Sunday, November 30, 2014

சுங்கம் தவிர்த்த சோழன் - The Chola King who abolished tolls

சுங்கம் தவிர்த்த சோழன் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பட்டமாகும். இப்பட்டத்திற்கு உரியவன் முதலாம் குலோத்துங்கன் ஆவான். அக்காலத்தில் வாணிபர்கள் வாணிபம் செய்ய ஊர் விட்டு ஊர் செல்லும் பொழுது செல்லும் வழியில் எடுத்து செல்லும் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படும். இன்றைய நாட்களில் விமான நிலையங்களில் அல்லது துறைமுகங்களில் விதிக்கப்படும் கஸ்டம்ஸ் என்பதை போன்றது.

இவ்வாறு விதிக்கப்படும் வரியானது எதற்கு பயன்பட்டிருக்கும் என்று நினைக்கும் பொழுது சில எண்ணங்கள் தோன்றியது.  இரு பெரிய ஊர்களுக்கு இடையே இருக்கும் பெருந்தூரமானது அக்காலங்களில் காடுகளையும் காடுகளில் மறைந்து வாழும் கொள்ளை கூட்டங்களையும் கொண்டிருக்கும். தங்களது பொருட்களை வாணிபம் செய்யப்படும் வாணிகர்கள் காட்டு விலங்குகளாலும் கொள்ளையர் கூட்டங்களாலும் இன்னலுக்கு உள்ளாயினர். இதை தடுக்கும் பொருட்டு காடுகளுக்கு நடுவே வீரர்கள் பாதுகாப்பு அளிக்க தொடங்கியிருப்பர். வேவு பார்ப்பதற்கும் வசதியாக இருந்திருக்கும். இன்றைய நாட்களின் ஊர்க்காவல் படையை போன்றது. :)

அவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களுக்கு தகுந்த சம்பளமும் இன்னபிற இத்யாதிகளும்(Sundries) அளிக்க வேண்டுமே. அதற்காக சுங்கச்சாவடிகள் (Tollgates) அமைக்கப்பட்டன. வணிகர்கள் எடுத்து செல்லும் பொருட்களுக்கு ஏற்பவோ அல்லது வண்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவோ வரிகள் விதிக்கப்பட்டன.

வசூலிக்கப்படும் இவ்வரிகள் பாதுகாவல் வழங்கும் வீரர்களின் சம்பளத்துக்கு மட்டும் அல்லாமல் இன்னபிற விஷயங்களுக்கும் உபயோகப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. உதாரணமாக அருகில் இருக்கும் கோவில்களில் சிற்சில செப்பனிடும் பணிகள், ஊர்க்கால்வாய்களை செப்பனிடும் பணிகளுக்கு உபயோகப்பட்டிருக்கும். அதாவது வசூலிக்கப்படும் சுங்கவரி மீது சுங்கசாவடிகளுக்கு அருகில் இருக்கும் கிராம சபைகளுக்கு அதிக உரிமை இருந்திருக்கக்கூடும். அதாவது கிராம சபைகள் சிற்சில பணிகளுக்கு தேவையான பணத்தை அல்லது நாணயங்களை கிராம சபையே வைத்திருக்கும். சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கிராம சபைகள் சோழ நாட்டின் தலைநகரத்தை  தங்களது தேவைக்கு அதிகமான செலவினங்களுக்கு மட்டுமே அணுகியிருக்கக்கூடும்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் பயன்பட்டு வந்த சுங்கவரியை ஏன் முதலாம் குலோத்துங்கன் ஏன் மொத்தமாக ஒழித்தார். சோழ நாட்டில் நிலவிய பல்வேறு உள்நாட்டு குழப்பங்களை மறைக்க குலோத்துங்கர் இதை ஒரு சூழ்ச்சியாக உபயோகித்தாரா? சுங்கவரியை முற்றிலும் ஒழித்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா? இன்னும் தெளிவான சிந்தனைகள் கிடைக்கவில்லை. தெறிக்கும் சிந்தனைகள் அடுத்த பதிவில்...

தொடரும்....

Tuesday, October 21, 2014

கிண்டில் பேப்பர்வைட்டில் படிக்கும் அனுபவம் (A Reading Experience on Kindle Paperwhite)

வெகு நாட்களாக தமிழ் புத்தகங்களை மட்டுமே வாசித்து வருகிறோமே. அதுவும் குறிப்பாக வரலாற்று புதினங்களை மட்டுமே படித்து வருகிறோமே .. எப்பொழுதுதான் ஆங்கில புத்தகங்களை வாசிக்க தொடங்குவது. நமது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமே என்று சிந்தித்து வந்தேன். ஏற்கனவே வாங்கிய தமிழ் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே ஒரு அலமாரி முழுவதும் ஆகிவிட்டது. இதற்கே வீட்டில் பல்வேறு வசவுகளும் திட்டுகளும் விழுந்து வருகின்றன. இதில் ஆங்கில புத்தகங்களையும் வாங்க தொடங்கிவிட்டால் அவ்வளவுதான்.

என்னதான் செய்வது என்று முழி பிதுங்கியது. அலுவலகத்தில் சக நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவன் கிண்டில் (Kindle) எனப்படும் மின்கருவியை (Electronic Device) பற்றி கூறினான். என்னை போன்ற புத்தக புழுக்களுகாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி என்றான். ஆயினும் எனக்கு திருப்தி வரவில்லை. அதிகமாக படிக்கும் வழக்கம் உள்ள எனக்கு அக்கருவியை அதிகம் பார்த்தால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று பயம்.  ஏற்கனவே எட்டு மணி நேரம் கணினியுடன் எனது கண்கள் சீரழிகின்றன. இதில் இது வேறா என்று நினைத்தேன்.

நீண்ட நெடிய சிந்தனைக்கு பிறகு எவ்வளவோ பாத்துட்டோம்!! கழுத இதையும் பாத்துடுவோம்!!என்று முடிவு செய்தேன். இதற்கிடையில் எனது நண்பன் அவனது கிண்டிலை கொண்டுவந்து காண்பித்தான். ஓரளவிற்கு திருப்தி ஆக இருந்தது. மீண்டும் மீண்டும் குழப்பி கொண்டால் எடுத்த முடிவில் இருந்து விலகி விடுவோம் என்று அடுத்த இரு நாட்களில் அமேசான்(Amazon) வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்ககூடிய அரிய வகை பொருளான கிண்டில் பேப்பர் வைட்டை (Kindle Paperwhite) ஆர்டர் செய்தேன்.. :)

அடுத்த நாளே எனது கையில் கிண்டில் தவழ தொடங்கியது. வாங்கிய புதிதல்லவா. இருக்கும் ஆப்ஷன்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். கத்தி போய் வால் வந்த கதையாக இதை என்னமாக வாங்குவாய் என்று வீட்டில் அப்பாவும் அம்மாவும் கேட்டார்கள். எப்படியோ சமாளித்து விட்டேன். நாக்கு தள்ளிவிட்டது.

இரு நாட்களுக்கு பிறகு கிண்டில் வாங்கிவிட்டோம். என்ன புத்தகத்தை படிப்பது என்ற கவலை தொடங்கியது. முதலில் ஏதாவது புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க வேனும். அப்பொழுதுதான் கொடுத்த காசுக்காச்சும் படிப்போம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதற்கு முன் இது தமிழ் எழுத்துகளை சப்போர்ட் செய்யுமா என்று டெஸ்ட் செய்து விடுவோம் என்று Project Madurai இணையதளத்தில் இருந்து பொன்னியின் செல்வனை பதிவிறக்கம் செய்து அதை கன்வெர்ட் செய்து படித்து பார்த்தேன். அடடா!! அப்படியே பேப்பரில் படிப்பது போல் இருந்தது. ஆனால் புது புத்தகம் வாங்கியவுடன் அதில் வீசும் வாசம் இதில் தெரியாது என்பது ஒரு குறையே!! :P
  
முதலில் விலை கொடுத்து வாங்கப்போகும் அந்த புத்தகம் என்ன என்று மண்டை காய்ந்தது. சிறிய வயதில் இருந்தே மால்குடி டேஸ் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று அவா. சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று பாத்துடுவோம் என்று 117 ருபாய் கொடுத்து  Malgudi Days - Short Stories From An Astrologer's Day என்னும் புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்கினேன். வாசிப்பதற்கு மிகவும் வாட்டமாகவும் வசதியாகவும் கிண்டில் இருக்கிறது. கிண்டிலில் படிப்பதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது இது வரை. புத்தகங்களின் எடையை விட இதன் எடை குறைவல்லவா.

