Tuesday, December 31, 2013

ஜல தீபம் – முதல் பாகம் ஒரு பார்வை

இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சோழர்களைப்பற்றி மட்டுமே எழுதுவது. மேலும் என்னுடைய மற்ற பதிவுகளை விட புத்தகங்களை பற்றி நான் எழுதுபவை பலர் பார்க்கின்றனர் என்பதை எனது வலைப்பூவின் வரத்து எண்ணிக்கை கூறுகின்றன. எனவே நான் எப்பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கிறேனோ அப்பொழுதே அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன். சமீபமாக நான் படித்து முடித்து ஜல தீபம் புத்தகத்தின் முதல் பாகம்.


ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடும்போது அதில் அவர்களது டிரேட்மார்க் தெரியும். உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் ஷங்கரின் திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை சொல்லலாம். அதே போல், தமிழ் எழுத்தாளர்களில் சிறந்தவர்களுள் ஒருவரான சாண்டில்யனின் நூல்களில் ஒரு சில ஒற்றுமைகளை கூறிவிடலாம். அவற்றில் முதன்மையானது கதாநாயகன் ஒருவனாக இருந்தாலும் கதாநாயகிகள் ஒன்றுக்கு மேற்ப்பட்டவராக இருப்பர். இரண்டாவாதாக, கதாநாயகனுக்கு அடுத்தபடியாக ஒருவர் இருப்பார். எளிமையாக கூறினால் ஆங்காங்கே தோன்றுவார். உத்தரவுகளை பிறப்பிப்பார். பெரிய மனிதனாக சித்தரிக்கப்படுவார். மூன்றாவது, கதாநாயகன் வீர சாகசங்கள் புரிவார். நான்காவதாக, மிக முக்கியமானதாக கருதப்படுவது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் தறுவாயிலும் ஒரு திருப்பம் அல்லது ட்விஸ்ட் இருக்கும். ஏன் அப்படி எழுதி இருக்கிறார் என்று ஆரம்ப காலங்களில் புரியவில்லை. எனது தந்தையும், எனது நண்பன் ஒருவரும்தான் புத்தகத்தின் கதையை மட்டும் படிக்கக்கூடாது, அதனுடைய முன்னுரையையும் படிக்க வேண்டும் என்று கூறினார். அப்படி படித்த பொழுதுதான் இவருடைய பெருவாரியான புத்தகங்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை என்று தெரிய வந்தது. J


மேற்கூறிய நான்கிலிருந்து ஜல தீபம் நூலளவு கூட விலகவில்லை. முதல் பாகம் சுமார் 350 பக்கங்கள் கொண்டது. கதாநாயகன் இதயச்சந்திரன் முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். முதல் பாகத்திலேயே இரண்டு நாயகிகள் வந்து விடுகிறார்கள். பெரிய மனிதராக சார்கேல் கனோஜி ஆங்க்ரே வந்து விடுகிறார். இதயச்சந்திரன் ஒரு நபரை தேடி செல்கிறார். கடற்போரில் வீழ்த்தப்படுகிறார். சில பல திருப்பங்களுக்கு பிறகு கனோஜியடம் பணி புரிய செல்கிறார் இதயச்சந்திரன்.


 முதல் பாகத்தில் வில்லனாக பெரியதாக யாருமில்லை. ஒரு சில அத்தியாயங்களுக்கு மட்டும் சித்தி என்பவர் வில்லனாக வந்து போகிறார். முதலில் எட்டி பார்க்கும் பானுமதி என்னும் கதாநாயகி முதல் பாதியில் மட்டும் வருகிறார். இரண்டாம் பாதியில் மஞ்சு என்பவர் வருகிறார்.


