Friday, August 29, 2014

பைசாசம் – புத்தக விமர்சனம் (Paisasam – Book Review)

வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். பற்றாக்குறைக்கு பவளக்கொடியாக விளக்க படங்கள் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரமுகி படத்தில் தலைவரிடம் வடிவேலு பேய் இருக்கா? இல்லையா? என்று கேட்டிருப்பாரே. கிட்டத்தட்ட அந்த ஒற்றை கேள்விதான் பைசாசத்தின் கதை சுருக்கம். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். அவன் கையில் சதாசர்வ காலமும் ஒரு கிண்கிணி அணிந்திருப்பான். அவனுடைய அடையாளமே அதான். அவன் பெயர் மூவேந்தன். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.

ஊரில் உள்ள பூசாரி கருப்பசாமி அடித்ததனால் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிடுகிறார். ஊர் சபையினரும் அவனுக்கான ஈமக்கிரியைகளை முடித்து விடுகின்றனர். 8-9 மாதங்களுக்கு பிறகு ஊரில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் குறிப்பாக சம்பவங்கள் மூவேந்தன் இறந்து கிடந்த ஊருணிக்கரையில் நடக்கின்றன. மூவேந்தன் அணிந்திருந்த கிண்கிணி சத்தமும் கேட்க தொடங்க மூவேந்தனின் பைசாசம் வந்திருக்கிறது என்று மக்கள் பயந்து போகிறார்கள்.

சம்பவங்களுக்கு பிறகு ஊர் பாடிக்காவலனான திருவரங்கன் தனது விசாரணையை தொடங்குகிறான். தன்னால் இயன்ற அளவுக்கு துப்பறிந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காமல் போகவே, தனது குருவான வெண்ணாடரை அழைக்கிறான். வெண்ணாடரும் திருவரங்கனும் இணைந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் மூவேந்தனின் பைசாசமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்று துப்பறிய தொடங்குகிறார்கள். ராஜகேசரியில் வரும் அம்பலவாணரை போல் வெண்ணாடரும் ஒரு கிழவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழவர்கள் மேல் கோகுலுக்கு அப்படி என்ன பாசமோ. தெரியவில்லை. J

பைசாசம் தாக்கியதாக கூறப்பெறும் இரு பெண்களான மாணிக்கம் மற்றும் இலுப்பைஞ்சீலி ஆகியோரை சுற்றியே விசாரணை நடைபெறுகிறது. புத்தகத்தின் அத்தியாயங்கள் வெகு வேகமாக ஓடுகின்றது. ஒரு வித கோர்வையாக விசாரணையை வெண்ணாடர் நடத்தி செல்கிறார். ஆங்காங்கே கோவிலில் நடக்கும் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள் இடம் பெறுகின்றன.

கதை என்னதான் சுவாரசியமாக சென்றாலும் ஒரு கட்டத்தின் மேல் இச்சம்பவங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. எனினும், அதன் காரணம் என்ன என்பதை புத்தகத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் தான் வருகிறது. அதற்காக புத்தகத்தை முழுவதும் படித்து தான் ஆகவேண்டும். J 

புத்தகத்தில் கடைசி 5-6 அத்தியாயங்கள் நம்மை நகம் கடிக்க வைக்கின்றன. வெண்ணாடர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடிய ரகத்தை சேர்ந்தவை. இதுதான் காரணமாக இருக்குமோ என்று யாவரும் நினைக்காத வகையில் இருக்கும். மொத்தத்தில் இப்புத்தகத்தை  படிக்க ஆரம்பித்தால் ஓரிரு நாட்களில் முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்வோம். கோகுலின் மதுரகவி மட்டும் தான் இன்னமும் படிக்கவில்லை. அதையும் கூடிய விரைவில் வாங்கி படித்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தை இப்புத்தகம் எனது மனதினில் விதைத்துவிட்டது.

ராஜகேசரி புத்தக விமர்சனத்தின் உரலி இங்கே 
http://southindianhistory-india.blogspot.in/2014/04/blog-post.html

No comments:

Post a Comment