மால்குடி விமர்சனம் அடுத்த பதிவில்.. 

Tuesday, October 7, 2014

சோழர் கால நாணய அளவீடுகள் - பகுதி ஒன்று (Coin Measures of Cholas - Part One)

நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகத்தை படித்து கொண்டிருந்த பொழுது சோழர்களின் நாணய அளவீடுகள் பற்றி படித்தேன். அதை பற்றி ஒரு பதிவை எழுதுவோம் என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு. மற்றபடி என்னுடைய மூளையை கசக்கி பிழிந்து எழுதியதல்ல. சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஈயடிச்சான் காப்பி :)

சோழர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் இரு வகையான நாணய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலாம் வகை கட்யனா (Gadyana) என்று அழைக்கபெறும் நாணயவகை. இதன் எடை 3.75 கிராம் முதல் 3.9 கிராம் வரை இருக்கும். புத்தகத்தில் இதன் எடை 58 grain முதல் 60 grain வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு grain என்பது சுமார் 65 மில்லிகிராம் (Milligram) இருக்கும். உத்தம சோழரின் காலத்தை சேர்ந்த ஒரு நாணயத்தின் எடை 50 grain முதல் 60 grain வரை இருந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது உண்மையானால் இந்த நாணயம் கட்யனா வகையை சார்ந்தது என்று கூறலாம்.

ஆனால் சோழர்கள் அதிக அளவில் பயன்படுத்திய நாணய எடைமுறை கழஞ்சு (Kazhanju) என்பதாகும். இந்த நாணய முறை முதலாம் பராந்தக சோழர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஒரு கழஞ்சு என்பது 5 கிராம் தங்கத்துக்கு சமானம். (1 kazhanju = 5 grams of Gold)

கழஞ்சு என்னும் எடைமுறையில் இருந்து வந்த மேலும் சில எடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1)  மாஞ்ஞாடி (Manjaadi)
      இருபது  மாஞ்ஞாடிகள்  என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
                           1 Kazhanju = 20 Manjaadi

2)  பணவெடை (Panavedai)
       ஐந்து பணவெடை என்பது ஒரு கழஞ்சுக்கு சமானம் ஆகும்.
                           1 Kazhanju = 5 Panavedai
                           4 Manjaadi = 1 Panavedai

3) குன்றிமணி (Kundrimani)
      குன்றிமணி என்பது இன்றளவும் நமது வழக்காடு மொழியில் இருந்து வருகிறது. உனக்கு குன்றிமணி அளவு கூட தங்கம் கிடையாது என்று வழக்கு மொழியில் கூறுவதுண்டு.
       ஒரு குன்றிமணி என்பது அரை மாஞ்ஞாடிக்கு நிகரானது. அதாவது 40 குன்றிமணி சேர்ந்தது ஒரு கழஞ்சு.
                           1 kundrimani = 0.5 maanjadi
                           40 kundrimani = 1 kazhanju
                         
4) நல் எடை (Nal Yedai)
     இறுதியாக மிக சிறிய எடையான நல் எடை. ஒரு நல் எடை என்பது கால் குன்றிமணிக்கு சமமான எடையாகும்.
                          1 nal yedai = 0.25 kundrimani
                          160 nal yedai  = 1 kazhanju

ராஜ ராஜ சோழரின் 31 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று மதுராந்தக மடை என்னும் நாணய எடையை குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜ ராஜரின் காலத்தவையாக இருப்பின் இந்நாணயங்கள் உத்தம சோழர் காலத்தில் அச்சிடப்பட்டவயாக இருக்கும் என்று கூறலாம். உத்தம சோழரின் மற்றொரு பெயர் மதுராந்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. மடை என்னும் நாணயம் ஒரு கழஞ்சின் மொத்த எடையான 5 கிராம் தங்கத்தையும் ஒரே நாணயத்தில் வார்க்க பெற்றிருக்கும். அதாவது ஒரு மடை நாணயத்தில் 5 கிராம் தங்கம் இருக்கும்.

ஒரு மடை நாணயத்தின் பாதியே ராஜ ராஜன் காசு என்றழைக்கப்பட்டுள்ளது. இந்த காசு முதலாம் ராஜராஜரின் காலத்தவை. ஆனால் காசு என்னும் இந்த நாணயம் என்பது முதலாம் ராஜராஜரின் காலத்திற்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகிறார். இந்த மடை என்பது பல்வேறு கல்வெட்டுகளில் அன்றாட பழங்காசு, பழங்காசு, அன்றாட நற்காசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய எடைகள் மற்றும் சோழர்களின் நாணய எடை முறையில் இலங்கையின் தாக்கம் ஆகியவை அடுத்த பதிவில்...

தொடரும்...

Friday, August 29, 2014

பைசாசம் – புத்தக விமர்சனம் (Paisasam – Book Review)

வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். பற்றாக்குறைக்கு பவளக்கொடியாக விளக்க படங்கள் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரமுகி படத்தில் தலைவரிடம் வடிவேலு பேய் இருக்கா? இல்லையா? என்று கேட்டிருப்பாரே. கிட்டத்தட்ட அந்த ஒற்றை கேள்விதான் பைசாசத்தின் கதை சுருக்கம். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். அவன் கையில் சதாசர்வ காலமும் ஒரு கிண்கிணி அணிந்திருப்பான். அவனுடைய அடையாளமே அதான். அவன் பெயர் மூவேந்தன். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.

ஊரில் உள்ள பூசாரி கருப்பசாமி அடித்ததனால் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிடுகிறார். ஊர் சபையினரும் அவனுக்கான ஈமக்கிரியைகளை முடித்து விடுகின்றனர். 8-9 மாதங்களுக்கு பிறகு ஊரில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் குறிப்பாக சம்பவங்கள் மூவேந்தன் இறந்து கிடந்த ஊருணிக்கரையில் நடக்கின்றன. மூவேந்தன் அணிந்திருந்த கிண்கிணி சத்தமும் கேட்க தொடங்க மூவேந்தனின் பைசாசம் வந்திருக்கிறது என்று மக்கள் பயந்து போகிறார்கள்.

சம்பவங்களுக்கு பிறகு ஊர் பாடிக்காவலனான திருவரங்கன் தனது விசாரணையை தொடங்குகிறான். தன்னால் இயன்ற அளவுக்கு துப்பறிந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காமல் போகவே, தனது குருவான வெண்ணாடரை அழைக்கிறான். வெண்ணாடரும் திருவரங்கனும் இணைந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் மூவேந்தனின் பைசாசமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்று துப்பறிய தொடங்குகிறார்கள். ராஜகேசரியில் வரும் அம்பலவாணரை போல் வெண்ணாடரும் ஒரு கிழவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழவர்கள் மேல் கோகுலுக்கு அப்படி என்ன பாசமோ. தெரியவில்லை. J

பைசாசம் தாக்கியதாக கூறப்பெறும் இரு பெண்களான மாணிக்கம் மற்றும் இலுப்பைஞ்சீலி ஆகியோரை சுற்றியே விசாரணை நடைபெறுகிறது. புத்தகத்தின் அத்தியாயங்கள் வெகு வேகமாக ஓடுகின்றது. ஒரு வித கோர்வையாக விசாரணையை வெண்ணாடர் நடத்தி செல்கிறார். ஆங்காங்கே கோவிலில் நடக்கும் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள் இடம் பெறுகின்றன.