புத்தகத்தின் முதல் பகுதி கதைக்களத்தை புரிந்து கொள்வதிலேயே போய் விடுகிறது. எனினும் ஆசிரியர் வாசகர்களை பெரிதாக சிரமப்படுத்தவில்லை. முதல் 50  பக்கங்களில் மிக எளிதாக புரிந்துவிடுகிறது. கதையின் பெயரான ஜல தீபம் புத்தகத்தின் 200வது பக்கத்தில் உதிர்க்கப்படுகிறது. எனக்கு என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது கடல் புறாவின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


எனினும், சாண்டில்யன் வழக்கம் போல் வித விதமான திருப்பங்களை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் வைத்து அந்த ஞாபகங்களை துரத்தி அடிக்கிறார். அவருடைய எழுத்துகளை விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரியவன் இல்லையென்றாலும் இந்த வலைப்பூ படிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றும் என்ற நோக்கத்துடனும் அவர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டமாக இருக்கும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.


     இரண்டாம் பாகத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்..

Sunday, December 8, 2013

சோழர்களுக்கும் மேலை சளுக்கதுக்குமான பகை – பகுதி நான்கு

 முதலாம் ராஜேந்திர சோழரின் புதல்வர்களுள் ஒருவருமான இரண்டாம் ராஜேந்திர சோழருக்கு பிறகு சோழ மன்னனாக முடிசூட்டப்பெற்றவருமான வீர ராஜேந்திர சோழரின் காலத்திற்கு வருவோம். இவருடைய மெய்க்கீர்த்திகளில் மேலை சளுக்கர்களை ஐந்து முறை புறமுதுகிட்டு ஒடச்செய்ததாக குறிப்பிடப்படுகிறது.

மேலை சளுக்கர்களுடன் இடை விடாது போர்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் வீர ராஜேந்திரர். வேங்கியின் மன்னனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருந்தார். வேங்கியின் மன்னனோ இரு தலைக்கொல்லி எறும்பாக தவித்தான். ஒரு புறம் மேலை சளுக்கர்களும் சோழர்களும் தங்களை பகடைக்காயாக உபயோகிப்பது. மற்றொரு புறம் உட்கட்சிப்பூசல். அதாவது எந்நேரத்திலும் ராஜ ராஜ நரேந்திரரின் புதல்வன் அநபாயன் தனது சிம்மாசனத்தை பறிக்கலாம். வேங்கியின் நிலையை இன்றைய காஷ்மிரோடு ஒப்பிடலாம்

 

இவர்களது பகை பெரும்பாலும் வேங்கியை சுற்றியே பின்னப்பட்டிருந்தது. வீர ராஜேந்திரர் காலத்திற்கு வருவோம். எந்த சமயத்தில் எந்த இடத்தில நடைப்பெற்ற போர் என்று தெரியாத போரில் வீர ராஜேந்திரர் சளுக்கர்களின் அணியில் போரிட வந்தான் 7 படைத்தலைவர்களின் தலையை கொய்தார் எனவும் இது சோமேஸ்வரனை மிகவும் சினப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சோமேஸ்வரன் சோழ மன்னனுக்கு கடிதம் ஒன்றில் அடுத்த போருக்கு நாள் குறித்ததாகவும் அதைக்கண்ட வீர ராஜேந்திரர் மிகவும் மகிழ்ச்சியுற்று தனது படைகளோடு குறித்த நாளில் குறித்த இடத்திற்கு சென்று ஒரு திங்களாகியும் சோமேஸ்வரன் வரவில்லை என்றும் நீலகண்ட சாஸ்திரிகள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதையடுத்து வீர ராஜேந்திரர் தனது சேனாபதிகளை எரிப்பரந்தெடுத்தலில் ஈடுபடுத்துகிறார்.  


