Tuesday, July 9, 2013

கலிங்கத்துப்பரணி - ஒரு அறிமுகம்

வரலாறு சம்பந்தமான புத்தகங்களில் பிரதானமானதாக இருப்பது அன்றும் இன்றும் என்றும் பொன்னியின் செல்வனே.பொன்னியின் செல்வன் படித்து முடித்தவர்கள் வழக்கமாக சில காலம் வரலாறு சம்பந்தமான நூல்களில் அடுத்து என்ன படிப்பது என்று திணறுவதுண்டு. ஆம். எனக்கும் அந்த திணறல் ஏற்ப்பட்டது. அந்த சமயத்தில் தான் கடல் புறா கையில் சிக்கியது. சாண்டில்யனின் அவர்களின் கை வண்ணத்தில் உருவான மிகச்சிறந்த புத்தகம். அதிலும் முதல் பாகம் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாத ஒன்று.

அப்புத்தகத்தை நம் திரைக்கலைஞர்கள்  ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. முதல் பாகத்தில் தோன்றும் அநபாய சோழன் நம்மை கவர்ந்திழுக்க கூடிய வகையில் உருவாக்கி இருப்பார். இப்படியே எழுதி கொண்டு போனால் அது கடல் புறா பற்றிய விமர்சனம் போல் ஆகிவிடும். சிறுவனாகிய எனக்கு அந்த தகுதி கிட்டிவிட்டதாக கருதவில்லை. விடயத்திற்கு வருவோம். அந்த அநபாயன் தான் சோழ நாடு அரசனில்லாமல் தவித்த போது சோழ நாட்டை பிற மன்னர்கள் கவராமல் அரியணை ஏறி காப்பாற்றியவன். ஆம். அநபாயனே முதலாம் குலோத்துங்கன் ஆவான். இதைப்பற்றி ஏற்கனவே ஒரு சில வலைப்பதிவுகள் எழுதி விட்டேன்.

சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர்கள் ராஜ ராஜனும் ராஜேந்திரனுமே. முதலாம் குலோத்துங்கனும் அவர்களுக்கு நிகராக சோழ நாட்டை ஆண்டவன். சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனுடைய ஆட்சி காலத்தில் கவிஞர் சயங்கொண்டார் அவர்களால் அரங்கேற்றப்பெற்றதே கலிங்கத்துப்பரணி.

குலோத்துங்கன் தனது ஆட்சி காலத்தில் புரிந்த அரும் பெரும் சாதனைகளுள் ஒன்றாக தென் கலிங்கத்துடன் போரிட்டு அந்நாட்டை சோழ வள நாடுடன் இணைத்தமையை குறிப்பிடலாம். இப்போரை பற்றியும் அப்போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் குலோத்துங்கனின் அரசவைப்புலவர் ஜெயங்கொண்டார் இயற்றியதே கலிங்கத்துப்பரணி.

பரணி என்பது போர்க்களங்களில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றியடைபவர்களை புகழ்ந்து பாடுவதாகும். இதை நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சமீபமாக அப்புத்தகத்தின் பிரதி ஒன்று நண்பன் மூலம் கிடைத்தது.

புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

போர் பகுதி இன்னும் படிக்கவில்லை. இது வரை படித்ததில் குலோத்துங்கன் பெருமையே போற்றப்படுகிறது. படித்த வரை எனக்கு பிடித்த வரிகளை கீழே எழுதியுள்ளேன்.

                    "பனி ஆழி உலகு அனைத்தும் 
                     பரந்த கலி இருள் நீங்க 
                     தனி ஆழி தனை நடத்தும் 
                     சய துங்கர் வாழ்க"

பொருள்(நான் புரிந்து கொண்டது):
பனி சூழ்ந்த உலகத்தில் எதிர் வரும் பொருட்கள் எப்படி ஒருவனின் கண்ணுக்கு புலப்படாதோ அது போல் கலி சூழும் உலகத்தில் நாளை என்ன நடக்கும் என்று புலப்படாது.

எளிமையாக கூற வேண்டும் என்றால் சோழ நாடு உள்நாட்டு கலகத்தாலும், சிற்றரசர்களின் புரட்சியாலும், எதிரிகளின் படைகளாலும் சூழப்பட்டு எதிர்வருவது என்னவென்று தெரியாமல் தவிக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருளை நீக்கி, சூரியனாய், சுடர் விடும் விளக்காய் வருகிறான் குலோத்துங்கன்.

தொடரும்....

No comments:

Post a Comment