கதை என்னதான் சுவாரசியமாக சென்றாலும் ஒரு கட்டத்தின் மேல் இச்சம்பவங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. எனினும், அதன் காரணம் என்ன என்பதை புத்தகத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் தான் வருகிறது. அதற்காக புத்தகத்தை முழுவதும் படித்து தான் ஆகவேண்டும். J 

புத்தகத்தில் கடைசி 5-6 அத்தியாயங்கள் நம்மை நகம் கடிக்க வைக்கின்றன. வெண்ணாடர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடிய ரகத்தை சேர்ந்தவை. இதுதான் காரணமாக இருக்குமோ என்று யாவரும் நினைக்காத வகையில் இருக்கும். மொத்தத்தில் இப்புத்தகத்தை  படிக்க ஆரம்பித்தால் ஓரிரு நாட்களில் முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்வோம். கோகுலின் மதுரகவி மட்டும் தான் இன்னமும் படிக்கவில்லை. அதையும் கூடிய விரைவில் வாங்கி படித்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தை இப்புத்தகம் எனது மனதினில் விதைத்துவிட்டது.

ராஜகேசரி புத்தக விமர்சனத்தின் உரலி இங்கே 
http://southindianhistory-india.blogspot.in/2014/04/blog-post.html

Sunday, July 13, 2014

எல் நினோ(El Nino) ஒரு பார்வை

சில நாட்களுக்கு முன் நாளிதழில் 2014 ஆம் ஆண்டு எல் நினோ வருடம் என்று கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. கடந்த வாரத்தில் பட்ஜெட் தாக்கலின் போது இதைப்பற்றி நிதியமைச்சர் எல் நினோ விவகாரத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதை பற்றி கூறுவார் என்று ஊடகங்களிலும் பேசினர். எல் நினோவிர்க்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று படித்ததின் விளைவே இந்த பதிவு.

முதலில் எல் நினோ என்றால் என்ன என்பதை எழுதுகிறேன். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் "Little Boy" அல்லது "Christ Child"  என்று அர்த்தம். 1600களில் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மீனவர்கள் பிசிபிக் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கடலின் வெப்பமானது அதிகமாவதை கண்டனர். இது ஒரு சீரான இடைவெளியில் நிகழ்வதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு வானிலை ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு டிசம்பர் மாதத்தில் இது நிகழ்வதால் எல் நினோ (El Nino) என்று பெயரிடப்பட்டது.

எல் நிநோவால் அமெரிக்க கண்டத்தின்  (North America & South America) பருவ நிலையில் சில பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கனடா மற்றும் அமெரிக்காவின் வட நாட்டில் அதிகமான வெப்பமும், ப்ளோரிடா(Florida) மாகாணத்தில் அதிக குளிர் மற்றும் ஓஹியோ (Ohio) மாகாணத்தில் வறட்சியும் நிலவும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க கண்டத்தை பாதிக்கும் ஒரு நிகழ்வு இந்தியாவின் பருவமழையை (Monsoons) எப்படி பாதிக்கும் என்ற சந்தேகம் வந்தது.

பிசிபிக் கடலில் அதிகரிக்கும் வெப்பம் கடலின் மேற்பரப்பில் உள்ள காற்றை பயணம் செய்வதை தடை செய்கிறது. இதன் காரணத்தால் இந்திய பெருங்கடலின் மேல் பருவமழைக்கு தேவையான மேகங்கள் உருவாவதில் சில தடைகள் ஏற்படுகின்றன. மழை தடைபடுகிறது. பஞ்சம்(Drought), பணவீக்கம்(Inflation) மற்றும் இன்ன பிற அத்தியாதிகளும் இணைந்து இந்தியாவை பஞ்ச பரதேசியாக உருவாக்குகிறது.

இந்தியாவில் 1997-98 ஆம் வருடத்தில் நிகழ்ந்த பஞ்சத்திற்கு எல் நினோவே காரணம். அந்த வருடம் ஏற்பட்ட எல் நினோவால் பூமியின் வெப்பம் 0.5 டிகிரி அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பஞ்சம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும்  உலக பொருளாதரத்திற்கு 30-45 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தையும் விளைவித்தது.

இந்தியா  மிக கடுமையான பஞ்சத்தை சந்தித்த 2002 ஆம் வருடமும் ஒரு எல் நினோ வருடமே. இதே போல் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பஞ்சங்கள் நிகழ்ந்த ஆண்டுகளில் எல் நினோவும் நிகழ்ந்திருக்கிறது. இந்த ஆண்டும் எல் நினோ ஆண்டு என்பதை பல நாட்டு வானிலை மையங்கள் உறுதிப்படுதியுள்ளதால் இந்த வருடமும் இந்தியாவில் பஞ்சம் நிகழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த வருடம் அதிகமாக பாதிக்கபடக்கூடிய நாடுகளில் இந்தியாவும் பிலிப்பைன்சும் தான் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் பொருளாதாரம் சற்றே பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அரிசி மற்றும் சக்கரையின் ஏற்றுமதி குறைவாக இருக்கும். இதனால் உலக அளவில் இப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கலாம். உள்நாட்டு சந்தையில் இப்பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைத்து விலையை மேலுமேலும் ஏற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்க முற்படலாம் என மத்திய அரசு மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

இயற்கையை தேவையான அளவு சீரழித்ததும் ஒரு வகை காரணம். உலகில் வாழும் கொடிய மிருகம் முதலையோ அல்லது பாம்போ அல்ல மனிதனே என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் சுற்றுசூழல் அமைச்சர் சில  நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கையில் இந்தியாவின் 25% நிலமானது பாலைவனமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். எதிர் காலத்தில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டாது என்பதன் சூசக வார்த்தைகளே இவை.

இந்த பதிவு எழுதும் தருணத்தில் இந்தியாவில் பஞ்சம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்னிந்தியாவில் 50 சதவீதமும் மேற்கு இந்தியாவில் 60 சதவீதமும் கிழக்கு இந்தியாவில் 65 சதவீதமும் சென்ட்ரல் இந்தியாவில் 70 சதவீதமும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தனது கருவூலத்தில் (Treasury) அதிகபடியான பணத்தை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அரசாங்கம் விவசாயிகளிடம் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பயிர்செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாக கூறபடுகிறது. எனினும் இம்முயற்சிகள் எடுபடுமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.

இதை பற்றி நான் தெரிந்து கொண்டதை விட குறைவானவற்றையே பதிவு செய்துள்ளேன். அதிகமாக எழுதி மொக்கை போட வேண்டாம் என்பதாலும் எனது பதிவுகள் சிறியனவாக இருப்பதையே விரும்புவதாலும் முடித்துகொள்கிறேன்.

Saturday, June 14, 2014

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - II (Ponniyin Selvan Drama Review Part 2)

முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
http://southindianhistory-india.blogspot.in/2014/06/i.html

சென்டர் ப்ரெஷ் விளம்பரத்தில் "இட்லி, பூரி, மசால் தோசை" என்று வரிசையாக ஒருவர் கூறுவாரே. அவர்தான் பார்த்திபேந்திர பல்லவனாக நடித்திருந்தார். நாடகத்தின் இறுதி பகுதி அவருடைய முழு திறமையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அவர் வாள் பயிற்சி செய்யும் பொழுது தெரிகிறது.

நாடகத்தின் டைட்டில் கதாப்பாத்திரமான பொன்னியின் செல்வனாக நடித்திருப்பவரும் ஒரு புதியவரே. பொன்னியின் செல்வர் அறிமுகமாகும் வாள் சண்டை காட்சியில் கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் காதை கிழிக்கின்றன. ஆனால் அவருடைய பாத்திரம் வெறும் அரை மணிநேரத்திற்கும் குறைவாகவே வருகிறது. எனினும் புத்தகத்தில் விவரித்திருந்தது போலவே மிகவும் அழகான ஒருவரை நாடக குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நதிகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடுவது போல நாடகம் ஆதித்ய கரிகாலனின் கொலையை நோக்கியே ஓடும். ஆதித்ய கரிகாலனாக நடித்திருப்பவர் நடிகர் பசுபதி. கட்டியம் கூறுபவர் ஆதித்ய கரிகாலன் பராக் பராக் என்று கூறி முடித்து பசுபதி வரும் முன்னரே அரங்கத்தில் உள்ளவர்கள் விசில் அடிக்கின்றனர். ஆதித்ய கரிகாலனின் பாத்திரம் புத்தகத்தில் சில நேரமே வந்தாலும் அவர் பேசும் வசனங்கள் மூலம் அவருடைய தன்மையை கல்கி வெளியிட்டிருப்பார். அதே போல் பசுபதி சில நேரமே வந்தாலும் தன்னுடைய நடிப்பினால், வசன  உச்சரிப்பால் கவர்கிறார்.