எனினும் சோமேஸ்வரன் வருகாமைக்கு தெளிவான காரணங்கள் குறிப்பிடப்பெறவில்லை. ஒரு சாரார் சோழர்களின் பிரம்மாண்ட படைகளிடம் மீண்டும் தோல்வியுற பயந்தான் எனவும் மற்றொரு சாரார் சோமேஸ்வரனுக்கு மரணம் சம்பவித்திருக்ககூடும் என்று கூறுகின்றனர். வீர ராஜேந்திரரின் வேங்கி படையெடுப்பின் போதும் சோமேஸ்வரன் இருக்கப்பெறவில்லை என்பது அறியப்படுகிறது. தனது மருமகனான விஜயாதித்யனுக்கு கிடைக்க வேண்டிய வேங்கி சிம்மாசனம் மேலை சளுக்கர்களிடம் இருப்பதைக்கண்டு வீர ராஜேந்திரர் தனது படைகளை வேங்கியை நோக்கி நகர்த்தினார். அங்கே நிலை பெற்றிருந்த மேலை சளுக்கர்களின் படைகள் சோழப்படைகள் முன் சிதறியோட விஜயாதித்தனுக்கு மீண்டும் வேங்கி சிம்மாசனம் கிடைத்தது. 


சோமேஸ்வரன் மரணத்திற்கு பிறகு இரண்டாம் சோமேஸ்வரன் மேலை சளுக்கர்களின் மன்னனாக 1068 ஆம் ஆண்டு முடிசூட்டப்பெறுகிறார். எனினும் இரண்டாம் சோமேஸ்வரனுக்கு சோழர்கள் மட்டும் எதிரியாக இருக்கவில்லை. அவனது தம்பியான ஆறாம் விக்ரமாதித்தன் தனது அண்ணனை எதிர்க்க தொடங்கினான். தனது மற்றொரு தம்பியான ஜெயசிம்மனுடன் கல்யாணி நகரத்தை விட்டு பெரும் படைகளுடன் செல்லத்தொடங்கினான். அவனை அழிக்க மற்றொரு படைப்பிரிவை சோமேஸ்வரன் அனுப்பிவைத்தான். அப்படைகளை வெற்றிகரமாக முறியடித்த விக்ரமாதித்தன் சோழ நாட்டை நோக்கி முன்னேற தொடங்கினான். மற்றொரு பெரும் போருக்கு தயார் நிலையில் இல்லாதிருந்த வீர ராஜேந்திரர் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளை மணமுடித்து போரை தவிர்த்தான். இதையடுத்து சளுக்கர்களின் ஒரு படைப்பிரிவோடு சோழப்படைகள் இணையக்கூடிய வாய்ப்பு அமைந்தது. 


மீண்டும் கல்யாணி நகரத்தை போர் மேகம் சூழ்ந்தது. இம்முறை சளுக்கர்களின்(சோமேஸ்வரன்) ஒரு படைப்பிரிவு ஒரு அணியாகவும், சளுக்கர்களின்(விக்ரமாதித்தன்) மற்றொரு படைப்பிரிவு, சோழர்களின் படை, கடம்ப(ஜெயசிம்மன்) நாட்டின் படை, வேங்கியின் படைகள் ஒரு அணியாகவும் திரண்டன. சோமேஸ்வரன் நாட்டை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை தனது தமையனுக்கு தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். சளுக்கர்களின் உள்நாட்டு பகையை உபயோகபடுத்திக்கொண்ட வீர ராஜேந்திரர் சோழர்களுக்கும் சளுக்கர்களுக்குமான பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் மேலை சளுக்கர்கள் தங்களது வட எல்லையில் பாமரர்களை இடையறாது எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் சோழர்களுடனான பகையை முடித்துக்கொண்டனர்.

 

முதன் முறையாக எடுத்து கொண்ட தலைப்பை முழுமையாக முடித்திருக்கிறேன். :)

     

சோழர்களைப்பற்றிய புதினங்களை தொடர்ந்து படிப்பது ஒரு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சோழ கங்கம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி விமர்சனம் தாமதமாகும் என்று நினைக்கிறேன். தற்பொழுது சாண்டில்யனின் ஜல தீபத்தை வாசிக்கிறேன். அடுத்ததாக உதயணின் கடல் கோட்டை படிக்கலாம் என்றிருக்கிறேன்.