Tuesday, December 31, 2013

ஜல தீபம் – முதல் பாகம் ஒரு பார்வை

இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சோழர்களைப்பற்றி மட்டுமே எழுதுவது. மேலும் என்னுடைய மற்ற பதிவுகளை விட புத்தகங்களை பற்றி நான் எழுதுபவை பலர் பார்க்கின்றனர் என்பதை எனது வலைப்பூவின் வரத்து எண்ணிக்கை கூறுகின்றன. எனவே நான் எப்பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கிறேனோ அப்பொழுதே அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன். சமீபமாக நான் படித்து முடித்து ஜல தீபம் புத்தகத்தின் முதல் பாகம்.


ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடும்போது அதில் அவர்களது டிரேட்மார்க் தெரியும். உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் ஷங்கரின் திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை சொல்லலாம். அதே போல், தமிழ் எழுத்தாளர்களில் சிறந்தவர்களுள் ஒருவரான சாண்டில்யனின் நூல்களில் ஒரு சில ஒற்றுமைகளை கூறிவிடலாம். அவற்றில் முதன்மையானது கதாநாயகன் ஒருவனாக இருந்தாலும் கதாநாயகிகள் ஒன்றுக்கு மேற்ப்பட்டவராக இருப்பர். இரண்டாவாதாக, கதாநாயகனுக்கு அடுத்தபடியாக ஒருவர் இருப்பார். எளிமையாக கூறினால் ஆங்காங்கே தோன்றுவார். உத்தரவுகளை பிறப்பிப்பார். பெரிய மனிதனாக சித்தரிக்கப்படுவார். மூன்றாவது, கதாநாயகன் வீர சாகசங்கள் புரிவார். நான்காவதாக, மிக முக்கியமானதாக கருதப்படுவது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் தறுவாயிலும் ஒரு திருப்பம் அல்லது ட்விஸ்ட் இருக்கும். ஏன் அப்படி எழுதி இருக்கிறார் என்று ஆரம்ப காலங்களில் புரியவில்லை. எனது தந்தையும், எனது நண்பன் ஒருவரும்தான் புத்தகத்தின் கதையை மட்டும் படிக்கக்கூடாது, அதனுடைய முன்னுரையையும் படிக்க வேண்டும் என்று கூறினார். அப்படி படித்த பொழுதுதான் இவருடைய பெருவாரியான புத்தகங்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை என்று தெரிய வந்தது. J


மேற்கூறிய நான்கிலிருந்து ஜல தீபம் நூலளவு கூட விலகவில்லை. முதல் பாகம் சுமார் 350 பக்கங்கள் கொண்டது. கதாநாயகன் இதயச்சந்திரன் முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். முதல் பாகத்திலேயே இரண்டு நாயகிகள் வந்து விடுகிறார்கள். பெரிய மனிதராக சார்கேல் கனோஜி ஆங்க்ரே வந்து விடுகிறார். இதயச்சந்திரன் ஒரு நபரை தேடி செல்கிறார். கடற்போரில் வீழ்த்தப்படுகிறார். சில பல திருப்பங்களுக்கு பிறகு கனோஜியடம் பணி புரிய செல்கிறார் இதயச்சந்திரன்.


 முதல் பாகத்தில் வில்லனாக பெரியதாக யாருமில்லை. ஒரு சில அத்தியாயங்களுக்கு மட்டும் சித்தி என்பவர் வில்லனாக வந்து போகிறார். முதலில் எட்டி பார்க்கும் பானுமதி என்னும் கதாநாயகி முதல் பாதியில் மட்டும் வருகிறார். இரண்டாம் பாதியில் மஞ்சு என்பவர் வருகிறார்.


புத்தகத்தின் முதல் பகுதி கதைக்களத்தை புரிந்து கொள்வதிலேயே போய் விடுகிறது. எனினும் ஆசிரியர் வாசகர்களை பெரிதாக சிரமப்படுத்தவில்லை. முதல் 50  பக்கங்களில் மிக எளிதாக புரிந்துவிடுகிறது. கதையின் பெயரான ஜல தீபம் புத்தகத்தின் 200வது பக்கத்தில் உதிர்க்கப்படுகிறது. எனக்கு என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது கடல் புறாவின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


எனினும், சாண்டில்யன் வழக்கம் போல் வித விதமான திருப்பங்களை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் வைத்து அந்த ஞாபகங்களை துரத்தி அடிக்கிறார். அவருடைய எழுத்துகளை விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரியவன் இல்லையென்றாலும் இந்த வலைப்பூ படிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றும் என்ற நோக்கத்துடனும் அவர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டமாக இருக்கும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.


     இரண்டாம் பாகத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்..

Sunday, December 8, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி நான்கு

 முதலாம் ராஜேந்திர சோழரின் புதல்வர்களுள் ஒருவருமான இரண்டாம் ராஜேந்திர சோழருக்கு பிறகு சோழ மன்னனாக முடிசூட்டப்பெற்றவருமான வீர ராஜேந்திர சோழரின் காலத்திற்கு வருவோம். இவருடைய மெய்க்கீர்த்திகளில் மேலை சளுக்கர்களை ஐந்து முறை புறமுதுகிட்டு ஒடச்செய்ததாக குறிப்பிடப்படுகிறது.

மேலை சளுக்கர்களுடன் இடை விடாது போர்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் வீர ராஜேந்திரர். வேங்கியின் மன்னனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருந்தார். வேங்கியின் மன்னனோ இரு தலைக்கொல்லி எறும்பாக தவித்தான். ஒரு புறம் மேலை சளுக்கர்களும் சோழர்களும் தங்களை பகடைக்காயாக உபயோகிப்பது. மற்றொரு புறம் உட்கட்சிப்பூசல். அதாவது எந்நேரத்திலும் ராஜ ராஜ நரேந்திரரின் புதல்வன் அநபாயன் தனது சிம்மாசனத்தை பறிக்கலாம். வேங்கியின் நிலையை இன்றைய காஷ்மிரோடு ஒப்பிடலாம்

 

இவர்களது பகை பெரும்பாலும் வேங்கியை சுற்றியே பின்னப்பட்டிருந்தது. வீர ராஜேந்திரர் காலத்திற்கு வருவோம். எந்த சமயத்தில் எந்த இடத்தில நடைப்பெற்ற போர் என்று தெரியாத போரில் வீர ராஜேந்திரர் சளுக்கர்களின் அணியில் போரிட வந்தான் 7 படைத்தலைவர்களின் தலையை கொய்தார் எனவும் இது சோமேஸ்வரனை மிகவும் சினப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சோமேஸ்வரன் சோழ மன்னனுக்கு கடிதம் ஒன்றில் அடுத்த போருக்கு நாள் குறித்ததாகவும் அதைக்கண்ட வீர ராஜேந்திரர் மிகவும் மகிழ்ச்சியுற்று தனது படைகளோடு குறித்த நாளில் குறித்த இடத்திற்கு சென்று ஒரு திங்களாகியும் சோமேஸ்வரன் வரவில்லை என்றும் நீலகண்ட சாஸ்திரிகள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதையடுத்து வீர ராஜேந்திரர் தனது சேனாபதிகளை எரிப்பரந்தெடுத்தலில் ஈடுபடுத்துகிறார்.  


எனினும் சோமேஸ்வரன் வருகாமைக்கு தெளிவான காரணங்கள் குறிப்பிடப்பெறவில்லை. ஒரு சாரார் சோழர்களின் பிரம்மாண்ட படைகளிடம் மீண்டும் தோல்வியுற பயந்தான் எனவும் மற்றொரு சாரார் சோமேஸ்வரனுக்கு மரணம் சம்பவித்திருக்ககூடும் என்று கூறுகின்றனர். வீர ராஜேந்திரரின் வேங்கி படையெடுப்பின் போதும் சோமேஸ்வரன் இருக்கப்பெறவில்லை என்பது அறியப்படுகிறது. தனது மருமகனான விஜயாதித்யனுக்கு கிடைக்க வேண்டிய வேங்கி சிம்மாசனம் மேலை சளுக்கர்களிடம் இருப்பதைக்கண்டு வீர ராஜேந்திரர் தனது படைகளை வேங்கியை நோக்கி நகர்த்தினார். அங்கே நிலை பெற்றிருந்த மேலை சளுக்கர்களின் படைகள் சோழப்படைகள் முன் சிதறியோட விஜயாதித்தனுக்கு மீண்டும் வேங்கி சிம்மாசனம் கிடைத்தது. 


சோமேஸ்வரன் மரணத்திற்கு பிறகு இரண்டாம் சோமேஸ்வரன் மேலை சளுக்கர்களின் மன்னனாக 1068 ஆம் ஆண்டு முடிசூட்டப்பெறுகிறார். எனினும் இரண்டாம் சோமேஸ்வரனுக்கு சோழர்கள் மட்டும் எதிரியாக இருக்கவில்லை. அவனது தம்பியான ஆறாம் விக்ரமாதித்தன் தனது அண்ணனை எதிர்க்க தொடங்கினான். தனது மற்றொரு தம்பியான ஜெயசிம்மனுடன் கல்யாணி நகரத்தை விட்டு பெரும் படைகளுடன் செல்லத்தொடங்கினான். அவனை அழிக்க மற்றொரு படைப்பிரிவை சோமேஸ்வரன் அனுப்பிவைத்தான். அப்படைகளை வெற்றிகரமாக முறியடித்த விக்ரமாதித்தன் சோழ நாட்டை நோக்கி முன்னேற தொடங்கினான். மற்றொரு பெரும் போருக்கு தயார் நிலையில் இல்லாதிருந்த வீர ராஜேந்திரர் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளை மணமுடித்து போரை தவிர்த்தான். இதையடுத்து சளுக்கர்களின் ஒரு படைப்பிரிவோடு சோழப்படைகள் இணையக்கூடிய வாய்ப்பு அமைந்தது. 


