் கொட்டத்தை அடக்க எளிதாக இருக்கும் என்று சோழர்கள் நினைத்தனர்.

இறுதியில் சோழர்கள் கை ஓங்கியது. நரேந்திரன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தான். ஆனால் விவகாரம் இத்துடன் நின்றுவிடவில்லை. அதைப்பற்றிய விவரங்கள் அடுத்த பகுதியில்.







No comments:

Post a Comment