Saturday, May 23, 2015

வீரபாண்டியன் மனைவி(Veerapandiyan Manaivi) பாகம்-I - ஒரு விமர்சனம்

வேலைப்பளு மற்றும் போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு நடுவில் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதால் கடந்த இரு மாதங்களில் என்னால் எதுவும் எழுதவியலவில்லை. இப்பொழுது எல்லாம் வேலைப்பளு இல்லையா என்று கேட்காதீர்கள். வேலைப்பளு பழகிவிட்டது. இடைப்பட்ட நேரங்களில், மறுபடியும் புத்தகமும் கையுமாக அலைய ஆரம்பித்துவிட்டேன். அதன் விளைவுதான் இந்த பதிவு.

எனக்கு, பெரிய புத்தகங்கள் அதுவும் வரலாறு சம்பந்தப்பட்ட பெரிய புத்தகங்கள் என்றால்  ஒரு அலாதிதான். வீரபாண்டியன் மனைவி மூன்று பாகங்களும் சுமார் 1700 பக்கங்களும் கொண்டது. நெடுநாட்களாக எனது அலமாரியில் தூசு படிந்து கிடந்தது. முதல் புத்தகத்தை தூசு தட்டி படிக்க ஆரம்பித்தேன். 400 பக்கங்கள். சும்மா விறுவிறுவென்று முடிந்துவிட்டது.

வரலாற்று புத்தகங்கள் என்றாலே ராஜாக்களும் பல நல்லவர்களும் சில கெட்டவர்களும் இருப்பர். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே சண்டை மூளும். இறுதியில் மாரல் சயின்ஸ் கதையை போல் நல்லவர்கள் வெல்வார்கள். இதை போன்று கிளிஷேக்களை(cliche) உடைய பல புத்தகங்களை படித்தாகிற்று. இந்த புத்தகத்திலும் அதே கிளிஷேக்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


வீரபாண்டியன் மற்றும் விக்கிரமபாண்டியன் இடையே நடக்கும் பங்காளி சண்டைதான் கதையின் மையக்கரு. வீரபாண்டியன் ஆளும் பாண்டிய நாட்டை மூன்றாம் குலோத்துங்கனின் படைகள் முற்றுகையிட்டு தங்களுக்கு சாதகமாக நடக்கக்கூடிய விக்கிரமபாண்டியனை ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கிறது. படைகளை தலைமை தாங்கி பல தலைவர்கள் வருகிறார்கள். குறிப்பிட தகுந்தோர் ஜனநாதன், வீரசேகரன்.

வீரசேகரன் பெயருக்கு ஏற்றார் போல் தனது வீர பராக்கிரமங்களை உபயோகித்து மதுரையை பிடிக்கிறான். வீரபாண்டியன் மற்றும் அவரை சார்ந்தோர் தென்பாண்டி நாட்டிற்கு ஓடுகின்றனர். வீரபாண்டியனை "அவர்" என்று நான் விளித்ததில் இருந்து வரலாற்று நாவலில் வழக்கமாக வரும் தர்மவான் கதாபாத்திரம் அவர்தான் என்பதை நீங்கள் கண்டுப்பிடித்திருப்பீர்கள். வீரசேகரன் மற்றும் ஊர்மிளாதான் கதையின் நாயகன் மற்றும் நாயகி ஆவர். வீரசேகரன் சோழ நாட்டவன். ஊர்மிளாவோ வீரபாண்டியன் கட்சியை சேர்ந்தவள். ஊர்மிளாவிற்கு பின் சில மர்மங்கள். இருவரும் எப்படியோ காதல் வலையில் விழுகின்றனர்.

என்னை பொறுத்தவரை முதல் பாகத்தில் எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் ஜனநாதன் தான்,ஜனநாதன் பேசும் வசனங்கள் எல்லாம் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதியின் வசனங்கள் போல் இருக்கின்றன. அன்றைய படைத்தலைவர்கள் இப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கவைக்கிறது. ஆனால் பெரும்பாலான புத்தகங்கள் படைத்தலைவர்கள், சேனாதிபதிகள், இளவரசர்கள், மன்னர்கள் ஆகியோரை தர்மவான்களாக அல்லது மிகவும் கெட்டவர்களாகவோ தான் சித்தரிக்கும். ஒரு சில புத்தகங்களில் தான் மிகவும் ப்ராக்டிகலாக இருக்கும். இந்த புத்தகத்தில் வரும் ஜனநாதன் ஒரு ப்ராக்டிகலான அரசியல்வாதி.

முதல் பாகத்தின் பெயர் யுத்த காண்டம் என்றும் அத்தியாயங்களின் தலைப்பு ராமாயணத்தின் அத்தியாயங்களின் தலைப்புகளாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாதன் என்ற ஒற்றை மனிதன் பின்னும் வலையை சுற்றி நடக்கிறது முதல் பாகம். சூப்பர் என்று சொல்லலாம்.

இரண்டாம் பாகம் விமர்சனம் விரைவில்...