மற்ற கதை மாந்தர்களான நந்தினி, வானதி , குந்தவை , பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, சுந்தர சோழர், பூங்குழலி, பிரம்மராயர், சேந்தன் அமுதன், ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் திறம்பட நடித்திருக்கின்றனர். அவர்களை பற்றி எழுதினால் நீண்டு கொண்டே போகும் என்பதால் ஒரே வரியில் சுருக்க வேண்டியதாகிற்று.

அரங்க மேடை தொடக்கத்தில் மிக சாதரணமாக தோன்றினாலும் போக போக தோட்டா தரணியின் கலை நுணுக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அதுவும் யானை நம்மை வியப்பின் உச்சிக்கே செல்லவைக்கிறது, வந்தியதேவனும் பூங்குழலியும் படகில் செல்லும் காட்சிகளில் இயக்குனரின் திறன் பளிச்சிடுகின்றது.

ஒரு புத்தகத்தை அதுவும் 60 வருடங்களாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு புத்தகத்தை நாடகமாக எடுக்கும் பொழுது ரசிகர்கள் ஒரு விதமான எதிர்ப்பார்ப்புகளுடன் வருவர். அவர்களை 3 1/2 மணி நேரத்தில் திருப்தி படுத்துவது என்பது மிகவும் கடினம். ஆனால் நம்மை 3 1/2 மணி நேரம் கட்டி போடுகின்றனர் நாடக குழுவினர். பாராட்டினால் மட்டும் போதாது என்றே தோன்றுகிறது.

வெறும் 6 மாதத்தில் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி, பயிற்சி எடுத்து இந்த நாடகத்தை அமைத்ததாக குழுவினர் கூறினர். மிகவும் ஆச்சர்யம்தான். அவர்களுடைய முயற்சி பொன்னியின் செல்வனுடன் மட்டும் நின்று விடக்கூடாது. மேன்மேலும் முயற்சி செய்து இன்னும் சில நாவல்களை நாடகமாக்கி எங்களை மேலும் மகிழ்விக்கவேண்டும் என்பதே என்னை போன்ற புத்தகப்புழுக்களின் அவா.

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - I (Ponniyin Selvan Drama Review - Part 1)

எப்பொழுதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இறங்க வேண்டிய இடம் வந்தது. நிறுத்தத்தில் ஒரு விளம்பரம். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் வழங்கும் "பொன்னியின் செல்வன்" என்று. முழு நாவல் 3 1/2 மணி நேர நாடகமாக என்று போட்டிருந்தது. அடுத்த நாள் வெளிவந்த ஆனந்த விகடன் புத்தகத்தை மொபைலில் படித்து கொண்டிருந்த பொழுது பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேறுவதை ஒட்டி சில பரிசு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனது சக நண்பர்கள் இருவரிடம் கேட்ட பொழுது வர ஒப்புக்கொண்டனர். அதை அடுத்து டிக்கெட்டுகளை வலைத்தளத்தில் புக் செய்தோம். நாங்கள் புக் செய்யும் போதே சனி மற்றும் ஞாயிறுக்கான டிக்கெட்டுகள் காலியாகிருந்தன. எனவே வெள்ளி கிழமை அப்படியே அலுவலகத்தில் இருந்து சென்று விடலாம் என்று புக் செய்தோம்.

அந்த நாளும் வந்தது. அலுவலகத்தில் வழக்கம் போல் ஒரு பொய்யை கூறிவிட்டு சீக்கிரம் கிளம்பினோம். வண்டிகளை பார்க் செய்வதற்குள் எங்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. அரங்க வாயிலில் சில பல தகவல்கள் புத்தகத்தை பற்றியும் சோழர்களின் வாழும் கோவில்களை பற்றியும் சில புகைப்படங்களும் சில தகவல் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. "ஏட்டு!!! ஏற்கனவே லேட்டு" என்று என் உள்மனம் கூறியதால் அரக்க பரக்க அரங்கத்திற்குள் ஓடினோம்.

நண்பர்களுடன் படம் பார்க்கையில் இது வரை படத்தின் டைட்டில் போடுவதை பார்த்ததே இல்லை. இதிலும் அப்படியே. உள்ளே அடித்து பிடித்து நுழையும் போதே நாடகம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. என் நண்பர்கள் இருவரும் புத்தகத்தை படிக்காதவர்கள். அவர்கள்  என்னுடைய ஆர்வக்கோளாறு காரணமாக வந்திருந்தார்கள். மேலும் இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்ற ஒரு ஆர்வமும் சேர்ந்து விட்டிருந்தது. அரங்கம் மிகவும் சாதாராணமாக இருந்தது போல் தான் முதலில் தெரிந்தது. தோட்டா தரணி நம்மை ஏமாற்றி விட்டாரோ என்று நினைக்கும் வகையில் மிகவும் சாதாரணமாக தோன்றியது. 

10 நிமிடங்கள் ஆகி விட்டிருந்தாலும் வந்தியத்தேவன் அறிமுகமாகும் காட்சி அப்பொழுதுதான் வந்தது. திரை அரங்குகளில் பிரபல நடிகர் திரையில் தோன்றும் பொழுது விசிலடிச்சான் குஞ்சுகள் காது கிழிய விசில் அடிப்பார்கள். அது போல் வந்தியத்தேவனுக்கு அடித்தார்கள். எனக்கு விசில் அடிக்க வராத காரணத்தினால் கை தட்டலோடு அடங்கிவிட்டேன். அதற்கு முன்னர் ஆழ்வார்க்கடியான் வரும் பொழுது இதை விட பலத்தமான வரவேற்பு. 

பொன்னியின் செல்வன் புத்தகத்தை பொறுத்த வரை பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் கதை மற்றும் சம்பவங்கள் வந்தியத்தேவனை சுற்றியே நடப்பதால் அவரே கதைநாயகன். வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ஏற்றிருப்பவர் புது முகமானாலும் தனது இயல்பான நடிப்பில் மக்களை கவர்கிறார். வசனங்களை பிழையில்லாமல் பேசுவது அவருடைய இன்னொரு ப்ளஸ். ஆனால் பாவம் நாடகம் முழுவதும் ஒரே உடை தான் அணிந்து வருகிறார். 

புத்தகத்தில் வந்தியத்தேவனுக்கு அடுத்து வாசகர்கள் ரசிக்கும் கதாப்பாத்திரமாக ஆழ்வார்க்கடியான் அமைக்கப்பட்டிருக்கும். அதனாலோ என்னவோ ஆழ்வார்க்கடியான் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார். ஆங்காங்கே ஆழ்வார்க்கடியான் நம்மை கிச்சு கிச்சு மூட்டினாலும் அவருடைய வைணவ சண்டைகள் ஒன்றிரண்டை சேர்த்துவிட்டிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். மேலும் ஆழ்வார்க்கடியானே குடந்தை ஜோதிடராக நடித்து ரசிகர்களை மேலும் குழப்புகிறார். புத்தகத்தில், சிவன் கோவிலின் மதிலில் அமர்ந்திருக்கும் காக்கை தனது தலையில் கல்லை தூக்கி போடும் பொழுது கூட வலியை பொறுத்து கொண்டு காக்கையை பார்த்து அப்படித்தான், சிவன் கோவிலை இடி என்று கூறுவார் ஆழ்வார்க்கடியான். ஆனால் நாடகத்தில் அவர் சிவனின் திருநீரை தனது நெற்றியில் அவரே தடவிக்கொண்டு குடந்தை ஜோதிடராக மாறுகிறார். புத்தகம் படிக்காதவர்கள் குழம்புகிறார்கள்.

நீண்ட வலைப்பதிவாக இருப்பதால் இரண்டாக பிரித்து எழுதுகிறேன்.. 

