Saturday, October 6, 2012

மற்றுமொரு மரணம் - தொடர்ச்சி

சென்ற வலைப்பதிவின் தொடர்ச்சி......

2) உள்நாட்டுக்கலகம்

பில்ஹனர் தனது நூலில் அதிராஜேந்திரன்  உள்நாட்டுக்கலகத்தால் மரணத்தை தழுவினான் என்று கூறுகிறார்.

உள்நாட்டுக்கலகம் நிகழும் அளவிற்கு சோணாட்டில் என்ன பிரச்சனை நடைபெற்றிருக்ககூடும் என்று வாசகர்கள் நினைக்கலாம். முதலில் அது நடந்ததற்கு காரணமாக இருந்திருக்கக்கூடியவைகளை பார்ப்போம். பிறகு அதன் மறுப்புகளையும் பார்ப்போம்.

உள்நாட்டுக்கலகம் நிகழ்வதற்கு கூறுகள் இரண்டாக இருந்திருக்கலாம்.

அ) வீரராஜேந்திர சோழன் இறந்தப்பிறகு சோழநாட்டில் உள்நாட்டுக்கலகம் நிகழ்ந்ததாகவும் அதை மேலை சளுக்க மன்னன் அடக்கிய பின் அதிராஜேந்திரனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதாகவும் பில்ஹனர் தனது நூலில் உரைக்கிறார். எனினும் முன்னமே கூறியபடி மன்னன் புகழ் பாடும் நூல் சில விடயங்கள் மிகைப்படுத்தப்படுவது இயற்கையே.

சோழ நாட்டிற்க்கு தொன்றுதொட்டு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்து வரும் சிற்றரசர்கள் உள்நாட்டுக்கலகத்தை உண்டாகியிருப்பார்கள் என்றோ அல்லது மக்களே  போராட்டம் நடத்தும் அளவிற்கு சோழ நாட்டில் பஞ்சமோ அல்லது பீதியோ எதுவும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

மேலும் அதிராஜேந்திரனின் முடிசூட்டு விழாவில் சோழ மன்னனின் மைத்துனான  சளுக்க மன்னன் விக்கிரமாதித்தன் பங்கு பெற்றிருப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதை பில்ஹனர்  சற்று மிகைப்படுத்திக்கூறுகிறார்  என்பதே எனது வாதம்.

ஆ) கிருமி கண்ட சோழன்???

சில வரலாற்றாய்வாளர்கள் இம்மன்னனையே  கிருமி கண்ட சோழன் என்று கூறுகிறார்கள். அதாவது தில்லை கோவிலிலிருந்து பெருமாள் சிலையை பெயர்த்தெடுத்து கடலில் எறிந்தவன் இவனே என்பது இவர்களின் வாதம். இச்சம்பவத்தால் கொதித்தெழுந்த அந்தணர்கள் இவனுக்கு எதிராக தீய சக்திகளை (பில்லி, சூன்ய வகையறாக்கள்) ஏவி இவனை அழித்ததாகவும் கூறுகின்றனர். இது முற்றிலும் மறுக்கப்படவேண்டிய ஒன்று.

 எனினும் இச்சம்பவம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்தது என்பது தெளிவாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது(தில்லை கோவிலில் இருந்து சிலை பெயர்த்தெடுத்த சம்பவம்). எனவே  கிருமி கண்ட சோழன் இவரில்லை என்பது உறுதியாகிறது.


 மேலும் இம்மன்னன் போர் எதிலும் பங்கேடுத்துக்கொண்டதுக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இம்மன்னன் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்பதே  எனது கருத்து.

இம்மன்னனுடன் விசயலாயர் நிறுவிய சோழப்பேரரசு முடிவுக்கு வருகிறது. அதாவது இடைக்கால சோழர்களின் காலம் முடிவடைகிறது.

 இதன் பிறகு சிம்மாசனத்தில் அமரவிருக்கும் முதலாம் குலோத்துங்கன் எதிர்கொண்ட சம்பவங்கள் குறித்து மற்றொரு தருணத்தில் எழுதுகிறேன்.