மீண்டும் கல்யாணி நகரத்தை போர் மேகம் சூழ்ந்தது. இம்முறை சளுக்கர்களின்(சோமேஸ்வரன்) ஒரு படைப்பிரிவு ஒரு அணியாகவும், சளுக்கர்களின்(விக்ரமாதித்தன்) மற்றொரு படைப்பிரிவு, சோழர்களின் படை, கடம்ப(ஜெயசிம்மன்) நாட்டின் படை, வேங்கியின் படைகள் ஒரு அணியாகவும் திரண்டன. சோமேஸ்வரன் நாட்டை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை தனது தமையனுக்கு தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். சளுக்கர்களின் உள்நாட்டு பகையை உபயோகபடுத்திக்கொண்ட வீர ராஜேந்திரர் சோழர்களுக்கும் சளுக்கர்களுக்குமான பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் மேலை சளுக்கர்கள் தங்களது வட எல்லையில் பாமரர்களை இடையறாது எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் சோழர்களுடனான பகையை முடித்துக்கொண்டனர்.

 

முதன் முறையாக எடுத்து கொண்ட தலைப்பை முழுமையாக முடித்திருக்கிறேன். :)

     

சோழர்களைப்பற்றிய புதினங்களை தொடர்ந்து படிப்பது ஒரு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சோழ கங்கம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி விமர்சனம் தாமதமாகும் என்று நினைக்கிறேன். தற்பொழுது சாண்டில்யனின் ஜல தீபத்தை வாசிக்கிறேன். அடுத்ததாக உதயணின் கடல் கோட்டை படிக்கலாம் என்றிருக்கிறேன்.

Saturday, November 9, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி மூன்று

ராஜேந்திர சோழருக்கு பிறகு சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தவர் ராஜாதி ராஜர். தந்தையின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் படைகளுக்கு தலைமை வகித்து போர்களில் எண்ணற்ற வெற்றிகளை வாரி குவித்தவர். சோழ நாடு கண்ட மாபெரும் வீரர்களுள் ஒருவர். தனது ஆயுட்காலம் முழுதும் போர்களிலே செலவிட்டவர். ராஜேந்திரரின் கங்கை மற்றும் கடார படையெடுப்புகளுக்கு பிறகு சோழர்களின் எதிரி பட்டியல் மேலும் நீண்டது.


ராஜாதி ராஜர் இரண்டாம் முறையாக சோமேஸ்வரன் தலைமையிலான சளுக்க படைகளை கம்பிலி நகரத்தில் சந்தித்தது. சோழப்படைகளின் முன் சளுக்க படைகள் சிதறிட, சோழ சைன்யம் கம்பிலி நகரத்தை துவம்சப்படுத்தியது. இப்போர் நடைப்பெற்ற ஆண்டு 1044-1046 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மூன்றாம் முறையாக சோமேஸ்வரனின் சிறிய படைகளை புன்டுர் அல்லது புந்தூர் பகுதிகளில் சந்தித்தது. சோமேஸ்வரின் சேனாதிபதிகள் மற்றும் படைத்தலைவர்களை சிறை பிடித்ததோடு மட்டுமல்லாமல் புந்தூர் நகரத்தையும் படைகள் துவம்சம் செய்தது சோழப்படைகள். மேலும் சோழப்படைகள் உக்கிரமாக முன்னேறி சளுக்கர்களின் அன்றைய தலைநகரான கல்யாணபுரம் எரியூட்டப்பட்டதுடன் இப்போர் முடிவுக்கு வந்தது. இதற்கு பிறகு ராஜாதிராஜர் விஜய ராஜேந்திரன் என்னும் அபிடேகப்பெயரை புனைந்து வீராபிஷேகம் புரிந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இந்த போர் 1048 ஆண்டு நடைப்பெற்றது.


இப்போர் பற்றி நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர்கள் புத்தகம் ஒரு அறிய தகவலை நமக்கு அளிக்கிறது. குடந்தையில் உள்ள தாராசுரம் கோவிலில் உள்ள துவாரபாலகர் சோழர்களின் கலைக்கு மாறாக வித்தியாசமாக இருக்குமெனவும் இச்சிலை கல்யாணபுரத்தை எரியூட்டியபிறகு ராஜாதிராஜரால் அங்கிருந்து கொணரப்பட்டது என்று கூறுகிறது.


மீண்டும் ஆகவமல்லன் தலைமையிலான சளுக்க படைகள் சோழப்படைகளை கொப்பத்தில் சந்தித்தது. மிகவும் உக்கிரமாக நடைப்பெற்ற இப்போரில் சளுக்க படைகள் ராஜாதிராஜர் அமர்ந்து வந்த யானையை குறிவைத்து தங்களது போர் வியூகத்தை அமைத்து போரிட சோழ சக்கரவர்த்திகள் ராஜாதிராஜ சோழர் உயிர் நீத்தார். தனது வாழ்க்கை முழுதும் போரில் செலவிட்ட ஒரு மாபெரும் வீரனுக்கு ஏற்ற முடிவு (வீரமரணம்) ராஜாதிராஜருக்கு கிட்டியது.

 

போர்க்களத்தில் தங்களது சக்ரவர்த்திகள் உயிர் நீத்ததை அடுத்து சோழப்படைகள் சிதற ஆரம்பித்தன. இதை பயன்படுத்திக்கொண்ட ஆகவமல்லனின் படைகள் சோழப்படைகளை வீழ்த்த தொடங்கின. தனது தமையனுடன் போர்க்களம் வந்திருந்த இரண்டாம் ராஜேந்திரர் சோழர்களின் பின்னடைவை பார்த்துவிட்டு படைகள் சக்ரவர்த்திகள் இல்லாததனால் தடுமாறுகிறது என்பதை உணர்ந்து போர்க்களத்திலேயே சோழ மாமன்னராக முடி சூடிக்கொண்டார். படைகளை அஞ்ச வேண்டாம் என்றும் வெற்றி நமதே என்றும் படைகளை முன்னின்று நடத்தினார். தோல்வியின் விளிம்பிலிருந்த சோழப்படைகள் அசுர வேகத்தில் வெற்றியை நோக்கி நடந்தது.

 

     எனினும் சோழர்களின் இந்த வெற்றி தற்காலிகமானதே என்பது ஆகவமல்லனின் கல்வெட்டுகள் துங்கபத்திரை நதிக்கரை வரை கிடைக்கப்பெறுவது உறுதி செய்கிறது. இந்த தீராப்பகை அடுத்து ஆட்சி பொறுப்பேற்கவிருக்கும் வீர ராஜேந்திரரின் ஆட்சியில் முடிவு காணவிருக்கிறது. அந்த இறுதி பகுதி அடுத்த பதிவில்..


அனைத்து விவரங்களும் K.A.நீலகண்ட சாஸ்திரிகளின் “சோழர்கள் புத்தகத்திலிருந்தும் சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்கால சோழர்கள் சரித்திரம் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையே.

 

புத்தகங்களில் படைத்தலைவர்கள், சேனாதிபதிகள் போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தாலும் அப்பெயர்களை கூறி வாசகர்களை குழப்ப எனக்கு விருப்பமில்லை. இப்போதைக்கு ஒரு மேலோட்டமாகவே எனது வலைப்பதிவுகள் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. என்னை விட எனது வலைப்பூக்களை படிக்கும் வாசகர்களுக்கு மிகவும் நல்லது என்று எனது மனசாட்சி கூறுகிறது. J


தொடரும்..

Sunday, October 27, 2013

சோழ கங்கம் – முதற் பகுதி – ஒரு சிறிய விமர்சனம்

     நம்மில் பெரும்பாலானோருக்கு சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி கற்பனை செய்து எழுதப்பட்டதே இந்த சோழ கங்கம் என்ற புத்தகத்தின் முதற் பாகம்.

 

அந்த சம்பவம் இதுதான். முகமது கஜினி வட இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார். அதே சமயத்தில் தெற்கு இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் ஒரு மாவீரன் இந்தியாவின் வட கிழக்கு நாடுகளை நோக்கி தனது படைகளை செலுத்துகிறார். அந்த வீரன் வேறு யாரும் அல்ல. ராஜேந்திர சோழர். ராஜேந்திர சோழர் வடக்கு நோக்கி நகர்த்திய படைகள் கங்கை நீரை கொணர்வதற்கு மட்டும் அல்ல, கஜினியுடன் மோதுவதற்கும் தான் என்ற வாக்கில் புனையப்பட்டதே சோழ கங்கம் – முதற் பகுதி.

 

புத்தகத்தை பற்றி விமர்சிப்பதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம் சம்பவத்தைப்பற்றி. கஜினியுடன் மிகப்பெரிய படையுடன் போர் புரியக்கூடிய வல்லமை தென் இந்தியாவில் அன்று இருந்த இரு பெரும் சாம்ராஜ்யங்களான மேலை சளுக்கர்களுக்கும், சோழர்களுக்கும் உண்டு. எனினும் மேலை சளுக்க படைகள் அச்சமயத்தில்தான் சோழர்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். எனவே படை பலம் மற்றும் மீதமிருந்த படைகளின் உற்சாகமும் குன்றியிருக்கும். எனவே போர் நடந்திருந்தால் வெற்றி கிட்டியுருக்குமா என்று சந்தேகம்தான்.