Monday, June 9, 2014

ப்ளைமவுத் (Plymouth) மற்றும் அம்பாசடர் (Ambassador) கார்கள் - I

இன்றைய உலகத்தில் ஏதோ ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மாதத்திற்கு ஒரு முறை புதிய கார் ஒன்றை நமது சந்தையில் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இந்தியா உலக தாரளமயமாக்கல் (Globalisation) கொள்கைகளை கடைப்பிடிக்கும் முன்னர் நிலைமை இப்படி இருந்து விடவில்லை. இன்று தான் ஆடியும் (Audi) பென்சும் (Benz) நமக்கு சர்வ சாதரணமாக போய்விட்டது. 30-40 வருடங்களுக்கு முன்னர் அம்பாசிடரும் பத்மினியும்(அட காரு பேருங்க!!) தான்.

அம்பாசிடர் காரை உபயோகபடுத்தாத அன்றைய பிரபலங்கள் இல்லவே இல்லை என்று கூறுமளவிற்கு அம்பாசிடர் கார் பிரபலமாக இருந்து வந்தது. மிக சமீபமாக தான் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நம்மாட்களுக்கு உள்ளூர் பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் மற்றும் வெளியூர் சந்தை பொருட்கள் தரமானது என்ற நினைப்பே மிக முக்கிய காரணம்.

இன்று எப்படி பெராரி ரக கார்களும் ஹம்மர் கார்களும் பிரபலங்களால் இறக்குமதி செய்யபடுகின்றனவோ அதை போல் அந்நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் பிளைமவுத் கார்கள் ஆகும். எம்.ஜி.ஆர் முதல் சிவாஜி வரை அனைவரும் உபயோகபடுத்தியது பிளைமவுத் கார்களே. இவ்விரு கார்களை பற்றிய ஒரு சிறு பதிவே இது.




முதலில் உள்ளூர் சரக்கு அம்பாசிடர். :)

சிறிது காலமாக தான் இந்தியாவின் பிரதமரும் ஜனாதிபதியும் BMW மற்றும் BENZ ரக கார்களை உபயோகப்படுத்துகின்றனர். உங்களுக்கு தெரியுமா. இந்தியாவின் ஜனாதிபதி பயன்படுத்துவது Mercedes Benz S600 ரக கார். 




அதற்கு முன் Mercedes-Benz W140



அடுத்து பிரதமருக்கு வருவோம். இந்திய பிரதமர் பயன்படுத்தும் கார் இதோ உங்கள் பார்வைக்கு (BMW 7 Series)




நமது நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் உபயோகப்படுத்தியவை அம்பாசிடர் கார்களே. அம்பாசிடர் கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறி BMW கும் Benz கும் தாவிவிட்டார்கள். பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு படையினர் கூட BMW ரக கார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

அம்பாசிடர் ரக கார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார் கம்பெனியால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அம்பாசிடர் கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்ததே தவிர அதனுடைய வடிவம் (Design) Morris Oxford III ரக கார்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றாகும். முதல் முறையாக இந்த கார் குஜராத்தின் ஓகா துறைமுகத்தில் அமைந்திருந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

 எவ்ளோ அடிச்சாலும் தாங்க கூடிய வடிவத்தை கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்களாக இருந்து வந்தது. எனினும் மத்திய தர குடும்பங்கள் வாங்கும் அளவிற்கு விலை நிர்ணயிக்கபடாததால் விற்பனையில் சற்றே தொய்விருந்தது. எனினும் அன்றைய நாட்களில் கார் என்றாலே அம்பாசிடர் தான். வேறு எந்த ஒரு நிறுவனமும் இந்த அளவிற்கு வளர்ந்து விடவில்லை. Premier நிறுவனத்தின் Padmini ரக கார்கள் சற்று போட்டியை கொடுத்து வந்தது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்து விடவில்லை. கரப்பான் பூச்சி எப்படி கோடி கணக்கான வருடங்களாக அப்படியே இருக்கிறதோ அதே போல் தான் அம்பாசிடரும் இருந்து வந்தது. Analogy கூற வேறு ஒன்றும் தெரியவில்லை. :)

80 களின் இறுதியில் அம்பாசிடரின் வீழ்ச்சி ஆரம்பித்தது. மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி (Suzuki) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 800 ரக காரை களத்தில் இறக்கியது. முதன் முறையாக அம்பாசிடரின் விற்பனை எண்ணிக்கை குறைந்தது. கார் ஆட்டோமொபைல் சந்தையில் முடி சூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடருக்கு வில்லனாக மாருதி 800 வந்தது.

90 களின் இறுதியில் மத்திய அரசாங்கம் உலகமயமாக்கல் கொள்கை கொண்டு வந்தவுடன் மேலும் பல நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை இந்திய சந்தையில் தொடங்கி விடவே, அம்பாசிடர் பெரும் வீழ்ச்சியை கண்டது. மிகவும் தாமதமாக விழித்து கொண்ட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சில மாற்றங்களுடன் அம்பாசிடர் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. எனினும் வேலைக்கு ஆகாததால் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மே 20, 2014 அன்று அம்பாசிடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.

நான்கு படத்தை போட்டவுடன் அதிகமாக எழுதியதை போல் உள்ளது. எனவே பிளைமவுத் கார்கள் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்....


Saturday, May 31, 2014

சென்னையில் டிராம்கள் (Trams in Chennai) - ஒரு பார்வை

பணத்தின் பின் பேயாக திரியும் இன்றைய இயந்திர மற்றும் சுயநல வாழ்கையில் டிராம்கள் பயன்பாட்டில் இருந்திருந்தால் டிராம் கம்பேனி நஷ்டத்தில் தான் ஓடியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் டிராம்கள் மணிக்கு 7 மைல் வேகத்தில்(!) செல்ல கூடிய ஒன்று. இன்றும் இந்தியாவில் டிராம்கள் கொல்கத்தா நகரத்தில் இருக்கின்றன. காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டு சாலைகளில் டிராம்கள் ஓடி கொண்டிருக்கின்றன.

சில சமயம் தேவன் புத்தகங்களில் மனிதர்கள் டிராம்களில் பயணம் செய்வார்கள். அவற்றை படிக்கும் பொழுது அதை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணத்தை இந்த ப்ளாகின் மூலம் நிறைவேற்றி கொள்கிறேன். இதில் எழுதப்படும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் சிதறி கிடப்பவையே. புதியதாக எந்த தகவலும் இல்லை என்றாலும் முடிந்த வரை தொகுத்து எழுத முயற்சி செய்கிறேன்.


அன்றைய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே (Madras Electric Tramway Ltd) 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ட்ராம் ஓடுவதற்கான டிராம்வே (Tramway) போடும் பணிகள் April மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் முடிந்து சென்னையில் டிராம்கள் ஓட துவங்கிய தினம் மே 7, 1895. 1904 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட டிராம்கள் சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றியது.

சில டிராம்கள் குறைந்த தூரம் பயணம் செய்பவையாகவும் சில டிராம்கள் நெடு தூரம் பயணம் செய்பவையாகவும் இருந்துள்ளன. நெடு தூரம் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளவை Washermanpet to Purasaiwakkam, Royapuram to Egmore, Mylapore to George Town ஆகியவை. இந்த தூரத்தை Google Maps இல் பார்த்தால் 7-8 KM வருகிறது. பிறகு எப்படி இது நெடுந்தூரம் ஆகும் என்ற கேள்வி எழுகிறதா!! டிராமில் பயணம் செய்தால் இது நெடுந்தூரம் போல் தோன்றும். ஏன் என்றால் டிராமின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்திற்கு 7 KM தான்.

