Sunday, October 27, 2013

சோழ கங்கம் – முதற் பகுதி – ஒரு சிறிய விமர்சனம்

     நம்மில் பெரும்பாலானோருக்கு சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி கற்பனை செய்து எழுதப்பட்டதே இந்த சோழ கங்கம் என்ற புத்தகத்தின் முதற் பாகம்.

 

அந்த சம்பவம் இதுதான். முகமது கஜினி வட இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார். அதே சமயத்தில் தெற்கு இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் ஒரு மாவீரன் இந்தியாவின் வட கிழக்கு நாடுகளை நோக்கி தனது படைகளை செலுத்துகிறார். அந்த வீரன் வேறு யாரும் அல்ல. ராஜேந்திர சோழர். ராஜேந்திர சோழர் வடக்கு நோக்கி நகர்த்திய படைகள் கங்கை நீரை கொணர்வதற்கு மட்டும் அல்ல, கஜினியுடன் மோதுவதற்கும் தான் என்ற வாக்கில் புனையப்பட்டதே சோழ கங்கம் – முதற் பகுதி.

 

புத்தகத்தை பற்றி விமர்சிப்பதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம் சம்பவத்தைப்பற்றி. கஜினியுடன் மிகப்பெரிய படையுடன் போர் புரியக்கூடிய வல்லமை தென் இந்தியாவில் அன்று இருந்த இரு பெரும் சாம்ராஜ்யங்களான மேலை சளுக்கர்களுக்கும், சோழர்களுக்கும் உண்டு. எனினும் மேலை சளுக்க படைகள் அச்சமயத்தில்தான் சோழர்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். எனவே படை பலம் மற்றும் மீதமிருந்த படைகளின் உற்சாகமும் குன்றியிருக்கும். எனவே போர் நடந்திருந்தால் வெற்றி கிட்டியுருக்குமா என்று சந்தேகம்தான்.

 

சோழர்களும் கஜினியுடன் மோதியதாக எந்தவொரு வரலாற்று குறிப்பும் கிடைக்கவில்லை. மேலும் கஜினி வட இந்தியாவில் கிடைத்த செல்வங்களே போதும் என்று நினைத்து தெற்கு இந்தியாவில் படையெடுக்காமல் இருந்திருக்கக்கூடும். மேலும் கஜினியின் ஒற்றர்கள் சோழப்படைகளைப் பற்றியும் , மேலைசளுக்கப் படைகள் பற்றியும் உளவு பார்த்திருக்ககூடும். வட இந்தியாவில் நிலவிய கோஷ்டி மோதல்கள் தென் இந்தியாவில் அப்பொழுது அடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

 

 

வட மேற்கில் வேற்று நாட்டவன் தான் வணங்கும் கோயில்களை இடித்திருப்பது கண்டு ராஜேந்திர சோழர் தமது படைகளை அத்திசையை நோக்கி செலுத்தவில்லை. ஒரு மன்னனாக இருந்து யோசித்து பார்த்தால் அதில் சில நியாயங்கள் புலப்படுகின்றன. நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு பல வருடங்களாக திட்டங்கள் தீட்டியே கங்கை நீர் கொணர்தலுக்கு செய்ய வேண்டிய போர்கள், ஸ்ரீவிஜயம், கடார படையெடுப்புகள் நடந்திருக்க வேண்டும். இச்சமயத்தில் தெரியாத நாட்டில், அறியாத இடத்தில, படைபலம் தெரியாத ஒருவனுடன் மோதி படைகளை இழந்து, பல வருடங்களாக கண்டு வரும் கனவுக்கோட்டை தகர்வதை எந்த மன்னனும் விரும்ப மாட்டான் என்பதே உண்மை. 


சரி. வாருங்கள்.புத்தகத்தின் விமர்சனத்துக்குள் நுழைவோம். கஜினியுடன் தனது பெரும் படைகளை அணிவகுத்து கஜினியை வீழ்த்தி வெற்றி வேங்கைகளாக சோழப்படைகள் திரும்புவதே முதல் பாகம். என்னதான் கற்பனையாக இருந்தாலும் நாம் இந்த சம்பவம் நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதே நம்மை இந்த புத்தகத்தோடு ஒட்டவைக்கிறது. எனினும் இந்த புத்தகத்தை இரண்டாக பிரித்து தனித்தனியாக அச்சடித்திருக்கலாம். புத்தகத்தை கையில் பிடித்து தொடர்ச்சியாக அரை மணி நேரம் படித்தால் போதும். தோள்ப்பட்டை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. 