 

சோழர்களும் கஜினியுடன் மோதியதாக எந்தவொரு வரலாற்று குறிப்பும் கிடைக்கவில்லை. மேலும் கஜினி வட இந்தியாவில் கிடைத்த செல்வங்களே போதும் என்று நினைத்து தெற்கு இந்தியாவில் படையெடுக்காமல் இருந்திருக்கக்கூடும். மேலும் கஜினியின் ஒற்றர்கள் சோழப்படைகளைப் பற்றியும் , மேலைசளுக்கப் படைகள் பற்றியும் உளவு பார்த்திருக்ககூடும். வட இந்தியாவில் நிலவிய கோஷ்டி மோதல்கள் தென் இந்தியாவில் அப்பொழுது அடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

 

 

வட மேற்கில் வேற்று நாட்டவன் தான் வணங்கும் கோயில்களை இடித்திருப்பது கண்டு ராஜேந்திர சோழர் தமது படைகளை அத்திசையை நோக்கி செலுத்தவில்லை. ஒரு மன்னனாக இருந்து யோசித்து பார்த்தால் அதில் சில நியாயங்கள் புலப்படுகின்றன. நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு பல வருடங்களாக திட்டங்கள் தீட்டியே கங்கை நீர் கொணர்தலுக்கு செய்ய வேண்டிய போர்கள், ஸ்ரீவிஜயம், கடார படையெடுப்புகள் நடந்திருக்க வேண்டும். இச்சமயத்தில் தெரியாத நாட்டில், அறியாத இடத்தில, படைபலம் தெரியாத ஒருவனுடன் மோதி படைகளை இழந்து, பல வருடங்களாக கண்டு வரும் கனவுக்கோட்டை தகர்வதை எந்த மன்னனும் விரும்ப மாட்டான் என்பதே உண்மை. 


சரி. வாருங்கள்.புத்தகத்தின் விமர்சனத்துக்குள் நுழைவோம். கஜினியுடன் தனது பெரும் படைகளை அணிவகுத்து கஜினியை வீழ்த்தி வெற்றி வேங்கைகளாக சோழப்படைகள் திரும்புவதே முதல் பாகம். என்னதான் கற்பனையாக இருந்தாலும் நாம் இந்த சம்பவம் நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதே நம்மை இந்த புத்தகத்தோடு ஒட்டவைக்கிறது. எனினும் இந்த புத்தகத்தை இரண்டாக பிரித்து தனித்தனியாக அச்சடித்திருக்கலாம். புத்தகத்தை கையில் பிடித்து தொடர்ச்சியாக அரை மணி நேரம் படித்தால் போதும். தோள்ப்பட்டை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. 

 

இப்புத்தகத்தை நான் வாங்கி பல மாதங்கள் ஆனாலும் ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்ததால் சற்றே தாமதமானது. அதற்குள் எனது நட்பு வட்டாரங்கள் புத்தகத்தின் விமர்சனத்தை அடுக்கினர். அவற்றின் தொகுப்பே இது. என்னதான் சம்பவத்தை சுவாரசியமாக கூறினாலும் சம்பவத்தில் பங்கு பெறும் மனிதர்களின் பெயர்களும் அவர்களின் நாடும் பல சமயத்தில் நமக்கு மறந்து போகின்றன என்பது மறுக்க முடியாத விமர்சனமாக உள்ளது. புத்தகத்தை வாசித்த அனைவரும் கூறுகின்றதாக உள்ளது.

 

முதல் 200 பக்கத்தில் சுமார் 150-160 கதாப்பாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப்படுத்திவிடுகிறார். அதை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் ஆங்காங்கே பக்கங்களில் கீழ் கொடுக்கப்படும் அடிக்குறிப்புகளில் ஆசிரியரின் கடும் உழைப்பு புலனாகிறது. சில சம்பவங்களை படிக்கும்பொழுது நமக்கு உண்மையாகவே மயிர்க்கூச்செரிதல் ஏற்படுகிறது. இந்த சம்பவம் நடந்திருந்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்று நமக்கு தோன்றசெய்வதில் ஆசிரியர் வெற்றியடைகிறார்.

 

     ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் புத்தகத்தின் முதல் பாகம் சில சமயங்களில் ஏமாற்றத்தையும், சில சமயங்களில் சுவாரசியமாகவும், சில சமயங்களில் ஏக்கத்தையும் வரவழைக்கின்றன. ஆசிரியரின் முதல் முயற்சி என்பதை புத்தகத்தின் அளவில் மட்டுமல்ல, புத்தகத்தின் பக்கங்களிலும் நம்ப முடியவில்லை. முதல் முயற்சியிலே 1500 பக்கங்கள் எழுதுவது சாத்தியமல்ல. ஆனால் சக்திஸ்ரீ அவர்கள் அதில் மட்டுமல்லமால் வாசகர்களையும் வெற்றி கண்டிருக்கிறார்.

Tuesday, October 22, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி இரண்டு

சத்யாஸ்ரேயனுடனான ராஜ ராஜரின் போர் மிகவும் உக்கிரமானதாக இருந்திருக்க வேண்டும். சளுக்கர்களிடம் சோழர்கள் அடைந்த தோல்வி அவர்களை உசுப்பேற்றியிருக்க வேண்டும். மேலும் ராஜ ராஜர் தனது கனவான தஞ்சை பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்க தொடங்கியிருந்தார். அதற்கு தேவையான பொருட்களும், அடிமைகளையும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் என்பதும் ஒரு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.

சத்யாஸ்ரேயருடைய கல்வெட்டு ராஜராஜர் ஒன்பது இலட்சம் கொண்ட படையோடு வந்து வெகு உக்கிரமாக போர் புரிந்தனர் என்றும் இந்த மாபெரும் படைக்கு ராஜராஜரின் புத்திரன் ராஜேந்திர சோழர் தலைமை தாங்கியதாகவும் கூறுகிறது. சளுக்கர்களை போரில் வீழ்த்தினாலும் அவர்கள் நாட்டை ராஜராஜர் தனது ஆளுமைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சளுக்க நாட்டில் ராஜ ராஜரின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்து, பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று புகழப்பெறும் முதலாம் ராஜேந்திர சோழரின் சளுக்க படையெடுப்புகளை பார்ப்போம்.

ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வரும் முன்னரே மேலை சளுக்கம் இரு மன்னர்களை இழந்துவிட்டது (சத்யாஸ்ரேயர் மற்றும் ஐந்தாம் விக்ரமாதித்யன்). இவர்களுக்கு பின் ஜெயசிம்மன் ஆட்சிக்கு வந்தார். ஜெயசிம்மனின் ஆட்சிக்காலத்தில் சளுக்க படைகள் எழுச்சிப்பெற்றன. ராஜ ராஜரின் காலத்தில் சோழர்களிடம் இழந்த தெற்கு பகுதிகளை மீட்டெடுத்தது. இக்கூற்றை பெல்லாரி மற்றும் இன்றைய மைசூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதாக இராசசேகர தங்கமணி தனது “முதலாம் ராஜேந்திர சோழன் புத்தகத்தில் கூறுகிறார். மேலும் ஜெயசிம்மன் சோழ யானைக்கு சிங்கம் போன்றவன் என்ற புனைப்பெயர் உடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலை சளுக்கரின் இந்த வெற்றி ராஜேந்திர சோழரின் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடக்கபெற்றிருக்க வேண்டும் என்பது ஜெயசிம்மனின் பெல்காம் கல்வெட்டு மூலம் உணரலாம். இக்கல்வெட்டு வரையப்பெற்ற ஆண்டு 1017.A.D.

ஜெயசிம்மனின் படையெடுப்பு சோழர்களின் படைகளை உசுப்பேற்ற ராஜேந்திரர் தனது படைகளை காஞ்சியில் திரட்டினார். சோழப்படைகள் முயங்கியில் சளுக்க படைகளை சந்தித்தது. சம பலம் பொருந்திய இரு படைகள் பொருதின. இறுதியில் சோழர்கள் வெற்றி பெற்றனர். இப்போர் 1020.A.D நடைப்பெற்றது.

     இந்த போரில் தோற்றாலும் ஜெயசிம்மன் விடாது கறுப்பு என்பதைப்போல் மீண்டும் படை திரட்டி துங்கபத்திரை நதிக்கு வடக்கில் உள்ள பகுதிகளை சோழர்களிடமிருந்து மீட்டெடுத்து தனது தெற்கு எல்லையாக துங்கபத்திரை நதிக்கரையை கொண்டார். துங்கபத்திரை நதியை தாண்டி சோழப்படைகளால் செல்ல முடியாததால் சோழர்களும் தங்களது வட எல்லையாக நதிக்கரையை கொண்டனர்.

     எனினும் போர் மற்றொரு இடத்தில, மற்றொரு விதத்தில் தொடர்ந்தது. அதற்கு மேலை சளுக்கர்களின் தாயாதிகளான கீழை சளுக்கதில் ஏற்ப்பட்ட குழப்பங்களே காரணம். இதைப்பற்றி ஏற்கனவே இரு வலைபூக்கள் எழுதப்பட்டுவிட்டன.
         

