Friday, February 27, 2015

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தக விமர்சனம் (Kandhalur Vasanthakumaran Kadhai)

முதல் முறையாக இரு வருடங்களுக்கு முன் படித்தேன். புத்தகம் நண்பர்கள் வட்டாரத்தில் மாறி மாறி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகம் யாரிடம் உள்ளது என்று நண்பர்களுக்கே தெரியவில்லை. நமது கலக்க்ஷனில் அந்த புத்தகம் இல்லாதது ஒரு உறுத்தலாக இருந்துவந்தது. இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகத்தை வாங்கிவிட்டேன். புத்தகத்தின் விலை இரு வருடங்களில் 40 ருபாய் அதிகமாகி இருக்கிறது. :-(

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எப்பொழுதும் நமக்கு பிடித்தவர்கள் செய்யும் காரியங்களில் நம்மால் குறை கண்டுபிடிக்க இயலாது. சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே எனது விமர்சனம் நேர்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு பயாஸ்டு (Biased) விமர்சனம் என்று வைத்து கொள்வோமே. :-)

 புத்தகத்தின் விமர்சனம் எழுதும் பொழுது கதையை அளவுக்கு அதிகமாக விளித்துவிடுகிறேன் என்று கூறிவருகின்றனர். முடிந்த வரை கதையை கூறாமல் விமர்சிக்க முயற்சிக்கிறேன். மற்றொரு விமர்சனமாக என்னுடைய வலைப்பதிவுகள் மிகவும் சிம்பிளாக உள்ளதாக கூறுகின்றனர். என்னுடைய நோக்கமே அதுதான். வரலாறு சம்பந்தப்பட்டது என்றாலே தூய தமிழிலும் காம்ப்ளக்ஸ் ஆகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை உடைக்கவே முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

வழக்கமான ஒரு கதைதான். ஒரு துறுதுறுப்பான வாலிபன். அவன் செய்யும் செயல்களில் அவனையும் அறியாமல் ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறான். இடைச்செறுகலாக ஒரு இளவரசியுடன் காதல். வாலிபனின் ஆசான் அவனை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். பிறகு, வாலிபனிடம் மிக பெரிய காரியம் ஒன்று ஒப்படைக்கப்படுகிறது.  அவ்வளவே.

கதையை சுருக்கமாக கூறுகிறேன். வசந்தகுமாரன் யவனன் ஒருவனை துறைமுகத்தில் சந்திக்கிறான். அவனுடைய குதிரைகளை விற்று தறுவதன் மூலம் கமிஷன் பார்க்கலாம் என்று கோட்டை கட்டுகிறான். அசம்பாவிதமாக ஒரு கொலை. மர்மம். பழி வசந்தகுமாரன் மேல் விழுகிறது. தனது குறும்பு பேச்சால் வசந்தகுமாரன் அவனையும் அறியாமல் சதியில் சிக்கி கொள்கிறான். சதியில் இருந்து மீண்டானா இல்லையா என்பதை தனக்கே உரிய நடையில் சுஜாதா கூறியிருக்கிறார்.

வாலிபன் பெயர் வசந்தகுமாரன். ஆசானின் பெயர் கணேச பட்டர். இவ்விரு பெயர்களும் ஏனோ சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கதாப்பாத்திரங்களை ஞாபகப்படுத்துகிறது. புத்தகத்தில் ஆங்காங்கே சுஜாதாவின் புரியாத வசனங்கள் எட்டி பார்க்கிறது. திருதிருவென்று முழிப்பதை விட்டுவிட்டு பிறிதொரு நாள் அர்த்தம் கண்டுபிடிக்கலாம் என்று குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். புத்தகத்தில் குக்கன், சுவான தோன்றல்களே, ஞமலி போன்ற வார்த்தைகள் அடிக்கடி தோன்றுகின்றன. தேடி பார்த்ததில் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தான். நாய். :-)

புத்தகத்தின் பக்கங்களும் அத்தியாயங்களும் மிக சிறியது என்பதால் எடுத்த வேகத்தில் புத்தகம் முடிந்துவிடும். அனைவரும் விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். :-)



No comments:

Post a Comment