 

இப்புத்தகத்தை நான் வாங்கி பல மாதங்கள் ஆனாலும் ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்ததால் சற்றே தாமதமானது. அதற்குள் எனது நட்பு வட்டாரங்கள் புத்தகத்தின் விமர்சனத்தை அடுக்கினர். அவற்றின் தொகுப்பே இது. என்னதான் சம்பவத்தை சுவாரசியமாக கூறினாலும் சம்பவத்தில் பங்கு பெறும் மனிதர்களின் பெயர்களும் அவர்களின் நாடும் பல சமயத்தில் நமக்கு மறந்து போகின்றன என்பது மறுக்க முடியாத விமர்சனமாக உள்ளது. புத்தகத்தை வாசித்த அனைவரும் கூறுகின்றதாக உள்ளது.

 

முதல் 200 பக்கத்தில் சுமார் 150-160 கதாப்பாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப்படுத்திவிடுகிறார். அதை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் ஆங்காங்கே பக்கங்களில் கீழ் கொடுக்கப்படும் அடிக்குறிப்புகளில் ஆசிரியரின் கடும் உழைப்பு புலனாகிறது. சில சம்பவங்களை படிக்கும்பொழுது நமக்கு உண்மையாகவே மயிர்க்கூச்செரிதல் ஏற்படுகிறது. இந்த சம்பவம் நடந்திருந்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்று நமக்கு தோன்றசெய்வதில் ஆசிரியர் வெற்றியடைகிறார்.

 

     ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் புத்தகத்தின் முதல் பாகம் சில சமயங்களில் ஏமாற்றத்தையும், சில சமயங்களில் சுவாரசியமாகவும், சில சமயங்களில் ஏக்கத்தையும் வரவழைக்கின்றன. ஆசிரியரின் முதல் முயற்சி என்பதை புத்தகத்தின் அளவில் மட்டுமல்ல, புத்தகத்தின் பக்கங்களிலும் நம்ப முடியவில்லை. முதல் முயற்சியிலே 1500 பக்கங்கள் எழுதுவது சாத்தியமல்ல. ஆனால் சக்திஸ்ரீ அவர்கள் அதில் மட்டுமல்லமால் வாசகர்களையும் வெற்றி கண்டிருக்கிறார்.

Tuesday, October 22, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி இரண்டு

சத்யாஸ்ரேயனுடனான ராஜ ராஜரின் போர் மிகவும் உக்கிரமானதாக இருந்திருக்க வேண்டும். சளுக்கர்களிடம் சோழர்கள் அடைந்த தோல்வி அவர்களை உசுப்பேற்றியிருக்க வேண்டும். மேலும் ராஜ ராஜர் தனது கனவான தஞ்சை பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்க தொடங்கியிருந்தார். அதற்கு தேவையான பொருட்களும், அடிமைகளையும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் என்பதும் ஒரு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.

சத்யாஸ்ரேயருடைய கல்வெட்டு ராஜராஜர் ஒன்பது இலட்சம் கொண்ட படையோடு வந்து வெகு உக்கிரமாக போர் புரிந்தனர் என்றும் இந்த மாபெரும் படைக்கு ராஜராஜரின் புத்திரன் ராஜேந்திர சோழர் தலைமை தாங்கியதாகவும் கூறுகிறது. சளுக்கர்களை போரில் வீழ்த்தினாலும் அவர்கள் நாட்டை ராஜராஜர் தனது ஆளுமைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சளுக்க நாட்டில் ராஜ ராஜரின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்து, பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று புகழப்பெறும் முதலாம் ராஜேந்திர சோழரின் சளுக்க படையெடுப்புகளை பார்ப்போம்.

ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வரும் முன்னரே மேலை சளுக்கம் இரு மன்னர்களை இழந்துவிட்டது (சத்யாஸ்ரேயர் மற்றும் ஐந்தாம் விக்ரமாதித்யன்). இவர்களுக்கு பின் ஜெயசிம்மன் ஆட்சிக்கு வந்தார். ஜெயசிம்மனின் ஆட்சிக்காலத்தில் சளுக்க படைகள் எழுச்சிப்பெற்றன. ராஜ ராஜரின் காலத்தில் சோழர்களிடம் இழந்த தெற்கு பகுதிகளை மீட்டெடுத்தது. இக்கூற்றை பெல்லாரி மற்றும் இன்றைய மைசூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதாக இராசசேகர தங்கமணி தனது “முதலாம் ராஜேந்திர சோழன் புத்தகத்தில் கூறுகிறார். மேலும் ஜெயசிம்மன் சோழ யானைக்கு சிங்கம் போன்றவன் என்ற புனைப்பெயர் உடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலை சளுக்கரின் இந்த வெற்றி ராஜேந்திர சோழரின் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடக்கபெற்றிருக்க வேண்டும் என்பது ஜெயசிம்மனின் பெல்காம் கல்வெட்டு மூலம் உணரலாம். இக்கல்வெட்டு வரையப்பெற்ற ஆண்டு 1017.A.D.

ஜெயசிம்மனின் படையெடுப்பு சோழர்களின் படைகளை உசுப்பேற்ற ராஜேந்திரர் தனது படைகளை காஞ்சியில் திரட்டினார். சோழப்படைகள் முயங்கியில் சளுக்க படைகளை சந்தித்தது. சம பலம் பொருந்திய இரு படைகள் பொருதின. இறுதியில் சோழர்கள் வெற்றி பெற்றனர். இப்போர் 1020.A.D நடைப்பெற்றது.

     இந்த போரில் தோற்றாலும் ஜெயசிம்மன் விடாது கறுப்பு என்பதைப்போல் மீண்டும் படை திரட்டி துங்கபத்திரை நதிக்கு வடக்கில் உள்ள பகுதிகளை சோழர்களிடமிருந்து மீட்டெடுத்து தனது தெற்கு எல்லையாக துங்கபத்திரை நதிக்கரையை கொண்டார். துங்கபத்திரை நதியை தாண்டி சோழப்படைகளால் செல்ல முடியாததால் சோழர்களும் தங்களது வட எல்லையாக நதிக்கரையை கொண்டனர்.

     எனினும் போர் மற்றொரு இடத்தில, மற்றொரு விதத்தில் தொடர்ந்தது. அதற்கு மேலை சளுக்கர்களின் தாயாதிகளான கீழை சளுக்கதில் ஏற்ப்பட்ட குழப்பங்களே காரணம். இதைப்பற்றி ஏற்கனவே இரு வலைபூக்கள் எழுதப்பட்டுவிட்டன.
         

      வேங்கியில் நடந்த போர்களில் சோழர்கள் அரையன் ராஜராஜன் தலைமையிலான படைகள் மேலை சளுக்க படைகளை புறமுதுகிட செய்தன. வேங்கியில் சளுக்கர்கள் மற்றும் சோழர்களின் தலையீடு முதலாம் குலோத்துங்கர் ஆட்சிக்கு வரும் வரை நீடித்தது.


தொடரும்..



சோழ கங்கம்  முதற்பகுதி  - விமர்சனம் விரைவில் ..

Wednesday, October 16, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி ஒன்று

சோழர்கள் தங்கள் பரம வைரிகளாக கருதியது பாண்டியர்கள் என்றாலும் மேலைச்ச்சளுக்கர்களும் அவர்களது பரம எதிரிகளே. பாண்டியர்களுடனான இவர்களது விரோதம் நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்தது என்றாலும் சளுக்கர்களுடனான பகை 100-120 ஆண்டுகளே நீடித்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்தம சோழரின் காலத்திலிருந்து வீர ராஜேந்திரரின் காலம் வரை இந்த பகை நீடித்தது. இதில் மிகுந்த சுவாரசியமான விடயம் என்னவென்றால் வீர ராஜேந்திரர் தனது மெய்க்கீர்த்தியில் ஐந்து முறை மேலைச்ச்சளுக்கம் தன்னிடம் புறங்கண்டதாக குறிப்பிடுகிறார். இவரது காலத்தில்தான் இந்த பகை முடிவுற்றது. இதை அடுத்து வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.

முதலாம் பராந்தகரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பால் சோழ நாடு தனது வடக்கு பகுதிகளில் சிலவற்றை இழந்தது. காலஹத்தி வரை நீண்டு பரந்திருந்த சோழ நாடு ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பிற்கு பிறகு தனது வடஎல்லையாக திருவொற்றியூரை கொண்டிருந்தது. ராட்டிரக்கூடர்களிடம் கப்பம் செலுத்தும் சிற்றரசாக மேலை சளுக்கர்கள் அந்த சமயத்தில் இருந்தனர். மூன்றாம் கிருட்டினர் ராட்டிரக்கூடர்களின் அரசராக இருந்தார். மேலை சளுக்கம் இரண்டாம் தைலபரை அரசராக கொண்டிருந்தது.