      வேங்கியில் நடந்த போர்களில் சோழர்கள் அரையன் ராஜராஜன் தலைமையிலான படைகள் மேலை சளுக்க படைகளை புறமுதுகிட செய்தன. வேங்கியில் சளுக்கர்கள் மற்றும் சோழர்களின் தலையீடு முதலாம் குலோத்துங்கர் ஆட்சிக்கு வரும் வரை நீடித்தது.


தொடரும்..



சோழ கங்கம்  முதற்பகுதி  - விமர்சனம் விரைவில் ..

Wednesday, October 16, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி ஒன்று

சோழர்கள் தங்கள் பரம வைரிகளாக கருதியது பாண்டியர்கள் என்றாலும் மேலைச்ச்சளுக்கர்களும் அவர்களது பரம எதிரிகளே. பாண்டியர்களுடனான இவர்களது விரோதம் நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்தது என்றாலும் சளுக்கர்களுடனான பகை 100-120 ஆண்டுகளே நீடித்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்தம சோழரின் காலத்திலிருந்து வீர ராஜேந்திரரின் காலம் வரை இந்த பகை நீடித்தது. இதில் மிகுந்த சுவாரசியமான விடயம் என்னவென்றால் வீர ராஜேந்திரர் தனது மெய்க்கீர்த்தியில் ஐந்து முறை மேலைச்ச்சளுக்கம் தன்னிடம் புறங்கண்டதாக குறிப்பிடுகிறார். இவரது காலத்தில்தான் இந்த பகை முடிவுற்றது. இதை அடுத்து வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.

முதலாம் பராந்தகரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பால் சோழ நாடு தனது வடக்கு பகுதிகளில் சிலவற்றை இழந்தது. காலஹத்தி வரை நீண்டு பரந்திருந்த சோழ நாடு ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பிற்கு பிறகு தனது வடஎல்லையாக திருவொற்றியூரை கொண்டிருந்தது. ராட்டிரக்கூடர்களிடம் கப்பம் செலுத்தும் சிற்றரசாக மேலை சளுக்கர்கள் அந்த சமயத்தில் இருந்தனர். மூன்றாம் கிருட்டினர் ராட்டிரக்கூடர்களின் அரசராக இருந்தார். மேலை சளுக்கம் இரண்டாம் தைலபரை அரசராக கொண்டிருந்தது.

அரிஞ்சயரும், சுந்தர சோழரும் சோழர்களை தோல்வியிலிருந்து சிறிது சிறிதாக மீட்டெடுத்தனர். இதற்கு பெரும் துணையாக இருந்தது ராட்டிரக்கூடர்களுக்கு பல பக்கங்களில் இருந்து இன்னல்கள் வந்ததே காரணம். மூன்றாம் கிருட்டினருக்கு பிறகு சரியான ஆளுமை இல்லாததாலும், வடக்கு எல்லையில் மாளவ நாட்டின் தொடர் படையெடுப்பாலும் அவர்கள் உருக்குலைந்தனர். இரண்டாம் கர்க்கர் (Karka II)  ஆட்சிக்காலத்தில் ராட்டிரக்கூடர்களின் நிலை இன்னும் மோசமடைந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டாம் தைலபர் இரண்டாம் கர்க்கரை கொன்று மேலை சளுக்க அரசை மீண்டும் நிறுவினார்.

அரசை மீண்டும் நிறுவியதோடல்லாமல், நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்த முற்பட்டார். அவர் தனது பிரதான எதிரியாக கருதியது ராட்டிரக்கூடர்களுக்கு பிறகு சோழர்களே. ஒரு எதிரி அழிந்த பின் மற்றொரு எதிரி மீது கண் பதிவது வியப்பல்லவே. சோழ நாடு இரண்டாம் தைலபரின் காலத்தில் மிக உன்னதமான நிலையில் இருந்தது என்று கூறமுடியவில்லை. ஏனெனில் அப்பொழுது ஆட்சியில் இருந்தது உத்தம சோழர்.

சோழ நாட்டின் மீது படையெடுத்த தைலபர் அதில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்ததாக கூறலாம். இந்த படைஎடுப்பைப்பற்றி எந்த குறிப்புகளும் நீலகண்டரின் “சோழர்கள் புத்தகத்தில் எனக்கு புலப்படவில்லை. இந்த படையெடுப்பும் ராஜராஜர் ஆட்சிக்கட்டிலுக்கு வருவதை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். இந்த போர் கி.பி 980 ஆம் ஆண்டு நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பில் இருந்து சோழ நாடு முழுமையாக மீள்வதற்குள் பாண்டிய நாட்டின் கலகம், தைலபரின் படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்புகளிளிருந்து சோழ நாடு முழுமையாக மீண்டது ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில்தான். தைலபரின் கையில் தோல்வியை தழுவிய உத்தம சோழர் கி.பி 985 ம் ஆண்டு உயிர் துறந்தார். அதன் பிறகு சோழ நாடு தனது வரலாற்றின் போற்றத்தக்க அரசரை தனது சிம்மாசனத்தில் ஏற்றியது.

அருமொழிவர்மர் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் மேலை சளுக்கர்களுடன் போரிடாமல் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பாண்டிய நாட்டு கலகங்களிலும், வரலாற்றில் இன்னும் ஆய்வாளர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் காந்தளூர் படையெடுப்பிலும் தனது கவனத்தை செலுத்தினார். இந்த காலக்கட்டத்தில் இரண்டாம் தைலபர் இறந்துவிட சத்யாஸ்ரேயர் ஆட்சிக்கு வந்தார். காந்தளூர் படையெடுப்பு முடிந்தவுடன் சோழ நாடு தனது தகுதிக்கு சமமான சளுக்கர்களை சந்திக்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டது.

தொடரும்..

Wednesday, October 9, 2013

அதி ராஜேந்திரன் மரணம் – குலோத்துங்கன் காரணமா?

வரலாற்றில் சில மரணங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. உதாரணமாக ஆதித்யகரிகாலன் மரணத்தை கூறலாம். இதைப்பற்றி பல ஆசிரியர்கள் பற்பல விதமாக தங்கள் கற்பனைக்குதிரைகளை தட்டி தேவையானஅளவிற்கு எழுதிவிட்டனர். சில மரணங்கள் நமது பார்வையிலிருந்து விலகி விடுகின்றன. சில மரணங்களைப்பற்றி கதாசிரியர்கள் விளக்காமல் விட்டுவிடுவதுண்டு. சிலர் பட்டும் படாமல் எழுதுவர். இதில் அதிராஜேந்திரன் மரணமும் ஒன்று. இதைப்பற்றி ஏற்கனவே மற்றுமொரு மரணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு நீலகண்ட சாஸ்த்ரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை வாசித்தேன. வாசிக்கும் பொழுது என்னவோ தெரியவில்லை முதலாம் குலோத்துங்கரை பற்றி வாசிக்கவே தோன்றியது.

நம்மில் பெரும்பாலானோருக்கு சோழர்கள் என்றால் முதலாம் ராஜராஜரையும், முதலாம் ராஜேந்திரரையும் மட்டுமே பரிச்சயமாக உள்ளனர். ஆனால் இவர்களை தாண்டி சோழ நாட்டில் மேலும் சில புகழ் வாய்ந்த மன்னர்கள் இருந்துள்ளனர். என்னுடைய பார்வையில் மேற்கூறிய இருவருக்கடுத்து முதலாம் குலோத்துங்கரையே மிகவும் சிறந்தவர் என்று கூறுவேன்.

இப்பொழுது எனது மனதில் என்ன தோன்றுகிறது என்பதை வெளிப்படையாக கூறி விடுகிறேன். இந்த வலைத்தொடரயாவது முழுமையாக எழுதி முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தில்லை கோவிலைப்பற்றி எழுதிய வலைகளுக்கு பெரியதாக யாரும் படித்துவிடவில்லை. எனினும் எனது வலைகளில் சங்கதாரா பற்றிய விமர்சனமும், கலிங்கத்துப்பரணி பற்றிய முன்னுரையும் பெருவாரியான மக்கள் படித்திருக்கின்றனர் (நூறு என்பதே என்னைப் பொருத்தவரை பெருவாரியான மக்கள் தான். J)

குலோத்துங்கரின் இளமை எப்படி கழிந்தது என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எனினும் சோழர்கள் புத்தகத்தை வாசிக்க தொடங்கியவுடன் மேலும் சுவை மிகுந்த பல தகவல்கள் கிடைத்தன. அதில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்த வலையை நிறைவு செய்து விடுகிறேன்.

