Monday, June 9, 2014

ப்ளைமவுத் (Plymouth) மற்றும் அம்பாசடர் (Ambassador) கார்கள் - I

இன்றைய உலகத்தில் ஏதோ ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மாதத்திற்கு ஒரு முறை புதிய கார் ஒன்றை நமது சந்தையில் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இந்தியா உலக தாரளமயமாக்கல் (Globalisation) கொள்கைகளை கடைப்பிடிக்கும் முன்னர் நிலைமை இப்படி இருந்து விடவில்லை. இன்று தான் ஆடியும் (Audi) பென்சும் (Benz) நமக்கு சர்வ சாதரணமாக போய்விட்டது. 30-40 வருடங்களுக்கு முன்னர் அம்பாசிடரும் பத்மினியும்(அட காரு பேருங்க!!) தான்.

அம்பாசிடர் காரை உபயோகபடுத்தாத அன்றைய பிரபலங்கள் இல்லவே இல்லை என்று கூறுமளவிற்கு அம்பாசிடர் கார் பிரபலமாக இருந்து வந்தது. மிக சமீபமாக தான் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நம்மாட்களுக்கு உள்ளூர் பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் மற்றும் வெளியூர் சந்தை பொருட்கள் தரமானது என்ற நினைப்பே மிக முக்கிய காரணம்.

இன்று எப்படி பெராரி ரக கார்களும் ஹம்மர் கார்களும் பிரபலங்களால் இறக்குமதி செய்யபடுகின்றனவோ அதை போல் அந்நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் பிளைமவுத் கார்கள் ஆகும். எம்.ஜி.ஆர் முதல் சிவாஜி வரை அனைவரும் உபயோகபடுத்தியது பிளைமவுத் கார்களே. இவ்விரு கார்களை பற்றிய ஒரு சிறு பதிவே இது.




முதலில் உள்ளூர் சரக்கு அம்பாசிடர். :)

சிறிது காலமாக தான் இந்தியாவின் பிரதமரும் ஜனாதிபதியும் BMW மற்றும் BENZ ரக கார்களை உபயோகப்படுத்துகின்றனர். உங்களுக்கு தெரியுமா. இந்தியாவின் ஜனாதிபதி பயன்படுத்துவது Mercedes Benz S600 ரக கார். 




அதற்கு முன் Mercedes-Benz W140



அடுத்து பிரதமருக்கு வருவோம். இந்திய பிரதமர் பயன்படுத்தும் கார் இதோ உங்கள் பார்வைக்கு (BMW 7 Series)




நமது நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் உபயோகப்படுத்தியவை அம்பாசிடர் கார்களே. அம்பாசிடர் கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறி BMW கும் Benz கும் தாவிவிட்டார்கள். பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு படையினர் கூட BMW ரக கார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

அம்பாசிடர் ரக கார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார் கம்பெனியால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அம்பாசிடர் கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்ததே தவிர அதனுடைய வடிவம் (Design) Morris Oxford III ரக கார்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றாகும். முதல் முறையாக இந்த கார் குஜராத்தின் ஓகா துறைமுகத்தில் அமைந்திருந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

 எவ்ளோ அடிச்சாலும் தாங்க கூடிய வடிவத்தை கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்களாக இருந்து வந்தது. எனினும் மத்திய தர குடும்பங்கள் வாங்கும் அளவிற்கு விலை நிர்ணயிக்கபடாததால் விற்பனையில் சற்றே தொய்விருந்தது. எனினும் அன்றைய நாட்களில் கார் என்றாலே அம்பாசிடர் தான். வேறு எந்த ஒரு நிறுவனமும் இந்த அளவிற்கு வளர்ந்து விடவில்லை. Premier நிறுவனத்தின் Padmini ரக கார்கள் சற்று போட்டியை கொடுத்து வந்தது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்து விடவில்லை. கரப்பான் பூச்சி எப்படி கோடி கணக்கான வருடங்களாக அப்படியே இருக்கிறதோ அதே போல் தான் அம்பாசிடரும் இருந்து வந்தது. Analogy கூற வேறு ஒன்றும் தெரியவில்லை. :)

80 களின் இறுதியில் அம்பாசிடரின் வீழ்ச்சி ஆரம்பித்தது. மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி (Suzuki) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 800 ரக காரை களத்தில் இறக்கியது. முதன் முறையாக அம்பாசிடரின் விற்பனை எண்ணிக்கை குறைந்தது. கார் ஆட்டோமொபைல் சந்தையில் முடி சூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடருக்கு வில்லனாக மாருதி 800 வந்தது.

90 களின் இறுதியில் மத்திய அரசாங்கம் உலகமயமாக்கல் கொள்கை கொண்டு வந்தவுடன் மேலும் பல நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை இந்திய சந்தையில் தொடங்கி விடவே, அம்பாசிடர் பெரும் வீழ்ச்சியை கண்டது. மிகவும் தாமதமாக விழித்து கொண்ட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சில மாற்றங்களுடன் அம்பாசிடர் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. எனினும் வேலைக்கு ஆகாததால் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மே 20, 2014 அன்று அம்பாசிடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.

நான்கு படத்தை போட்டவுடன் அதிகமாக எழுதியதை போல் உள்ளது. எனவே பிளைமவுத் கார்கள் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்....


No comments:

Post a Comment