அரிஞ்சயரும், சுந்தர சோழரும் சோழர்களை தோல்வியிலிருந்து சிறிது சிறிதாக மீட்டெடுத்தனர். இதற்கு பெரும் துணையாக இருந்தது ராட்டிரக்கூடர்களுக்கு பல பக்கங்களில் இருந்து இன்னல்கள் வந்ததே காரணம். மூன்றாம் கிருட்டினருக்கு பிறகு சரியான ஆளுமை இல்லாததாலும், வடக்கு எல்லையில் மாளவ நாட்டின் தொடர் படையெடுப்பாலும் அவர்கள் உருக்குலைந்தனர். இரண்டாம் கர்க்கர் (Karka II)  ஆட்சிக்காலத்தில் ராட்டிரக்கூடர்களின் நிலை இன்னும் மோசமடைந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டாம் தைலபர் இரண்டாம் கர்க்கரை கொன்று மேலை சளுக்க அரசை மீண்டும் நிறுவினார்.

அரசை மீண்டும் நிறுவியதோடல்லாமல், நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்த முற்பட்டார். அவர் தனது பிரதான எதிரியாக கருதியது ராட்டிரக்கூடர்களுக்கு பிறகு சோழர்களே. ஒரு எதிரி அழிந்த பின் மற்றொரு எதிரி மீது கண் பதிவது வியப்பல்லவே. சோழ நாடு இரண்டாம் தைலபரின் காலத்தில் மிக உன்னதமான நிலையில் இருந்தது என்று கூறமுடியவில்லை. ஏனெனில் அப்பொழுது ஆட்சியில் இருந்தது உத்தம சோழர்.

சோழ நாட்டின் மீது படையெடுத்த தைலபர் அதில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்ததாக கூறலாம். இந்த படைஎடுப்பைப்பற்றி எந்த குறிப்புகளும் நீலகண்டரின் “சோழர்கள் புத்தகத்தில் எனக்கு புலப்படவில்லை. இந்த படையெடுப்பும் ராஜராஜர் ஆட்சிக்கட்டிலுக்கு வருவதை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். இந்த போர் கி.பி 980 ஆம் ஆண்டு நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

ராட்டிரக்கூடர்களின் படையெடுப்பில் இருந்து சோழ நாடு முழுமையாக மீள்வதற்குள் பாண்டிய நாட்டின் கலகம், தைலபரின் படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்புகளிளிருந்து சோழ நாடு முழுமையாக மீண்டது ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில்தான். தைலபரின் கையில் தோல்வியை தழுவிய உத்தம சோழர் கி.பி 985 ம் ஆண்டு உயிர் துறந்தார். அதன் பிறகு சோழ நாடு தனது வரலாற்றின் போற்றத்தக்க அரசரை தனது சிம்மாசனத்தில் ஏற்றியது.

அருமொழிவர்மர் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் மேலை சளுக்கர்களுடன் போரிடாமல் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பாண்டிய நாட்டு கலகங்களிலும், வரலாற்றில் இன்னும் ஆய்வாளர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் காந்தளூர் படையெடுப்பிலும் தனது கவனத்தை செலுத்தினார். இந்த காலக்கட்டத்தில் இரண்டாம் தைலபர் இறந்துவிட சத்யாஸ்ரேயர் ஆட்சிக்கு வந்தார். காந்தளூர் படையெடுப்பு முடிந்தவுடன் சோழ நாடு தனது தகுதிக்கு சமமான சளுக்கர்களை சந்திக்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டது.

தொடரும்..

Wednesday, October 9, 2013

அதி ராஜேந்திரன் மரணம் – குலோத்துங்கன் காரணமா?

வரலாற்றில் சில மரணங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. உதாரணமாக ஆதித்யகரிகாலன் மரணத்தை கூறலாம். இதைப்பற்றி பல ஆசிரியர்கள் பற்பல விதமாக தங்கள் கற்பனைக்குதிரைகளை தட்டி தேவையானஅளவிற்கு எழுதிவிட்டனர். சில மரணங்கள் நமது பார்வையிலிருந்து விலகி விடுகின்றன. சில மரணங்களைப்பற்றி கதாசிரியர்கள் விளக்காமல் விட்டுவிடுவதுண்டு. சிலர் பட்டும் படாமல் எழுதுவர். இதில் அதிராஜேந்திரன் மரணமும் ஒன்று. இதைப்பற்றி ஏற்கனவே மற்றுமொரு மரணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு நீலகண்ட சாஸ்த்ரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை வாசித்தேன. வாசிக்கும் பொழுது என்னவோ தெரியவில்லை முதலாம் குலோத்துங்கரை பற்றி வாசிக்கவே தோன்றியது.