தனது தந்தை ராஜராஜ நரேந்திரர் இறந்தவுடன் வேங்கியின் அரசபீடத்தில் அமர்ந்தான் இருபது வயதே நிரம்பிய அபயன் என்கிற ராஜேந்திரன் (குலோத்துங்கரின் இள வயது பெயர்கள்). மற்றொரு வலையில் இவரது சிற்றப்பன் விஜயாதித்யன் இவரிடம் ஆட்சியை பறித்ததாக கூறியிருந்தேன். ஆனால் நீலகண்டர் குலோத்துங்கரே விரும்பி தனது சிற்றப்பனிடம் ஆட்சியை ஒப்படைத்ததாக கூறுகிறார். (பார்க்க பக்கம் எண்: 309 ஆங்கிலம்)

இதற்கு காரணமாக நீலகண்டர் கூறுவது இரு காரணங்களாகும்.
முதலாவது, வீரராஜேந்திரருக்கு பிறகு சோழ அரியணையில் வீற்றிருக்க போவது தானே என்கிற எண்ணம் குலோத்துங்கருக்கு வந்திருக்கவேண்டும் எனவும் அதற்கு உகந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ள இந்த காலத்தை உபயோகித்திருக்கக்கூடும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

இரண்டாவதாக, மேலை சளுக்க மன்னரான விக்ரமாதித்யனின் வேங்கி மற்றும் சக்கரகோட்டத்தின் படையெடுப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். புரியும் படி சொல்லவேண்டுமென்றால், விக்ரமாதித்யன் ஒரே சமயத்தில் கிழக்கு முகமாக வேங்கியையும் வடகிழக்கு முகமாக சக்கரகோட்டத்தையும் நோக்கி வந்திருந்தால், வேங்கி நாட்டு படைகள் சக்கரகோட்டத்தை நோக்கியும், சோழ படைகள் வேங்கியை நோக்கியும் நகர்ந்திருக்கக்கூடும். வேங்கி நாடு சக்கரகோட்டத்தை தனது வடஎல்லையாய் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

இதற்கு பிறகு நடந்த சில விஷயங்கள் தான் மேலை சளுக்கத்துக்கும் சோழர்களுக்கும் நடந்த தீராப்பகையை முடிவுக்கு கொண்டு வந்தது. அது பற்றியதே அடுத்த வலைப்பதிவு.

Sunday, July 21, 2013

சோழ நாட்டில் கல்வி

இது வரை எனது பதிவுகளில் சோழ அரசர்களை பற்றியும் சோழ நாடு மேற்கொண்ட போர்களை பற்றி எழுதியுள்ளேன். அப்பதிவுகளிளிருந்து சற்றே விலகிய பதிவாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம். இந்த பதிவில் சோழ நாட்டில் மக்கள் எவ்வாறு தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொண்டார்கள் என்பதை பற்றியாகும். இதற்கு நான் பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்பதை ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டுவிடுகிறேன். இந்த பதிவிற்க்கென்று நான் படித்தது நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் மட்டுமே.

இன்றைய நாட்களில் இருப்பது போல் எந்திரத்தனமான, முட்டாள்தனமான கல்வி முறைகள் அன்றைய நாட்களில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அனைத்து வகையான கல்விகளையும் அனைத்து பிரிவு மக்களும் படித்திருக்க இயலாது. சாதி மற்றும் வர்ணங்கள் வாரியாக மக்கள் வகைப்படுத்தப்பட்டதால் இது சாத்தியமாகியிருக்காது. உதாரணமாக அந்தணர்கள் வேதங்கள் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பார்கள். மறவர்கள் போர்கலைகளில் ஆர்வம் செலுத்துவார்கள். இதை பற்றி சுருக்கமாக காண்போம்.

கல்வெட்டுகளில் காணப்படும் வட்டெழுத்துகளில் சில தவறுகளும், வட்டார சொலவடைகளும், கல்வெட்டு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மொழிப்புலமை இருந்திருக்காது என்பதை தெளிவுப்படுத்துகிறது. அரசரின் ஆணைகளை ஓலையில் எழுதுபவரான திருமந்திர ஒலைநாயகம் கல்வெட்டு பணியில் ஈடுபடுபவர்களை விட அதிகம் கற்றிருப்பார். இன்னும் சொல்ல போனால் அவருக்கு அதிகாரிகள் பிரயோகிக்க கூடிய அனைத்து சொற்களும் அதற்கான அர்த்தங்களும் தெரிந்திருக்கும். மேலும் இவர் அரசரின் வாய் வழி உத்தரவுகளை ஓலையில் எழுதுபவர் என்பதால் மிகவும் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்திருக்கும். கவனம் சிதறாமல், அதே சமயம் மிக வேகமாக எழுதுபவராக இருக்க வேண்டியதிருக்கும்.

அந்தணர்கள் வழி வழியாக ஆலயங்களில் பூசைகளை மேற்கொள்பவர்களாக இருந்ததனால் அவர்கள் வேதங்களையும் பூசனை முறைகளையும் கற்றறிந்து இருப்பார்கள். இதைப்பற்றி கற்க அவர்கள் நிறுவிய பாட சாலைகளே மடங்கள் ஆகும். மடங்களுக்கு அரசர்களும், படைத்தலைவர்களும், ஆளுங்கனத்தார்களும் நிவேதங்கள் அளித்திருப்பார்கள். இது மடங்களுக்கு மட்டுமல்ல, விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும் பொருந்தும். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைய அரசாங்கம் அளிக்கும் SUBSIDYயை போன்றதாகும்.

எனினும் சில அந்தணர்கள் அரசர்களுக்கு மிகவும் நம்பகமான பணியில் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக அநிருத்த பிரம்மராயர் சுந்தர சோழர் முதல் முதலாம் ராஜராஜர் வரை பிரம்மராயராக இருந்திருக்கிறார். அதே போல் அருன்மொழிப்பட்டன் என்பவர் ராஜேந்திர சோழருக்கு பிரம்மராயராக இருந்துள்ளார். எனவே அந்தணர்கள் விரும்பினால் அவர்களுக்கு அனைத்து வகையான கல்விகளும் அளிக்கப்படும் சூழ்நிலை அப்போது இருந்திருக்க வேண்டும்.

ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று ராஜராஜசதுர்வேதிமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஒரு கல்விக்கூடத்திற்கு அளிக்கப்பட நிவந்தங்களை கூறுகிறது. நீலகண்ட சாஸ்திரி இதை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். (பக்கம்: 630 - ஆங்கிலம்) .  மடங்களில் மீமாம்சம், வியாகர்ணம், ரூபவதாரங்களும், வேதங்களும் கற்றுக்கொடுக்கப்படுவதாக கல்வெட்டு கூறுகிறது. மீமாம்சம் என்பது வேத உபநிடந்தங்களில் ஒன்றாகும். ரூபவதாரம் என்பது சமஸ்கிருத மொழியின் அடிப்படை இலக்கணமாகும்.


இதேப்போன்று வீரராஜேந்திரர், விக்கிரம சோழர், இரண்டாம் குலோத்துங்கர் ஆகியோர் நிவேதங்கள் அளித்திருப்பதாக தெரிகிறது.

வீரர்கள் பெரும்பாலும் போர்க்கலைகளை அதற்கென்று நிறுவப்பட்ட பாடசாலைகளில் கற்றிருக்க வேண்டும். காந்தளூர் பாடசாலை அதைப்போன்றதொரு பாடசாலையே.  மேலும் வீரர்கள் பல வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப்ப பயிற்சிகள் அளிக்கபட்டிருக்க வேண்டும். உதாரணமாக வலங்கை இடங்கை வீரர்களை கூறலாம்.

அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் புத்தகங்களில்  மற்றும் சினிமாவில் கூற/காண படுவதைப்போல் அதற்கென்று பிரத்யேகமாக நிறுவப்பட்ட சாலைகளில் படித்திருக்கலாம். அனுமானங்களில்தான் வரலாற்றை சித்தரிக்க வேண்டியுள்ளது. :)

எனினும் பெரும்பாலான பாடசாலைகள் சமஸ்கிருதம் கற்றுக்கொடுப்பவை என்பது நமக்கு தெரிய வருகிறது. தமிழ் பாடசாலைகள் எதுவும் இருந்திருக்கவில்லையா, இல்லையெனின் தமிழ் எவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டது என்பது கிட்டவில்லை. இது வருத்தத்திற்குரிய விடயம்.

ராஜேந்திர சோழர் மற்றும் அவரை தொடர்ந்து அரசாட்சி புரிந்தவர்கள் கொடுத்த நிவந்தங்கள் பற்றி மற்றொரு வலைப்பதிவில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.






Tuesday, July 9, 2013

கலிங்கத்துப்பரணி - ஒரு அறிமுகம்

வரலாறு சம்பந்தமான புத்தகங்களில் பிரதானமானதாக இருப்பது அன்றும் இன்றும் என்றும் பொன்னியின் செல்வனே.பொன்னியின் செல்வன் படித்து முடித்தவர்கள் வழக்கமாக சில காலம் வரலாறு சம்பந்தமான நூல்களில் அடுத்து என்ன படிப்பது என்று திணறுவதுண்டு. ஆம். எனக்கும் அந்த திணறல் ஏற்ப்பட்டது. அந்த சமயத்தில் தான் கடல் புறா கையில் சிக்கியது. சாண்டில்யனின் அவர்களின் கை வண்ணத்தில் உருவான மிகச்சிறந்த புத்தகம். அதிலும் முதல் பாகம் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாத ஒன்று.

அப்புத்தகத்தை நம் திரைக்கலைஞர்கள்  ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. முதல் பாகத்தில் தோன்றும் அநபாய சோழன் நம்மை கவர்ந்திழுக்க கூடிய வகையில் உருவாக்கி இருப்பார். இப்படியே எழுதி கொண்டு போனால் அது கடல் புறா பற்றிய விமர்சனம் போல் ஆகிவிடும். சிறுவனாகிய எனக்கு அந்த தகுதி கிட்டிவிட்டதாக கருதவில்லை. விடயத்திற்கு வருவோம். அந்த அநபாயன் தான் சோழ நாடு அரசனில்லாமல் தவித்த போது சோழ நாட்டை பிற மன்னர்கள் கவராமல் அரியணை ஏறி காப்பாற்றியவன். ஆம். அநபாயனே முதலாம் குலோத்துங்கன் ஆவான். இதைப்பற்றி ஏற்கனவே ஒரு சில வலைப்பதிவுகள் எழுதி விட்டேன்.

சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர்கள் ராஜ ராஜனும் ராஜேந்திரனுமே. முதலாம் குலோத்துங்கனும் அவர்களுக்கு நிகராக சோழ நாட்டை ஆண்டவன். சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனுடைய ஆட்சி காலத்தில் கவிஞர் சயங்கொண்டார் அவர்களால் அரங்கேற்றப்பெற்றதே கலிங்கத்துப்பரணி.

குலோத்துங்கன் தனது ஆட்சி காலத்தில் புரிந்த அரும் பெரும் சாதனைகளுள் ஒன்றாக தென் கலிங்கத்துடன் போரிட்டு அந்நாட்டை சோழ வள நாடுடன் இணைத்தமையை குறிப்பிடலாம். இப்போரை பற்றியும் அப்போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் குலோத்துங்கனின் அரசவைப்புலவர் ஜெயங்கொண்டார் இயற்றியதே கலிங்கத்துப்பரணி.

பரணி என்பது போர்க்களங்களில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றியடைபவர்களை புகழ்ந்து பாடுவதாகும். இதை நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சமீபமாக அப்புத்தகத்தின் பிரதி ஒன்று நண்பன் மூலம் கிடைத்தது.

புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

போர் பகுதி இன்னும் படிக்கவில்லை. இது வரை படித்ததில் குலோத்துங்கன் பெருமையே போற்றப்படுகிறது. படித்த வரை எனக்கு பிடித்த வரிகளை கீழே எழுதியுள்ளேன்.

                    "பனி ஆழி உலகு அனைத்தும் 
                     பரந்த கலி இருள் நீங்க 
                     தனி ஆழி தனை நடத்தும் 
                     சய துங்கர் வாழ்க"

பொருள்(நான் புரிந்து கொண்டது):
பனி சூழ்ந்த உலகத்தில் எதிர் வரும் பொருட்கள் எப்படி ஒருவனின் கண்ணுக்கு புலப்படாதோ அது போல் கலி சூழும் உலகத்தில் நாளை என்ன நடக்கும் என்று புலப்படாது.

எளிமையாக கூற வேண்டும் என்றால் சோழ நாடு உள்நாட்டு கலகத்தாலும், சிற்றரசர்களின் புரட்சியாலும், எதிரிகளின் படைகளாலும் சூழப்பட்டு எதிர்வருவது என்னவென்று தெரியாமல் தவிக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருளை நீக்கி, சூரியனாய், சுடர் விடும் விளக்காய் வருகிறான் குலோத்துங்கன்.

தொடரும்....

Monday, May 27, 2013

கிருமி கண்ட சோழன் - தொடர்ச்சி

வரலாற்றை சற்றே உற்று நோக்கினால் ராஜேந்திரனும் அவரது புதல்வர்களும் வைணவ நெறிகளை வெறுத்து ஒதுக்கியதாக வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே நமது பட்டியல் மேலும் சுருங்குகிறது. நமது முன் எஞ்சியிருப்பவர்கள் அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமன்  மற்றும் இரண்டாம் குலோத்துங்கன்.

இந்நால்வருள் அதி ராஜேந்திரனின் மரணத்தைப்பற்றி ஏற்கனவே ஒரு வலைப்பூ எழுதப்பட்டுள்ளது. அரியாசனத்தில் அமர்ந்து சில திங்கள்களே ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுக்கலவரங்கள் மிகுந்திருந்ததாகவும், அதை கீழை சளுக்க மன்னன் தனது படைகளுடன் வந்திருந்து அடக்கினான் என்றும் அதி ராஜேந்திரனை ஆட்சியில் அமர்த்தினான் எனவும் பில்ஹனர் கூறுகிறார்.

இந்த உள்நாட்டுக்கலவரங்கள் தனக்கு கிடைக்க வேண்டிய வேங்கி நாடு தனக்கு கிடைக்காததால் அநபாயன் (எ) முதலாம் குலோத்துங்கன் செய்த சூழ்ச்சியே என்று கூறப்படுகிறது. மேலும் அவன் மரணத்தை சுற்றியும் மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. கீழை சளுக்கன் தனது மைத்துனனை ஆட்சியில் அமர்த்திவிட்டு 6 மாதங்கள் சோழ நாட்டிலேயே தங்கியிருந்து கலவரங்கள் ஓய்ந்தவுடன் வேங்கி திரும்பினான் என்று கூறப்படுகிறது. அவன் அப்புறம் சென்ற சில நாட்களில் அதி ராஜேந்திரன் இறந்துபட்டான். இம்மரணம் உள்நாட்டுக்கலவரங்களால் ஏற்பட்டிருக்ககூடும் அல்லது அநபாயனின் சூழ்ச்சியால் நிகழ்ந்திருக்கலாம் அல்லது இயற்கையாகவே மரணம் சம்பவித்திருக்கலாம்.

உள்நாட்டு கலவரங்கள் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் இரண்டாக இருக்கலாம்.
ஒன்று, சோழ நாட்டுடன் தங்களை இணைத்துக்கொண்டு அரசனுக்கு கப்பம் செலுத்தி வந்த சிற்றசர்களுள் சில பேர் அரசனுடைய முடிவுகளிலோ அல்லது கொள்கைகளிலோ மாறுபட்டிருக்கலாம். அதனால் உள்நாட்டு கலகம் நிகழ்ந்திருக்கலாம்.

இரண்டு, மத நெறிகளில் மன்னன் கடைப்பிடித்த கொள்கைகள் காரணமாக இருக்கலாம். பன்நெடுங்காலம் கடந்த பின்பும் இந்த அவல நிலை தொடர்கிறது. மத நெறிகள் என்று பார்த்தோமானால் அக்காலகட்டத்தில் இருந்த மதங்கள் அல்லது நெறிகள் இரண்டே இரண்டு தான். சைவமும் வைணவமும். பௌத்தம் இருந்து வந்தாலும் பெரும்பான்மையை இழந்து சிறுபான்மையராய் இருந்து வந்த காலம் அது.

இரண்டாவது காரணத்தின் படி பார்த்தால், சைவர்களும் வைணவர்களும் கிளர்ச்சியுற்று உள்நாட்டுகலகம் நிகழ்ந்து, மன்னன் அதை அடக்க முன்வந்து ஒரு தலை பட்சமாய் நடந்திருந்து மற்றொரு தரப்பினிடம் எதிர்ப்பை சம்பாதித்திருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு, அத்தரப்பினர் மன்னனை சதியில் வீழ்த்தியிருக்கலாம்.

அல்ல இப்படியும் இருக்கலாம். இது ஒரு மித மிஞ்சிய கற்பனையாகக்கூட இருக்கலாம். தங்கள் தரப்பில் வாதாடிய மன்னர் இச்சமயம் மாண்டால் பழியை மற்றொரு தரப்பினர் மீது போட்டுவிட்டு அவர்களை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கலாம். அரசியலில் சூழ்ச்சிகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமில்லை. இதை சற்றே உற்று நோக்கினால், ராமானுஜர் சம்பவத்துடன் ஒற்றுப்போவது தெரியும்.

இதுவாக இருக்கலாம் என்பது என்னுடைய பார்வை. கவிகளும் ஆய்வாளர்களும் கல்வெட்டுகளும் நமக்கு உண்மையை தெளிவாக உரைக்கவில்லை. எனவே நமது கற்பனையை சற்றே தூண்டிவிட வேண்டியதிருக்கிறது.

எதைப்பற்றி வேண்டுமானால் தவறாக எழுதலாம். ஆனால் வரலாற்றை பற்றி எழுதும் பொது ஒருவன் கவனத்துடன் இருப்பது நல்லது. புகழ்ப்பெற்ற மன்னர்களை மக்கள் முன் குற்றவாளிகளாக முன் நிறுத்தமுடியாது. இவ்வலைப்பூவில் கூறப்பட்டிருப்பது எனது எண்ணங்களே ஆகும். வாசகர்கள் மனம் கோணாதபடி எழுத முயற்சிக்கிறேன்.

கிருமி கண்ட சோழன் குலோத்துங்கனாக இருக்குமோ என்பதை பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...

Wednesday, May 15, 2013

கிருமி கண்ட சோழன் - ஒரு எளியவனின் பார்வையில்

கிருமி கண்ட சோழன் என்பது இன்று வரை யார் என்று தெளிவான ஒரு முடிவிற்கு வரலாற்று பேராசிரியர்களால் வரவியலவில்லை. எனினும் இப்பெயர்க்கு பின்னால் நடைப்பெற்ற சம்பவங்கள் இலை மறை காயாக ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றை பொருத்தவரை மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் என்று நாம் மூவேந்தர்களையும் பல்லவர்களையும் கூறலாம். இவற்றுள், பாண்டியர்களும் பல்லவர்களும் பல மதங்களை கடைப்பிடித்திருக்கின்றனர்.

களப்பிரர்களின் ஆட்சி முடிவுற்றதை அடுத்து தமிழகத்தை பல்லவர்களும் பாண்டியர்களும் ஆட்சி புரியத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் இவ்விருவரும் சமண மற்றும் பெளத்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர். மலைகளில் எஞ்சி நிற்கும் சில ஓவியங்களும் சிற்சில சிற்பங்களுமே இதற்க்கு அத்தாட்சியாக எஞ்சியிருக்கின்றன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இந்த காலகட்டத்தில் இருந்திருக்கின்றனர். அவர்கள் முறையே சைவர்கள், வைணவர்கள் என்கிறோம் இன்றுவரை. சைவமும் வைணவமும் இருவேறாகத் தழைத்தோங்கின.