Mylapore முதல்  George Town வரை செல்ல கட்டணம் இரண்டு அணாக்கள் மட்டுமே. அதாவது ஒரு ரூபாயின் எட்டில் ஒரு பங்கு (One Eighth of a rupee).தோராயமாக ஒரு KMக்கு  0.25 அணா (1.56 பைசா). இன்று ஒரு KMக்கு நாம் செலவழிக்கும் தொகை தோராயமாக 1.25 ருபாய். 80 மடங்கு குறைவு. நமது பணத்தின் மதிப்பு எந்த அளவு சரிந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றே daily pass முறை இருந்துள்ளது. ஆனால் ஞாயிறு மட்டுமே. 6 அணா டிக்கெட் வாங்கினால் நாள் முழுதும் எங்கு வேண்டுமானாலும் டிராம்களில் சென்று வரலாம். மாத சீசன் டிக்கெட் ஒரு குறிப்பிட்ட தடத்திற்கு 6 ரூபாய். அனைத்து தடங்களுக்கும் என்றால் 10 ரூபாய். டிரைவர் மற்றும் கண்டக்டர் காக்கி உடுப்புகள் அணிந்திருப்பர். அனைத்து பெட்டிகளுக்கும் ஒரே கண்டக்டர் தான். மிக அரிதாக டிக்கெட் பரிசோதகர் டிராமில் ஏறி டிக்கெட்களை பரிசோதிப்பதுண்டு.

சென்னையில் டிராம்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 700 மைல்கள் (~1120 KM) பயணித்துள்ளது மற்றும் சராசரியாக 1.25 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது.ஒவ்வொரு டிராமும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருந்தது. டிராமின் தலைக்கு மேல் உள்ள எலெக்ட்ரிக் கேபிள்கள் மூலம் மோட்டார்கள் உயிரூட்டப்பட்டன.

1951-52 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு மாத மாதம் 40 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது. இதனால் அரசாங்கம் டிராம்களை நிறுத்த முடிவு செய்தது. 1953 ஆம் ஆண்டு சரியாக ஏப்ரல் 12 ஆம் தேதி நள்ளிரவு டிராம்கள் நிறுத்தப்பட்டன. 1650 பேருக்கு வேலை போனது. லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பிரயாணிகள் ஏப்ரல் 13 முதல் பேருந்துகளையும் குதிரை வண்டிகளையும் நாட வேண்டியதாகிற்று.

Tuesday, May 13, 2014

தஞ்சை கோவில் – உச்சிக்கல் மர்மம் (Cap Stone Mystery)

தஞ்சை கோவிலை பற்றி நிறைய மனிதர்கள் தேவையான அளவு எழுதி உள்ளனர். எனினும் இன்றைய இயந்திர வாழ்கையில் நாம் இறக்கும் முன்பு எழுதிய அனைத்தையும் படித்து முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. எனினும் இந்த கோவிலை பற்றி பல சந்தேகங்கள் எழுவதுண்டு. அதில் ஒன்றுதான் விமானத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கல்லை பற்றியது. இன்னும் குழப்பமா? கீழே காணும் போட்டோவை பார்த்தால் தெரிந்து விடும் நாம் எதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.

இந்த கோவிலே அதிசயம் தான் என்றாலும் இந்த கல் மற்றுமொரு அதிசயம். இந்த கோவில் முழுவதும் ”GRANITE” எனப்படும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கல் சுமார் 80 டன் எடை உள்ளது. 
முதல் சந்தேகம் இந்த கல்லானது ஒரே கல்லா அல்லது இரு அரை வட்ட கற்களை (2 semi-circles) உள்ளடக்கியதா என்பது. இதற்கு பல விதமான வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்துள்ளன. சிலர் ஒரே கல் என்றும் சிலர் இரு அரை வட்ட கற்கள் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். என்னை போல் 8 மணி நேரம்  கம்ப்யூட்டர் முன் செலவிடும் இளைஞர்களால் நீலகண்ட சாஸ்த்ரிகளையும் சதாசிவ பண்டரத்தாரையும் படித்து தெளிவடைய முடியாது.  Google  தான் எங்களை போன்ற கோடானு கோடி மக்களுக்கு உற்ற துணைவன். J
Google செய்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில பல புத்தகங்களை படிக்கவைத்து விடுவார்களோ என்ற பயம் எழுந்தது. அனைவரும் ஒன்று போல்,விமானம் 216 உயரம். இந்த உச்சிக்கல் 80 டன் எடை. இது இன்றளவும் ஒரு மர்மமும் ஆச்சர்யமும் கலந்ததாக உள்ளது என்று கூறி முடிக்கின்றனர். வேறு எதுவும் புதியதாக கூறவில்லை.



எனினும் ஒரு குத்து மதிப்பாக இது ஒரே கல் என்ற முடிவுக்கு பெரும்பாலனோர் வருகின்றனர். ஊருடன் ஒத்து வாழ்  என்ற மொழிகேர்ப்ப நாமும் அந்த முடிவையே எடுக்க வேண்டியுள்ளது. ஓரளவிற்கு மேல் தேடுவதில் பயனில்லை என்பதாலும் அதை விட இந்த மாதிரியான விஷயங்களுக்கு தேவையான பொறுமை நேரம் செல்ல செல்ல குறைகிறது என்பதே இந்த முடிவிற்கு காரணம்.  


அடுத்த மர்மம் இவ்வளவு பெரிய கல்  விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது தான். சற்றே சிந்திதோமானால் இரு வழிகள்  நமக்கு தோன்றும். 



முதல் வழி விமானம் கட்டப்பட கட்டப்பட சுருள் வழி பாதை (spiral route) போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்பாதை மற்ற கற்களை வேண்டுமானால் எடுத்து செல்ல உதவியிருக்கலாமே ஒழிந்து இந்த உச்சிக்கல்லை அல்ல. ஏனென்றால் இவ்வளவு எடையுள்ள கல் மேலே எடுத்து செல்லப்படவேண்டும் என்றால் மிகவும் எச்சரிக்கை அவசியம். எடுத்து செல்லும் பொழுது சிறு தவறு நேர்ந்தாலும் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த வழி வேலைக்கு ஆகாது. ஆனால் பாலகுமாரன் உடையாரில் இறுதி வரை இந்த கல்லை பற்றியோ அல்லது இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாதவாறு கட்டப்பட்டதை பற்றி கூறவில்லை என்பது ஒரு குறையே.

அடுத்த வழி மிகவும் உசிதமான வழி. விமானத்தின் உயரத்திற்கு சரிவு பாதை அமைத்து பாதையின் இரு பக்கங்களையும் அடைத்து யானைகளை வைத்து உருட்டி கொண்டே வந்திருக்க வேண்டும். இந்த வழியிலும் மேற்கூறிய ஆபத்து இருந்தாலும் வழி பெரியதாக போடப்பட்டிருந்தால் கல்லை மிக மிக பொறுமையாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு வந்துவிடலாம். Discovery channel இல் காட்டிய அதே வழிமுறைதான் ஒத்து வருகிறது.

இறுதியாக விமானத்தின் நிழல் அதன் மேல் விழுவதன் காரணம் மிக சுலபமானது. ஆம். விமானம் செவ்வக வடிவிலான பலகைகளை கொண்டு எழுப்பப்பட்டது. அதாவது கீழிருக்கும் பலகை அதன் மேல் இருக்கும் பலகையை விட அகலமானதாக இருக்கும். இதனால் மேல் இருக்கும் பலகையின் நிழல் அதன் கீழிருக்கும் பலகையிலே விழுந்து விடும். இதனால் நிழல் பூமியில் விழாது. அவ்ளோதான்.

Thursday, April 17, 2014

ராஜகேசரி – புத்தக விமர்சனம் (Rajakesari - Book Review)

வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்றாலே கதைக்களம் பெரும்பாலும் மன்னர்களை அல்லது இளவரசர்களை சுற்றியே அமையும். வெகு சில புத்தகங்களே இதில் இருந்து மாறுபடும். மாறுபடும் புத்தகங்கள் கூட சில சமயம் முழு நீள காதல் காவியங்களாக அமைந்து விடுவதுண்டு. இவ்வகை புத்தகங்களில் இருந்து சற்றே மாறுபட்டு. இல்லை இல்லை. முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் எழுதப்பட்டது ராஜகேசரி என்னும் புதினம். புத்தகத்தை இரண்டாம் முறையாக வாசிக்கும் பொழுது இவ்வலைப்பூவை எழுத வேண்டும் என்று தோன்றியது.

