Saturday, June 14, 2014

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - II (Ponniyin Selvan Drama Review Part 2)

முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
http://southindianhistory-india.blogspot.in/2014/06/i.html

சென்டர் ப்ரெஷ் விளம்பரத்தில் "இட்லி, பூரி, மசால் தோசை" என்று வரிசையாக ஒருவர் கூறுவாரே. அவர்தான் பார்த்திபேந்திர பல்லவனாக நடித்திருந்தார். நாடகத்தின் இறுதி பகுதி அவருடைய முழு திறமையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அவர் வாள் பயிற்சி செய்யும் பொழுது தெரிகிறது.

நாடகத்தின் டைட்டில் கதாப்பாத்திரமான பொன்னியின் செல்வனாக நடித்திருப்பவரும் ஒரு புதியவரே. பொன்னியின் செல்வர் அறிமுகமாகும் வாள் சண்டை காட்சியில் கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் காதை கிழிக்கின்றன. ஆனால் அவருடைய பாத்திரம் வெறும் அரை மணிநேரத்திற்கும் குறைவாகவே வருகிறது. எனினும் புத்தகத்தில் விவரித்திருந்தது போலவே மிகவும் அழகான ஒருவரை நாடக குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நதிகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடுவது போல நாடகம் ஆதித்ய கரிகாலனின் கொலையை நோக்கியே ஓடும். ஆதித்ய கரிகாலனாக நடித்திருப்பவர் நடிகர் பசுபதி. கட்டியம் கூறுபவர் ஆதித்ய கரிகாலன் பராக் பராக் என்று கூறி முடித்து பசுபதி வரும் முன்னரே அரங்கத்தில் உள்ளவர்கள் விசில் அடிக்கின்றனர். ஆதித்ய கரிகாலனின் பாத்திரம் புத்தகத்தில் சில நேரமே வந்தாலும் அவர் பேசும் வசனங்கள் மூலம் அவருடைய தன்மையை கல்கி வெளியிட்டிருப்பார். அதே போல் பசுபதி சில நேரமே வந்தாலும் தன்னுடைய நடிப்பினால், வசன  உச்சரிப்பால் கவர்கிறார்.

மற்ற கதை மாந்தர்களான நந்தினி, வானதி , குந்தவை , பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, சுந்தர சோழர், பூங்குழலி, பிரம்மராயர், சேந்தன் அமுதன், ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் திறம்பட நடித்திருக்கின்றனர். அவர்களை பற்றி எழுதினால் நீண்டு கொண்டே போகும் என்பதால் ஒரே வரியில் சுருக்க வேண்டியதாகிற்று.

அரங்க மேடை தொடக்கத்தில் மிக சாதரணமாக தோன்றினாலும் போக போக தோட்டா தரணியின் கலை நுணுக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அதுவும் யானை நம்மை வியப்பின் உச்சிக்கே செல்லவைக்கிறது, வந்தியதேவனும் பூங்குழலியும் படகில் செல்லும் காட்சிகளில் இயக்குனரின் திறன் பளிச்சிடுகின்றது.

ஒரு புத்தகத்தை அதுவும் 60 வருடங்களாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு புத்தகத்தை நாடகமாக எடுக்கும் பொழுது ரசிகர்கள் ஒரு விதமான எதிர்ப்பார்ப்புகளுடன் வருவர். அவர்களை 3 1/2 மணி நேரத்தில் திருப்தி படுத்துவது என்பது மிகவும் கடினம். ஆனால் நம்மை 3 1/2 மணி நேரம் கட்டி போடுகின்றனர் நாடக குழுவினர். பாராட்டினால் மட்டும் போதாது என்றே தோன்றுகிறது.

வெறும் 6 மாதத்தில் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி, பயிற்சி எடுத்து இந்த நாடகத்தை அமைத்ததாக குழுவினர் கூறினர். மிகவும் ஆச்சர்யம்தான். அவர்களுடைய முயற்சி பொன்னியின் செல்வனுடன் மட்டும் நின்று விடக்கூடாது. மேன்மேலும் முயற்சி செய்து இன்னும் சில நாவல்களை நாடகமாக்கி எங்களை மேலும் மகிழ்விக்கவேண்டும் என்பதே என்னை போன்ற புத்தகப்புழுக்களின் அவா.

No comments:

Post a Comment