இவர்கள் தத்தம் நெறிகளில் இருக்கும் சிறந்த கொள்கைகளை மன்னர்களுக்கும் அவர்தம் மக்களுக்கும் எடுத்துரைத்து சைவ நெறிகளுக்கும் வைணவ நெறிகளுக்கும் மாற்றினர்.

பாண்டியர்களும் பல்லவர்களும் சமணம் மற்றும் பௌத்த நெறிகளை பின்பற்றினர். சேரர்கள் இதற்கு ஒரு படி மேல் சென்றுவிட்டனர் என்றே கூறலாம். ஏன் என்றால் பௌத்தமும் சமணமும் பரத கண்டத்தில் உதித்த மதங்கள். ஆனால் சேர மன்னர்களுள் ஒருவன் முஸ்லிம் மதத்தை தழுவியதாக வரலாறு கூறுகிறது.

ஆனால் சோழர்கள் மட்டும் விதிவிலக்கு. ஆம். இடைக்கால சோழர்கள் ஆட்சியை நிறுவிய விஜயாலயன் முதல் இறுதியாக ஆண்ட மூன்றாம் ராஜேந்திரன் வரை சைவ நெறியையே கடைப்பிடித்தனர்.

பொதுவாக மன்னர்கள் எம்மதத்தை கடைப்பிடிக்கிறானோ மக்களும் அம்மதத்தையே கடைப்பிடிப்பர். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

ஆயினும் மன்னர்கள் தம்மதத்தை மக்கள் மீது திணிப்பவர்களல்ல. எனினும் சில மன்னர்கள் இதற்கு விதிவிலக்கு.

கிருமி கண்ட சோழன் சம்பவத்திற்கு வருவோம். சோழர்கள் சைவ நெறியை கடைப்பிடித்தாலும் பிற மதங்களை வெறுத்தொதுக்கவில்லை.சோழ நாட்டில்  வைணவமும், பௌத்தமும் கடைப்பிடிக்கப்பட்டது. பெளத்த விகாரைகளும்  வைணவ விண்ணகரங்களும் சோழ மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டன.

எனினும் ஆங்காங்கே சமய பூசல்கள் நடைபெற்றிருக்ககூடும்.

கிருமி கண்ட சோழன் என்னும் பெயருக்கு பின்னால் இருக்கும் சம்பவம் இதுதான். வைணவ மத நெறிகளை மக்களிடையே பரப்பி அதில் இமாலய வெற்றி கண்டவர் ராமானுஜ சுவாமிகள். இவர் ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு வைணவ நெறிகளை பரப்பி வந்தார்.

வைணவம் எதிர்பார்த்ததை விட அசுர வளர்ச்சியை அடையத்தொடங்க சைவ மதத்தை சார்ந்தவர்கள் சோழ மன்னனிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தனர். ராமானுஜரை அரசவைக்கு வரவழைத்து சைவ வல்லுனர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுத்தி சைவமே பெரியது என்று கூறிவிடலாம் என்று முடிவு செய்திட்டு, ராமானுஜருக்கு தகவலனுப்ப, ராமானுஜரின் சீடர்கள் இதில் ஏதேனும் திட்டமிருக்கலாம் என்று நினைத்து, ராமானுஜரிடம் சென்றிட வேண்டாமென்று கூறுகின்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட ராமானுஜர் ஹொய்சள (இன்றைய கர்நாடக மாநிலம்) நாட்டுக்கு செல்கிறார். இதையடுத்து, கூரத்தாழ்வார், தாமே ராமானுஜர் என்றுரைத்து அரசவையில் தர்க்கத்தில் ஈடுபடுகிறார். திருமாலே உயர்ந்தவன் என்று சைவப்பெரியோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கிறார். எனினும் அவருடைய கண்களும் அவருடன் வந்த பெரிய நம்பி அவர்களுடைய கண்களும் பறிக்கபடுகின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து, இதற்கு பின்னால் இருந்தவன் கிருமியால் ஆட்கொள்ளப்பட்டு மாள்கிறான்.

முதலில் கிருமி கண்ட சோழன் என்பது சோழ மன்னனை குறிக்கிறதா அல்ல சோழ நாட்டில் இருந்த சிற்றரசர்களுள் ஒருவனை குறிக்கிறதா என்பதே தெளிவுபடுத்தப்படவில்லை.

ராமானுஜர் வாழ்ந்த காலம் 1017 முதல் 1137 வரை. அதாவது 120 ஆண்டுகள். இந்த 120 ஆண்டுகளுக்குள், சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கள் - முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன்  ஆகியோர் ஆவர். இவர்களுள் யார் அந்த கிருமி கண்ட சோழனாக இருக்கக்கூடும் என்று பார்த்தால் எஞ்சுவது அதி ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோர் ஆவர்.

தொடரும்....

Tuesday, April 23, 2013

தில்லை கோவிலுடன் தென்னிந்திய அரசாங்கங்களின் பிணைப்பு - பகுதி 2

தொடர்கிறது...

முதலாம் ராஜேந்திரன்:

கங்கையும் கடாரமும் கொண்டவன். சோழ நாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றவன். இம்மன்னனைப்பற்றி எழுத வேண்டுமென்றால் எழுதி கொண்டே போகலாம்.

தில்லையுடனான ராஜேந்திர சோழரின் பிணைப்பை முடிந்தவரை விரிவாக எழுத முயற்சிக்கிறேன். ராஜேந்திர சோழர் காலத்தில்தான் சோழர்களுடைய தலைநகரம் கங்கை கொண்டசோழபுரம் என்னும் நகரத்திற்க்கு மாற்றப்பட்டது.

இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

அவற்றுள் முதன்மையானது சோழர்களின் பரம வைரிகளான மேலை சளுக்கர்களின் நாட்டிற்க்கும் சோழ நாட்டிற்க்கும் இடையேயான தூரத்தை குறைப்பது. அதாவது துங்கபத்ரை நதிக்கரை வரை நீண்டிருந்த சோழ நாட்டிற்க்கும் அவ்வாற்றுக்கு அப்புறம் அமைந்திருந்த சளுக்கர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை குறைப்பதற்க்கு மேற்க்கொள்ளப்பட்டதே இதற்கு முதன்மையான காரணமாக இருந்திருத்தல் வேண்டும்.

சளுக்கர்களின் தலைநகரமானது மான்யகேடம் என்னும் நகரமாகும். இந்நகரம் சத்யாஸ்ரேயனின் ஆட்சிக்காலத்தில் ராஜ ராஜ சோழரால் தரைமட்டமாக்கப்பட்டது. இதை அடுத்து இரு நாட்டினருக்கும் இடையேயான பகை முற்ற தொடங்கியது.

தெற்கே பாண்டியர்களின் நாடு சோழர்களிடம் முற்றிலும் அடிப்பணிந்திடவும் ராஜேந்திரரின் கவனம் வடக்கு நோக்கி நகர்ந்தது. சளுக்கர்கள் சோழ  நாட்டுக்குள் நுழைந்திட்டால் தஞ்சையிலிருந்து படைகள் எல்லையை அடைந்திட நேரம் அதிகம் ஆகிடும் என்பது ஒன்று.

ஒற்றர்கள் சளுக்க நாட்டிலிருந்து சேகரித்து வரும் செய்திகளை  அரசதிகாரிகளை சந்தித்து கூறுவதற்க்கும் எளிது என்பது இரண்டாவது. அதாவது சளுக்க நாட்டிலிருந்து தலைநகரத்தை அடைய  முன்பை விட ஒரு நாள் குறைவாக தேவைப்படும்.

இவ்விரண்டு மட்டுமே காரணங்களல்ல என்று மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திட விரும்புகிறேன்.இவ்விரண்டைத்தவிர மேலும் சில காரணங்கள் உண்டு. அதைப்பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்....

வாசகர்கள் இது வரை ராஜேந்திர சோழரின் தில்லை பிணைப்பை பற்றி ஒரு வரி கூட இடம்பெறவில்லை என்று நினைக்கலாம். வாசகர்களின் பொறுமையை இது வரை கூறிய தகவல்கள் சோதித்திருக்காது என்று திடமாக நம்புகிறேன்.

Wednesday, February 27, 2013

சங்கதாரா - ஒரு சிறிய விமர்சனம்

சமீபமாக சங்கதாரா என்னும் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் ஆதித்ய கரிகாலன் கொலை பற்றியது. வரலாற்றில் சில மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. அவற்றுள் ஆதித்ய கரிகாலன் கொலையும் ஒன்று. இக்கொலையை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் ஆசிரியர் நமக்கு வழங்கியுள்ளார். இப்புத்தகத்திற்கு ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளது அவருடைய எழுத்து நடையில் தெரிகிறது.