புத்தகத்தை முதல் முறை வாசித்து முடிக்கும் பொழுதும் சரி இரண்டாம் முறை வாசித்து கொண்டிருக்கும் பொழுதும் சரி, என்னையும் அறியாமல் ஆசிரியரின் உழைப்பை பற்றி பெருமிதம் கொள்ள செய்தது. இதை போன்று ஒரு கதையை சிந்தித்ததற்கே ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு. J

புத்தகம் ராஜ ராஜ சோழரின் காலத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனினும் நம் மரியாதைக்குரிய ராஜ ராஜ சோழர் கதையில் மிகச்சிறிய பங்கே வகிக்கிறார். புத்தகத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் பரமன் மழபாடியார் மற்றும் அம்பலவாணர் ஆவர். இவர்களுள் அம்பலவாணர் அரைக்கிழவர் மற்றும் ஒரு சாதாரண குடிமகன். பரமன் மழபாடியார் ஒரு உயரதிகாரி.

ஒரு நாள் அம்பலவாணர் இரவு கூத்து முடிந்து தன் அகத்திற்கு செல்லும் வழியில் ஒரு கொலை நடக்கிறது. அக்கொலையை அம்பலவாணர் மறைவில் இருந்து பார்த்து விடுகிறார். கொலையுண்டவன் தனது வாழ்க்கையின் கடைசி மணித்துளிகளில் அம்பலவாணரிடம் ஏதோ ஒரு சதியை பற்றிய செய்தியை அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறி விட்டு இறக்கிறான். ஏதோ பெரிய விஷயமாக இருக்கும் என்று அம்பலவாணரும் தஞ்சைக்கு சென்று விஷயத்தை அதிகாரிகளிடம் கூறி விட்டு வந்துவிடுவோம் என்று புறப்படுகிறார்.

அதே சமயத்தில் ராஜராஜ மாராயர் தன்னை வந்து சந்திக்க வேண்டிய ஒற்றன் இரு நாட்களாகியும் வரவில்லையே என்று கவலை கொள்கிறார். அரசரை சதய நாளில் கொலை செய்யவிருக்கும் சதியை பற்றி அந்த ஒற்றன் தகவல் கொணர்வதால் விஷயம் அவரது கவலையை அதிகரிக்கிறது. இவ்விஷயத்தை தனது பிரதான சீடனான பரமன் மழபடியாரிடம் ஒப்படைக்கிறார்.

அம்பலவாணரும் தஞ்சை வந்தடைந்து ராஜ ராஜ மாராயரை சந்திக்க முற்படுகிறார். சந்திக்க முடியாத சூழ்நிலையில் மாளிகையை விட்டு வெளியேறுகிறார். மழபாடியார் சில பல முயற்சிகளுக்கு பிறகு அம்பலவாணரை சந்திக்கிறார். தகவல்கள் ஒத்து போக சதியை தடுக்க இருவரும் இணைந்து முயல்கிறார்கள். சதியை தடுத்தார்களா, முயற்சியில் வெற்றி பெற்றார்களா, சதய நாள் விழா எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் முடிந்ததா என்பதே கதைச்சுருக்கம்.

கதை மிக சாதாரணமாக நம் கண்களுக்கு தெரிந்தாலும் கோகுலின் நடை மற்றும் கதையை முன்னெடுத்து செல்லும் பாணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கு வந்து செல்லும் கதாப்பாத்திரங்கள் கூட நம் மனதில் ஆழ பதியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் சாமான்ய மக்களுக்கு புரிகின்ற வகையில் தான் பாத்திரங்கள் பேசும் வாசனைகள் உள்ளன. சில புத்தகங்களில் உள்ளது போல் வாசிப்பதற்கே மிகவும் சிரமமான பெயர்களோ வசனங்களோ இல்லை என்பது மற்றுமொரு ப்ளஸ்.


சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இப்புத்தகத்தை வாங்குவோர் அடுத்து சில நாட்களிலேயே அடுத்த புத்தகத்தை வாங்கிவிடுவர். அவ்வளவு வேகத்தில் புத்தகம் படிப்பவர்களால் முடிக்கப்பட்டுவிடும். J

பைசாசம் புத்தக விமர்சனத்தின் உரலி இங்கே

Monday, March 10, 2014

அல்புகேர்க் – போர்ச்சுகீஸ் படைத்தலைவன்

நெடு நாட்களாகவே விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி ஒரு வலைப்பூ எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை பற்றி படிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சோழர்களை பற்றி மட்டுமே படித்து வந்ததால் அவர்களை பற்றி மட்டுமே எழுத முடிந்தது. அதற்கான உந்துதலும் இருந்து வந்தது. சில நாட்களுக்கு பிறகு ஹம்பி, ஹோஸ்பெட் செல்ல நேர்ந்த பொழுது அங்கு கண்ட காட்சிகள் நான் மறந்திருந்த விஜயநகர ஆவலை மீட்டது. அதன் தொடர்ச்சியாக “A forgotten Empire by Domingos Paes” என்னும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

 

முதலில் ஹக்கரையும் புக்கரையும் படித்த பிறகு கிருஷ்ணதேவராயரை பற்றி படிக்க பக்கங்களை பிரட்டிய பொழுதுதான் அல்புகேர்க்-கிருஷ்ணதேவராயர்-அடில் ஷா எனும் மூன்று முனை போட்டியை பற்றி படிக்க நேர்ந்தது. இந்த போட்டியை ஒரே வலைப்பூவில் முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. எனினும் முயற்சி செய்கிறேன். இந்த மும்முனை அரசியலுக்கு களமாக இருந்தது கோவா.

 

அல்புகேர்க் லூயிஸ் என்னும் போர்ச்சுகீசிய படைத்தலைவனுக்கு மாற்றாக இந்தியாவிற்கு வந்தார். முதலில் கோவாவை அடில் ஷாவிடமிருந்து பிடித்த அல்புபெர்க் விஜயநகரத்தின் உதவியுடன் மட்டும் தான் அதை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து தூது அனுப்பினார். எனினும் ராயர் கோவாவை பிடித்ததற்கு வாழ்த்துக்கள் மட்டும் கூறி கழுவிய மீனில் நழுவும் மீனாக இருந்து விட்டார்.

 

சிறிது நாட்களில் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா கை நழுவி மீண்டும் அடில் ஷாவிடம் போனது. அடில் ஷாவின் வளர்ச்சியை கண்ட ராயருக்கு சற்றே உதறியிருக்க வேண்டும். இந்நிலையில் அடில் ஷாவிற்கு உள்நாட்டு பிரச்சனைகள் வந்து விடவே அவரின் கவனம் அந்த பிரச்சினைகளை களைவதில் இருந்தது. இதை பயன்படுத்தி அல்புகேர்க் மீண்டும் கோவாவை தன் வசப்படுத்தினார்.

 

மிக சிறந்த குதிரைகள் தனது படையில் இருந்தால் அடில் ஷாவுடன் ஏற்படவிருக்கும் போர்களில் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த ராயருக்கு போர்சுகீசியரின் கோவா துறைமுகத்தின் வாயிலாக பரிகளை வரவழைப்பது நல்லது என்று உணர்ந்தார். அல்புகேர்க் கோட்டைக்கு விஜயநகரம் தூது அனுப்பியது. முதலில் சிறிது காலம் அடில் ஷாவுடன் நட்பை கடைபிடித்த அல்புகேர்க் பின்னர் ராயரை ஆதரிப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து விஜயநகரம் பக்கம் சாய்ந்தார்.

 

1514 ஆம் ஆண்டு விஜயநகரம் 20000 பவுண்டுகள் போர்ச்சுகீசியருக்கு செலுத்தும் ஒரு ஒப்பந்தத்தை முன்னிறுத்தியது. காரணம் என்னவென்றால், கோவா கடற்கரை வாயிலாக குதிரைகளை இறக்குமதி செய்யும் உரிமை தங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பதுதான். ஆனால் அல்புகேர்க் இந்த ஒப்பந்தத்தை மறுத்து விட்டார்.

