Tuesday, December 31, 2013

ஜல தீபம் – முதல் பாகம் ஒரு பார்வை

இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சோழர்களைப்பற்றி மட்டுமே எழுதுவது. மேலும் என்னுடைய மற்ற பதிவுகளை விட புத்தகங்களை பற்றி நான் எழுதுபவை பலர் பார்க்கின்றனர் என்பதை எனது வலைப்பூவின் வரத்து எண்ணிக்கை கூறுகின்றன. எனவே நான் எப்பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கிறேனோ அப்பொழுதே அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன். சமீபமாக நான் படித்து முடித்து ஜல தீபம் புத்தகத்தின் முதல் பாகம்.


ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடும்போது அதில் அவர்களது டிரேட்மார்க் தெரியும். உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் ஷங்கரின் திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை சொல்லலாம். அதே போல், தமிழ் எழுத்தாளர்களில் சிறந்தவர்களுள் ஒருவரான சாண்டில்யனின் நூல்களில் ஒரு சில ஒற்றுமைகளை கூறிவிடலாம். அவற்றில் முதன்மையானது கதாநாயகன் ஒருவனாக இருந்தாலும் கதாநாயகிகள் ஒன்றுக்கு மேற்ப்பட்டவராக இருப்பர். இரண்டாவாதாக, கதாநாயகனுக்கு அடுத்தபடியாக ஒருவர் இருப்பார். எளிமையாக கூறினால் ஆங்காங்கே தோன்றுவார். உத்தரவுகளை பிறப்பிப்பார். பெரிய மனிதனாக சித்தரிக்கப்படுவார். மூன்றாவது, கதாநாயகன் வீர சாகசங்கள் புரிவார். நான்காவதாக, மிக முக்கியமானதாக கருதப்படுவது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் தறுவாயிலும் ஒரு திருப்பம் அல்லது ட்விஸ்ட் இருக்கும். ஏன் அப்படி எழுதி இருக்கிறார் என்று ஆரம்ப காலங்களில் புரியவில்லை. எனது தந்தையும், எனது நண்பன் ஒருவரும்தான் புத்தகத்தின் கதையை மட்டும் படிக்கக்கூடாது, அதனுடைய முன்னுரையையும் படிக்க வேண்டும் என்று கூறினார். அப்படி படித்த பொழுதுதான் இவருடைய பெருவாரியான புத்தகங்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை என்று தெரிய வந்தது. J


மேற்கூறிய நான்கிலிருந்து ஜல தீபம் நூலளவு கூட விலகவில்லை. முதல் பாகம் சுமார் 350 பக்கங்கள் கொண்டது. கதாநாயகன் இதயச்சந்திரன் முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். முதல் பாகத்திலேயே இரண்டு நாயகிகள் வந்து விடுகிறார்கள். பெரிய மனிதராக சார்கேல் கனோஜி ஆங்க்ரே வந்து விடுகிறார். இதயச்சந்திரன் ஒரு நபரை தேடி செல்கிறார். கடற்போரில் வீழ்த்தப்படுகிறார். சில பல திருப்பங்களுக்கு பிறகு கனோஜியடம் பணி புரிய செல்கிறார் இதயச்சந்திரன்.


 முதல் பாகத்தில் வில்லனாக பெரியதாக யாருமில்லை. ஒரு சில அத்தியாயங்களுக்கு மட்டும் சித்தி என்பவர் வில்லனாக வந்து போகிறார். முதலில் எட்டி பார்க்கும் பானுமதி என்னும் கதாநாயகி முதல் பாதியில் மட்டும் வருகிறார். இரண்டாம் பாதியில் மஞ்சு என்பவர் வருகிறார்.


புத்தகத்தின் முதல் பகுதி கதைக்களத்தை புரிந்து கொள்வதிலேயே போய் விடுகிறது. எனினும் ஆசிரியர் வாசகர்களை பெரிதாக சிரமப்படுத்தவில்லை. முதல் 50  பக்கங்களில் மிக எளிதாக புரிந்துவிடுகிறது. கதையின் பெயரான ஜல தீபம் புத்தகத்தின் 200வது பக்கத்தில் உதிர்க்கப்படுகிறது. எனக்கு என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது கடல் புறாவின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


எனினும், சாண்டில்யன் வழக்கம் போல் வித விதமான திருப்பங்களை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் வைத்து அந்த ஞாபகங்களை துரத்தி அடிக்கிறார். அவருடைய எழுத்துகளை விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரியவன் இல்லையென்றாலும் இந்த வலைப்பூ படிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றும் என்ற நோக்கத்துடனும் அவர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டமாக இருக்கும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.


     இரண்டாம் பாகத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்..

No comments:

Post a Comment