இப்புத்தகத்திற்க்காக  ஆசிரியர் பல சான்றுகள் வைத்துள்ளதாக கூறியுள்ளார். எனினும் சரித்திரத்தில் நீங்கா புகழ்ப்பெற்ற ஒரு மன்னனை சுற்றி கதைக்களம் அமைந்திருக்கின்றபோது எழுத்தாளர் சிறிது கவனத்தை கடைப்பிடிதிருக்கலாமோ என்றே எண்ணத்தோன்றுகிறது,

இப்புத்தகத்தில் அருள்மொழிவர்மர் (ராஜ ராஜ சோழன்) கி .பி 956 ஆம் வருடம் பிறந்ததாக ஒரு தகவல் தரப்பட்டுள்ளது. இதுதான் என்னை இந்த வலைப்பதிவு எழுதத்தூண்டியது. ஒரு வருடம் தானே, அதில் என்ன குறை கண்டுவிட்டீர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆண்டுதான் புத்தகத்தின் ஆணிவேர். எனவேதான் அதைக்குறித்து எனது கருத்துகளை தங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.

ராஜ ராஜ சோழன் கி.பி 956 ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஆசிரியர் எடுத்துரைப்பதை நாம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். ராஜ ராஜ சோழன் கி.பி 986 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறார். அப்படி என்றால் அவர் தனது 30 ஆம் அகவையில் ஆட்சிக்கு வருகிறார். ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 986-1012 என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1014 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் இறக்கிறார். அதாவது இந்த புத்தகத்தின் படி ராஜ ராஜ சோழன் தனது 58 ஆம் வயதில் சிவனடியை அடைகிறார்.

இது வரை வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் ஏற்ப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன.

ராஜ ராஜ சோழரின் திருக்குமரனான ராஜேந்திர சோழன் கி.பி 1012 ஆம் ஆண்டு சோழ சிம்மாசனத்தில் அமர்கிறார். தமிழ்நாட்டின் பொற்காலம் என்று வர்ணிக்கக்கூடிய ஆட்சியை கி.பி 1044 ஆம் ஆண்டு வரை அளிக்கிறார். இவர் இறக்கும் பொழுது இவருடைய அகவை 82 என கல்வெட்டுகளில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கி.பி 1044 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழரின் வயது 82 என்றால் கி.பி 1014 இல் அதாவது ராஜ ராஜ சோழர் இறக்கும் பொழுது ராஜேந்திர சோழரின் வயது சரியாக 52.

இரு பத்திகளுக்கு முன்னர் தான் ராஜ ராஜ சோழரின் வயதை யாம் கூறியிருந்தோம். அதாவது தனது 58 ஆம் வயதில் அவர் சிவனடியை அடைந்ததாக கூறியிருந்தேன். அதே வருடத்தில் ராஜேந்திர சோழரின் வயது 52. அதாவது தந்தைக்கும் மகனுக்கும் வெறும் 6 வயது வித்தியாசம். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

அடுத்த புத்தகத்தில் இதற்கான விடையை அவர் அளிக்கக்கூடும். எனினும் வருடம் தப்பாக குறிப்பிடப்பட்டுள்ளம்மையால் இப்புத்தகத்தின் வாயிலாக ஆசிரியர் கூறவரும் அனைத்துமே சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

ஆனால் புத்தகம் நல்ல விறுவிறுப்பாக உள்ளது என்பது ஒத்துக்கொள்ளபடவேண்டிய உண்மை. வாசகர்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்பதி எனக்கு எந்த ஐயமும் இல்லை.

வாசகர்களின் கருத்தை எதிர்நோக்கி ....

Saturday, January 26, 2013

தில்லை கோவிலுடன் தென்னிந்திய அரசாங்கங்களின் பிணைப்பு - பகுதி 1

ஒரு சிறிய முன்னோட்டம் 

தில்லை சிற்சபேசனின் இருப்பிடம். சைவர்களின் பிரதான வழிப்பாட்டுத்தலம். சென்னையில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ளது. இதைப்போன்று தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி இந்த வலைப்பதிவை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.

இந்த வலைப்பதிவு மட்டுமில்லாது இன்னும் 2 அல்லது 3 வலைப்பதிவுகளில் இக்கோயில் தென்னிந்திய அரசாங்கங்களுடன் எப்படி பிணைந்திருந்தது என்பதை எழுதவிருக்கிறேன். மிகவும் முக்கியமான நிகழ்வுகளை அதாவது என் மனதில் அழியாத வண்ணம் பதிந்திருக்கும் நிகழ்வுகளை முதலில் எழுதிவிடுகிறேன். இது சம்பந்தப்பட்ட வலைப்பதிவுகள் 2 அல்லது 3 உடன் நின்றுவிடும் என்பது என்னுடைய தோராயமே. இது மேலும் நீளும் என்றே நினைக்கிறேன்.

தில்லை நடராஜப்பெருமான் 


சோழர்களின் தில்லை பிணைப்பு

இக்கோயில் அநேகமாக மூவேந்தர்களும் போற்றுதற்குரிய தலமாக இருப்பினும் சோழர்களே இச்சைவத்திருக்கோயிலின் வரலாற்றில் பிரதான இடம் வகிக்கிறார்கள்  என்றே கூறலாம். இதற்கு முழுமுதற்காரணம் சோழர்களின் முடிசூட்டுவிழா சிற்றம்பலத்தில் நடராஜரின் முன்னேதான் நடைபெறும் என்பதே ஆகும்.

யாருக்கும் வணங்காமுடியாக விளங்கும் சோழ நாட்டரசன் தில்லை வாழ் அந்தணர்களுக்கு முன் தலை வணங்கி தன்னுடைய முடி (கிரீடம் ) தரிப்பதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்த கோயிலுடன் மிகப்பெரும் அளவில் சம்பந்தப்பட்ட சோழ அரசர்கள் முதலாம் பராந்தகன், இரண்டாம் குலோத்துங்கன். இவர்களைத்தவிர சோழன் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் இரு மாமன்னர்கள் - முதலாம் ராஜ ராஜன்  மற்றும் முதலாம் ராஜேந்திரன்.

முதலாம் பராந்தகன்

சோழ நாட்டை ஒரு உன்னத நிலைக்கு எடுத்துச்செல்ல முயன்று அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றவர் முதலாம் பராந்தகன். இவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ வள நாடு தெற்க்கே பாண்டியர்களின் ராஜ்ஜியத்தையும் வடக்கே காஞ்சிபுரத்தையும் எல்லையாக கொண்டிருந்தது. தன வாழ்நாளில் பெரிதும் சிறிதுமாக பல போர்களை இவர் கண்டிருப்பினும் கோயில் திருப்பணிகளை மறந்துவிடவில்லை. இப்பராந்தகன்தான்  தில்லை அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தவன். இச்செய்தி ஆனைமங்கல செப்பேடுகளிலும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் காணப்படுவதாக முனைவர் சதாசிவ பண்டாரத்தார் தனது பிற்காலச் சோழர் புத்தகத்தில் எடுத்துரைத்துள்ளார்.

பொன்னம்பலம் 


மேலும்
                வெங்கோல் வேந்தன் தென்னாடும்மீழமும் கொண்டதிறற்
                செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன்
                பொன்னணிந்த 
                அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலம் 
என்று இவரது திருமகனார் கண்டராதித்த சோழன் தான் பாடிய திருவிசைப்பாவில் பொன் வேய்ந்த சிற்றம்பலம் பற்றி இவ்வாறு விளித்துள்ளார்.

முதலாம் ராஜராஜன்:

சோழன் என்று சொன்னாலே நம் மனதினில் தோன்றும்  சில பெயர்களுள் ராஜ ராஜ சோழனும் ஒருவன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தன்னை ஆட்சிக்கட்டிலில் பார்க்க விரும்பிய போதிலும் தனது சிறிய தந்தையாரான மதுராந்தகருக்கு அரியணையேறும் அவா இருந்ததாலும் உள்நாட்டுக்கலகத்தை தவிர்க்க வேண்டியும்  16 வருடங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது காலத்தை கழித்தவர்.

உத்தம சோழரின் ஆட்சிக்காலத்தில்தான்  தில்லை மூவாயிரமவர் கை சற்று ஓங்கியது என்று கூறலாம். சைவத்தின் மீது அளவற்ற பற்று (சில அரசர்கள் கொண்டிருந்தது வெறி என்றும் கூறலாம்)  கொண்டவர்கள் சோழர்கள். அப்பேர்பட்டவர்களின் வழிவந்த உத்தம சோழரின் காலத்தில்தான் நடராஜப்பெருமானின் புகழ்பாடும் திருமுறை, தில்லை கோயிலில் கரையான் அரிக்க கிடந்தது. இவ்விடயம் உத்தமருக்கு தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.

இத்திருமுறையை கரையான்களிடமிருந்தும் தில்லை அந்தணர்களிடமுமிருந்தும் மீட்டெடுத்து அதை தொகுத்த பெருமை ராஜ ராஜனையும்  நம்பியாண்டார் நம்பியையுமே சேரும். இன்றளவும் கோயிலில் திருமுறை காட்டிய விநாயகர் திருவுருவத்தை நாம் காணலாம். மேற்கு வாயில் வழியாக (வாயில் என்பது கோபுரம் என்கின்ற தொனியில் இங்கு குறிப்பிடப்படவில்லை) உள்ளே நுழையும் போது இவரை காணலாம். இவ்விநாயகரே நம்பியாண்டார் நம்பிக்கு திருமுறை இருக்குமிடத்தை சுட்டிக்காட்டினார்.

இக்கோயிலுடன் ராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோர் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதைப்பற்றியும்  மேற்கு கோபுரத்தைப்பற்றியும்  சில தகவல்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

                                                                                                                                       தொடரும்.....