 

ஆனால், வருடா வருடம் 30000 பவுண்டுகள் செலுத்தினால் குதிரைகள் மற்றும் போர்ச்சுகீசிய துருப்புகள் விஜய நகரத்திற்கு ஆதரவாக போரில் ஈடுபடும் என்னும் ஒப்பந்தத்தை முன் வைத்தார் அல்புகேர்க். இதே போன்று ஒரு ஒப்பந்தத்தை அடில் ஷாவிடமும் முன் வைத்திருந்தார் அல்புகேர்க். எனினும் அடில் ஷாவிடம் முன்னிறுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் அல்புகேர்க் 30000 பவுண்டுகள் கேட்கவில்லை. அதற்கு பதிலாக கோவாவிற்கு அருகில் இருக்கும் சிறிய நிலபரப்பை போர்சுகீசியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் பக்கம் இருந்து கொள்ளலாம் என்பதே அல்புகேர்க்கின் எண்ணம். எனினும் இதன் முடிவு தெரியும் முன்னரே அல்புகேர்க் மரணமடைந்தார்.

 

குறிப்பெடுக்க உதவியவை:

1)    http://en.wikipedia.org/wiki/Afonso_de_Albuquerque

      2)    A forgotten Empire (Vijayanagar): A contribution to the history of India by Domingos Paes

Friday, January 31, 2014

தேவனும் எஸ்.வி.வியும்

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.வி.வி அவர்களும் குறிப்பிட தகுந்தவர்கள்.

 

எப்பொழுதுமே அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் புத்தகங்களில் இவ்விருவரின் புத்தகங்களுமே என்னை ஈர்க்கும். என்னையும் அறியாமல் கை நமைச்சல் எடுக்கும் புத்தகத்தை வாங்குவதற்கு. இம்முறை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய ராஜாமணி புத்தகத்தை வாங்கி நமைச்சலை தீர்த்தேன்.

 

சிறு வயதில் பெரிய புத்தகங்களை கண்டாலே உதறல் எடுக்கும் வயதில் எனது தந்தை நூலகத்தில் இருந்து தேவன் புத்தகங்களை எடுத்து வருவார். சி.ஐ.டி சந்துரு என்னும் புத்தகமே நான் படித்த முதல் பெரிய புத்தகம். அப்புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரு சிறிய நோட்டும் பேனாவும் குறிப்பு எடுக்கும் அளவிற்கு எனது ஞாபக சக்தி மங்கி இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். J

 

முதல் அத்தியாயத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றி சந்துரு 20வது அத்தியாயத்தில் மிக சுவாரசியமாக விளக்கி கொண்டிருப்பார். எனக்கு ஒன்றும் விளங்காது. எனவே எனது குறிப்புகளை பார்த்து ஓஹோ இந்த சம்பவம் இந்த அத்தியாயத்தில் நடந்துள்ளது என்று என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். J

 

நூலகத்தில் இருந்த தேவன் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்த பின் என்ன என்று விழித்து கொண்டிருந்த பொழுது தந்தை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய கோபாலன் ஐ.சி.எஸ் புத்தகத்தை கொணர்ந்தார். தேவன் அளவுக்கு இருக்குமா என்று கேட்டு கொண்டே படிக்க ஆரம்பித்தேன். தேவனுக்கு நிகராக நகைச்சுவை உணர்வு பொங்கும் படி எழுதி இருந்தார். எனினும் பெரிய அளவில் அவரது நூல்கள் நூலகத்தில் கிடைக்க பெறவில்லை.

 

சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தொடர்ந்து வரலாற்று நாவல்களாக படித்து வந்ததால் ஒரு வித அயர்ச்சியும் ஈர்ப்பின்மையும் வந்து விட்டது. அதை தவிர்ப்பதற்காக இவர்களுடைய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன். முதலாவதாக எஸ்.வி.வியின் ராஜாமணி புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இன்னும் இரு வாரங்களில் அதை பற்றி ஒரு வலைப்பூ எழுத முயற்சிக்கிறேன். இவர்களுடைய புத்தகமும் உப்பு கடலையும் என்னை பொறுத்தவரை சிறந்த காம்பினேஷன். J

 

புத்தகத்தின் முதல் 3 அத்தியாயங்களை படித்த உடன் மனம் 1940களில் சஞ்சரிக்க தொடங்குகிறது. ஒற்றை மாட்டு வண்டி, வண்டி சத்தம், ஓவல்டின், ஐ.சி.எஸ் போன்ற வார்த்தைகளும் மனிதர்களுக்கு மத்தியில் நடக்கும் சம்பாஷனைகளும் நம்மை அக்காலத்திற்கு இழுத்து செல்கிறது. வலைப்பூ விரைவில்..


 

Sunday, January 26, 2014

கடல் கோட்டை – புத்தக விமர்சனம்

இப்பொழுதெல்லாம் சிறிய புத்தகங்களை மனம் வாங்க மறுக்கிறது. குறைந்த பட்சம் 600 பக்கங்கள் இருந்தால்தான் இரு வாரங்களாவது தாக்குபிடிக்கிறது. மேற்கூறிய இரண்டையும் பூர்த்தி செய்தது உதயணின் கடல் கோட்டை புத்தகம். எனவே அப்புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். முன்னுரையை படித்தபோதே ஒரு அசாதரணமான தகவலை படிக்க நேரிட்டது. இதுவரை சோழ மன்னர்கள் மட்டுமே கடல் தாண்டி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாக எண்ணியிருந்தேன். பல்லவர்களும் கடல் ஆதிக்கத்தை செலுத்தியவர்கள் என்பதே புதிய தகவலாக இருந்தது.


புத்தகம் அராபியர்களையும் திபெத்தியர்களையும் பல்லவ மன்னர் ராஜசிம்மன் வெற்றி கொண்டதை பற்றியது. அனைத்து வரலாற்று புதினங்களை போலவே இந்த புத்தகத்திலும் மன்னர் நாயகன் அல்ல. ஒரு உபதளபதி தான் கதை நாயகன். நாயகிகளும் ஒருவருக்கு மேற்ப்பட்டவர்கள். J


புத்தகம் இரு பாகங்களை கொண்டது. முதல் பகுதி பல்லவ சாளுக்கிய போரை பற்றியது. முதல் பாகத்தின் முதல் 50 பக்கங்கள் மித வேகத்தில் போனாலும் அதை அடுத்து வரும் பக்கங்கள் மறக்கடிக்க செய்கின்றன. சாண்டில்யன் கடைபிடிக்கும் அதே நடையை உதயணனும் பின்பற்றயிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ். கதை நாயகன் கடைப்பிடிப்பதாக கூறப்படும் வியூகங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மை நகம் கடிக்க வைக்க செய்கின்றன.


இரு நாயகிகள் முதல் பாகத்தில். ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் தலை நீட்டுகிறார்கள். முதல் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆசிரியர் தனது திறமைகள் அனைத்தையும் முதல் பாகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.


இரண்டாம் பாகம் பல்லவர்கள் அராபியர்களையும் திபெத்தியர்களையும் வெற்றி கொள்வதை பற்றி என்று வாசகர்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தகத்தின் கடைசி 8-10 அத்தியாயங்களே வருகிறது. மற்ற அத்தியாயங்கள் எல்லாம் காதல் ரசத்தாலும் தேவை இல்லாத நிகழ்வுகளாலும் நிரப்பி இருக்கிறார். முதல் பாகத்தில் பரபரவென்று இருக்கும் அத்தியாயங்கள் இரண்டாம் பாகம் முழுவதுமே ஒரு தொய்வுடன் நகர்வதை உணராமல் இருக்க முடியவில்லை.



மேலும் சில இடங்களில் இரண்டாம் ரக வசனங்களையும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காதல் ரசம் நிரம்பி வழியும் இடத்தில ஆசிரியர் தனது எழுத்துக்களை இன்னும் சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. எனினும் 1000 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை கதாசிரியர் எழுதும் பொழுது ஆங்காங்கே ஒரு சில குறைகள் ஏற்படுவது சகஜமே. புத்தகத்தின் முக்கியமான நிறையாக முதல் பாகத்தையும், குறையாக இரண்டாம் பாகத்தின் தொய்வு நிறைந்த சில அத்தியாயங்களை கூறலாம். எனினும் கொடுத்த விலைக்கு இப்புத்தகம் நிறைவு தருகிறது. J