நம்மில் பெரும்பாலானோருக்கு சோழர்கள் என்றால் முதலாம் ராஜராஜரையும், முதலாம் ராஜேந்திரரையும் மட்டுமே பரிச்சயமாக உள்ளனர். ஆனால் இவர்களை தாண்டி சோழ நாட்டில் மேலும் சில புகழ் வாய்ந்த மன்னர்கள் இருந்துள்ளனர். என்னுடைய பார்வையில் மேற்கூறிய இருவருக்கடுத்து முதலாம் குலோத்துங்கரையே மிகவும் சிறந்தவர் என்று கூறுவேன்.

இப்பொழுது எனது மனதில் என்ன தோன்றுகிறது என்பதை வெளிப்படையாக கூறி விடுகிறேன். இந்த வலைத்தொடரயாவது முழுமையாக எழுதி முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தில்லை கோவிலைப்பற்றி எழுதிய வலைகளுக்கு பெரியதாக யாரும் படித்துவிடவில்லை. எனினும் எனது வலைகளில் சங்கதாரா பற்றிய விமர்சனமும், கலிங்கத்துப்பரணி பற்றிய முன்னுரையும் பெருவாரியான மக்கள் படித்திருக்கின்றனர் (நூறு என்பதே என்னைப் பொருத்தவரை பெருவாரியான மக்கள் தான். J)

குலோத்துங்கரின் இளமை எப்படி கழிந்தது என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எனினும் சோழர்கள் புத்தகத்தை வாசிக்க தொடங்கியவுடன் மேலும் சுவை மிகுந்த பல தகவல்கள் கிடைத்தன. அதில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்த வலையை நிறைவு செய்து விடுகிறேன்.

தனது தந்தை ராஜராஜ நரேந்திரர் இறந்தவுடன் வேங்கியின் அரசபீடத்தில் அமர்ந்தான் இருபது வயதே நிரம்பிய அபயன் என்கிற ராஜேந்திரன் (குலோத்துங்கரின் இள வயது பெயர்கள்). மற்றொரு வலையில் இவரது சிற்றப்பன் விஜயாதித்யன் இவரிடம் ஆட்சியை பறித்ததாக கூறியிருந்தேன். ஆனால் நீலகண்டர் குலோத்துங்கரே விரும்பி தனது சிற்றப்பனிடம் ஆட்சியை ஒப்படைத்ததாக கூறுகிறார். (பார்க்க பக்கம் எண்: 309 ஆங்கிலம்)

இதற்கு காரணமாக நீலகண்டர் கூறுவது இரு காரணங்களாகும்.
முதலாவது, வீரராஜேந்திரருக்கு பிறகு சோழ அரியணையில் வீற்றிருக்க போவது தானே என்கிற எண்ணம் குலோத்துங்கருக்கு வந்திருக்கவேண்டும் எனவும் அதற்கு உகந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ள இந்த காலத்தை உபயோகித்திருக்கக்கூடும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

இரண்டாவதாக, மேலை சளுக்க மன்னரான விக்ரமாதித்யனின் வேங்கி மற்றும் சக்கரகோட்டத்தின் படையெடுப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். புரியும் படி சொல்லவேண்டுமென்றால், விக்ரமாதித்யன் ஒரே சமயத்தில் கிழக்கு முகமாக வேங்கியையும் வடகிழக்கு முகமாக சக்கரகோட்டத்தையும் நோக்கி வந்திருந்தால், வேங்கி நாட்டு படைகள் சக்கரகோட்டத்தை நோக்கியும், சோழ படைகள் வேங்கியை நோக்கியும் நகர்ந்திருக்கக்கூடும். வேங்கி நாடு சக்கரகோட்டத்தை தனது வடஎல்லையாய் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

இதற்கு பிறகு நடந்த சில விஷயங்கள் தான் மேலை சளுக்கத்துக்கும் சோழர்களுக்கும் நடந்த தீராப்பகையை முடிவுக்கு கொண்டு வந்தது. அது பற்றியதே அடுத்த வலைப்பதிவு.