Friday, January 31, 2014

தேவனும் எஸ்.வி.வியும்

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.வி.வி அவர்களும் குறிப்பிட தகுந்தவர்கள்.

 

எப்பொழுதுமே அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் புத்தகங்களில் இவ்விருவரின் புத்தகங்களுமே என்னை ஈர்க்கும். என்னையும் அறியாமல் கை நமைச்சல் எடுக்கும் புத்தகத்தை வாங்குவதற்கு. இம்முறை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய ராஜாமணி புத்தகத்தை வாங்கி நமைச்சலை தீர்த்தேன்.

 

சிறு வயதில் பெரிய புத்தகங்களை கண்டாலே உதறல் எடுக்கும் வயதில் எனது தந்தை நூலகத்தில் இருந்து தேவன் புத்தகங்களை எடுத்து வருவார். சி.ஐ.டி சந்துரு என்னும் புத்தகமே நான் படித்த முதல் பெரிய புத்தகம். அப்புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரு சிறிய நோட்டும் பேனாவும் குறிப்பு எடுக்கும் அளவிற்கு எனது ஞாபக சக்தி மங்கி இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். J

 

முதல் அத்தியாயத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றி சந்துரு 20வது அத்தியாயத்தில் மிக சுவாரசியமாக விளக்கி கொண்டிருப்பார். எனக்கு ஒன்றும் விளங்காது. எனவே எனது குறிப்புகளை பார்த்து ஓஹோ இந்த சம்பவம் இந்த அத்தியாயத்தில் நடந்துள்ளது என்று என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். J

 

நூலகத்தில் இருந்த தேவன் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்த பின் என்ன என்று விழித்து கொண்டிருந்த பொழுது தந்தை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய கோபாலன் ஐ.சி.எஸ் புத்தகத்தை கொணர்ந்தார். தேவன் அளவுக்கு இருக்குமா என்று கேட்டு கொண்டே படிக்க ஆரம்பித்தேன். தேவனுக்கு நிகராக நகைச்சுவை உணர்வு பொங்கும் படி எழுதி இருந்தார். எனினும் பெரிய அளவில் அவரது நூல்கள் நூலகத்தில் கிடைக்க பெறவில்லை.

 

சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தொடர்ந்து வரலாற்று நாவல்களாக படித்து வந்ததால் ஒரு வித அயர்ச்சியும் ஈர்ப்பின்மையும் வந்து விட்டது. அதை தவிர்ப்பதற்காக இவர்களுடைய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன். முதலாவதாக எஸ்.வி.வியின் ராஜாமணி புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இன்னும் இரு வாரங்களில் அதை பற்றி ஒரு வலைப்பூ எழுத முயற்சிக்கிறேன். இவர்களுடைய புத்தகமும் உப்பு கடலையும் என்னை பொறுத்தவரை சிறந்த காம்பினேஷன். J

 

புத்தகத்தின் முதல் 3 அத்தியாயங்களை படித்த உடன் மனம் 1940களில் சஞ்சரிக்க தொடங்குகிறது. ஒற்றை மாட்டு வண்டி, வண்டி சத்தம், ஓவல்டின், ஐ.சி.எஸ் போன்ற வார்த்தைகளும் மனிதர்களுக்கு மத்தியில் நடக்கும் சம்பாஷனைகளும் நம்மை அக்காலத்திற்கு இழுத்து செல்கிறது. வலைப்பூ விரைவில்..


 

Sunday, January 26, 2014

கடல் கோட்டை – புத்தக விமர்சனம்

இப்பொழுதெல்லாம் சிறிய புத்தகங்களை மனம் வாங்க மறுக்கிறது. குறைந்த பட்சம் 600 பக்கங்கள் இருந்தால்தான் இரு வாரங்களாவது தாக்குபிடிக்கிறது. மேற்கூறிய இரண்டையும் பூர்த்தி செய்தது உதயணின் கடல் கோட்டை புத்தகம். எனவே அப்புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். முன்னுரையை படித்தபோதே ஒரு அசாதரணமான தகவலை படிக்க நேரிட்டது. இதுவரை சோழ மன்னர்கள் மட்டுமே கடல் தாண்டி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாக எண்ணியிருந்தேன். பல்லவர்களும் கடல் ஆதிக்கத்தை செலுத்தியவர்கள் என்பதே புதிய தகவலாக இருந்தது.


புத்தகம் அராபியர்களையும் திபெத்தியர்களையும் பல்லவ மன்னர் ராஜசிம்மன் வெற்றி கொண்டதை பற்றியது. அனைத்து வரலாற்று புதினங்களை போலவே இந்த புத்தகத்திலும் மன்னர் நாயகன் அல்ல. ஒரு உபதளபதி தான் கதை நாயகன். நாயகிகளும் ஒருவருக்கு மேற்ப்பட்டவர்கள். J


புத்தகம் இரு பாகங்களை கொண்டது. முதல் பகுதி பல்லவ சாளுக்கிய போரை பற்றியது. முதல் பாகத்தின் முதல் 50 பக்கங்கள் மித வேகத்தில் போனாலும் அதை அடுத்து வரும் பக்கங்கள் மறக்கடிக்க செய்கின்றன. சாண்டில்யன் கடைபிடிக்கும் அதே நடையை உதயணனும் பின்பற்றயிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ். கதை நாயகன் கடைப்பிடிப்பதாக கூறப்படும் வியூகங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மை நகம் கடிக்க வைக்க செய்கின்றன.


இரு நாயகிகள் முதல் பாகத்தில். ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் தலை நீட்டுகிறார்கள். முதல் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆசிரியர் தனது திறமைகள் அனைத்தையும் முதல் பாகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.


இரண்டாம் பாகம் பல்லவர்கள் அராபியர்களையும் திபெத்தியர்களையும் வெற்றி கொள்வதை பற்றி என்று வாசகர்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தகத்தின் கடைசி 8-10 அத்தியாயங்களே வருகிறது. மற்ற அத்தியாயங்கள் எல்லாம் காதல் ரசத்தாலும் தேவை இல்லாத நிகழ்வுகளாலும் நிரப்பி இருக்கிறார். முதல் பாகத்தில் பரபரவென்று இருக்கும் அத்தியாயங்கள் இரண்டாம் பாகம் முழுவதுமே ஒரு தொய்வுடன் நகர்வதை உணராமல் இருக்க முடியவில்லை.



மேலும் சில இடங்களில் இரண்டாம் ரக வசனங்களையும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காதல் ரசம் நிரம்பி வழியும் இடத்தில ஆசிரியர் தனது எழுத்துக்களை இன்னும் சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. எனினும் 1000 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை கதாசிரியர் எழுதும் பொழுது ஆங்காங்கே ஒரு சில குறைகள் ஏற்படுவது சகஜமே. புத்தகத்தின் முக்கியமான நிறையாக முதல் பாகத்தையும், குறையாக இரண்டாம் பாகத்தின் தொய்வு நிறைந்த சில அத்தியாயங்களை கூறலாம். எனினும் கொடுத்த விலைக்கு இப்புத்தகம் நிறைவு தருகிறது. J