Tuesday, December 25, 2012

வேங்கி நாட்டு அரசியல் சூழல் பாகம் 2

விஷ்ணுவர்தன் பிறப்பு:

நரேந்திரன் ஆட்சி கட்டிலில் ஏறியவுடன் விவகாரம் ஓய்ந்துவிடவில்லை. மேலை சளுக்கர்கள் வேங்கியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஓயாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் ராஜேந்திரன் தன்னுடைய கங்கை படையெடுப்பிற்கு ஏதுவாக வேங்கி நாடு இருக்கவேண்டும் என்பதற்காக சோழர்கள்-வேங்கி இடையே இருந்த கொள்வினை கொடுப்பினை உறவு தொடருமாறு செய்தான். ராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். நரேந்திரன்-அம்மங்கா தேவி இவ்விருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுடைய இயற்ப்பெயர் விஷ்ணுவர்தன்.

நரேந்திரன் மரணம் - மற்றுமொரு குழப்பம் 

காலச்சக்கரம் உருண்டோட சோழ நாட்டில் ராஜேந்திரனுக்கு பிறகு நாம் வீரராஜேந்திரன் காலத்திற்கு மாறுகிறோம். வீரராஜேந்திரன்  தன்னுடைய  மகளை நரேந்திரனுடைய தம்பியாகிய விஜயாதித்தனுக்கு மணமுடித்து வைத்து விஜயாதித்தனும் மேலை சளுக்கர்கள் வசமாகாமல் பார்த்துக்கொண்டான். இந்நிலையில் நரேந்திரன் இறந்து விடவே  சோழ அரியணையில் வீற்றிருந்த வீரராஜேந்திரன் தன்னுடைய மருமகனான விஜயாதித்தனுக்கு முடி சூட்டினான். நரேந்திரனின் மகனான விஷ்ணுவர்தனுக்கு கிடைக்கவேண்டிய அரியணை விஜயாதித்தனை சென்றடைந்தது. சோழர்கள் செய்த தவறுகளுள் இதுவும் ஒன்று.

விஷ்ணுவர்தனின் செய்கை:
அரியணை கிடைக்காவிடிலும் விஷ்ணுவர்தன் சோழர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்தான். எனினும் பொறுத்தார் பூமியாள்வார் என்பதேர்கர்ப்ப விஷ்ணுவர்தனுக்கு காலம் கனிந்து வரத்தொடங்கியது. வீரரஜெந்திரன் இறந்த வேளையில் உள்நாட்டுக்கலகம் ஏற்பட்டதையும் அதைத்தொடர்ந்து அதி ராஜேந்திரனை அரியணையில் ஏற்ற விஜயாதித்தன் சோழ நாட்டிற்கு வந்து அதி ராஜேந்திரனை அரியணையில் அமர வைத்தான். இதைப்பற்றி பிறிதொரு வலைபதிவில் எழுதியுள்ளேன்.

விஷ்ணுவர்தன் --> குலோத்துங்கன் 
அரியணையில் ஏறிய சிற்சில திங்களில் அதி ராஜேந்திரன் மரணமடைய மன்னனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமையால்  சோழ நாடு உள்நாட்டு கலகத்தில் சிக்கி தவிக்க ஆரம்பித்தது. இதையடுத்து விஷ்ணுவர்தன், தான் ராஜேந்திர சோழரின் மகள் வயிற்று பேரன்தான் என்றும் தனக்கும்  இந்த சோழ நாட்டில் உரிமையுள்ளதைப்பற்றி எடுத்துரைக்க சோழ நாட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் விஷ்ணுவர்தனை சோழ நாட்டின் மன்னனாக முடிசூடினர்.

இதுவே விஷ்ணுவர்தன் முதலாம் குலோத்துங்கனாய் மாறிய வரலாறு.

இதற்கிடையில் வேங்கியில் விஜயாதித்தனும் இறந்து விடவே விஜயாதித்தனுக்கும் நேரடி வாரிசுகள் இல்லாமையாலும் வேங்கி நாடு  சோழர்களின் நேரடிக்கட்டுப்பாடில் (குலோத்துங்கன் காலத்தில்) வந்தது. இதற்கு தகுந்த ஆதாரமாக முதலாம் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனை வேங்கி நாட்டில் இருத்தியிருந்ததை கூறலாம்.

இதன் மூலம் சோழர்கள்-கீழை சளுக்கர்களுடனான உறவு ஒரு முடிவுக்கு வந்தது எனக்கூறலாம்.