Sunday, July 13, 2014

எல் நினோ(El Nino) ஒரு பார்வை

சில நாட்களுக்கு முன் நாளிதழில் 2014 ஆம் ஆண்டு எல் நினோ வருடம் என்று கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. கடந்த வாரத்தில் பட்ஜெட் தாக்கலின் போது இதைப்பற்றி நிதியமைச்சர் எல் நினோ விவகாரத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதை பற்றி கூறுவார் என்று ஊடகங்களிலும் பேசினர். எல் நினோவிர்க்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று படித்ததின் விளைவே இந்த பதிவு.

முதலில் எல் நினோ என்றால் என்ன என்பதை எழுதுகிறேன். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் "Little Boy" அல்லது "Christ Child"  என்று அர்த்தம். 1600களில் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மீனவர்கள் பிசிபிக் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கடலின் வெப்பமானது அதிகமாவதை கண்டனர். இது ஒரு சீரான இடைவெளியில் நிகழ்வதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு வானிலை ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு டிசம்பர் மாதத்தில் இது நிகழ்வதால் எல் நினோ (El Nino) என்று பெயரிடப்பட்டது.

எல் நிநோவால் அமெரிக்க கண்டத்தின்  (North America & South America) பருவ நிலையில் சில பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கனடா மற்றும் அமெரிக்காவின் வட நாட்டில் அதிகமான வெப்பமும், ப்ளோரிடா(Florida) மாகாணத்தில் அதிக குளிர் மற்றும் ஓஹியோ (Ohio) மாகாணத்தில் வறட்சியும் நிலவும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க கண்டத்தை பாதிக்கும் ஒரு நிகழ்வு இந்தியாவின் பருவமழையை (Monsoons) எப்படி பாதிக்கும் என்ற சந்தேகம் வந்தது.

பிசிபிக் கடலில் அதிகரிக்கும் வெப்பம் கடலின் மேற்பரப்பில் உள்ள காற்றை பயணம் செய்வதை தடை செய்கிறது. இதன் காரணத்தால் இந்திய பெருங்கடலின் மேல் பருவமழைக்கு தேவையான மேகங்கள் உருவாவதில் சில தடைகள் ஏற்படுகின்றன. மழை தடைபடுகிறது. பஞ்சம்(Drought), பணவீக்கம்(Inflation) மற்றும் இன்ன பிற அத்தியாதிகளும் இணைந்து இந்தியாவை பஞ்ச பரதேசியாக உருவாக்குகிறது.

இந்தியாவில் 1997-98 ஆம் வருடத்தில் நிகழ்ந்த பஞ்சத்திற்கு எல் நினோவே காரணம். அந்த வருடம் ஏற்பட்ட எல் நினோவால் பூமியின் வெப்பம் 0.5 டிகிரி அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பஞ்சம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும்  உலக பொருளாதரத்திற்கு 30-45 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தையும் விளைவித்தது.

இந்தியா  மிக கடுமையான பஞ்சத்தை சந்தித்த 2002 ஆம் வருடமும் ஒரு எல் நினோ வருடமே. இதே போல் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பஞ்சங்கள் நிகழ்ந்த ஆண்டுகளில் எல் நினோவும் நிகழ்ந்திருக்கிறது. இந்த ஆண்டும் எல் நினோ ஆண்டு என்பதை பல நாட்டு வானிலை மையங்கள் உறுதிப்படுதியுள்ளதால் இந்த வருடமும் இந்தியாவில் பஞ்சம் நிகழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த வருடம் அதிகமாக பாதிக்கபடக்கூடிய நாடுகளில் இந்தியாவும் பிலிப்பைன்சும் தான் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் பொருளாதாரம் சற்றே பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அரிசி மற்றும் சக்கரையின் ஏற்றுமதி குறைவாக இருக்கும். இதனால் உலக அளவில் இப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கலாம். உள்நாட்டு சந்தையில் இப்பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைத்து விலையை மேலுமேலும் ஏற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்க முற்படலாம் என மத்திய அரசு மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

இயற்கையை தேவையான அளவு சீரழித்ததும் ஒரு வகை காரணம். உலகில் வாழும் கொடிய மிருகம் முதலையோ அல்லது பாம்போ அல்ல மனிதனே என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் சுற்றுசூழல் அமைச்சர் சில  நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கையில் இந்தியாவின் 25% நிலமானது பாலைவனமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். எதிர் காலத்தில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டாது என்பதன் சூசக வார்த்தைகளே இவை.

இந்த பதிவு எழுதும் தருணத்தில் இந்தியாவில் பஞ்சம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்னிந்தியாவில் 50 சதவீதமும் மேற்கு இந்தியாவில் 60 சதவீதமும் கிழக்கு இந்தியாவில் 65 சதவீதமும் சென்ட்ரல் இந்தியாவில் 70 சதவீதமும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தனது கருவூலத்தில் (Treasury) அதிகபடியான பணத்தை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அரசாங்கம் விவசாயிகளிடம் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பயிர்செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாக கூறபடுகிறது. எனினும் இம்முயற்சிகள் எடுபடுமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.

இதை பற்றி நான் தெரிந்து கொண்டதை விட குறைவானவற்றையே பதிவு செய்துள்ளேன். அதிகமாக எழுதி மொக்கை போட வேண்டாம் என்பதாலும் எனது பதிவுகள் சிறியனவாக இருப்பதையே விரும்புவதாலும் முடித்துகொள்கிறேன்.