Sunday, February 8, 2015

கோமகள் கோவளை - ஒரு புத்தக விமர்சனம்

புத்தக கண்காட்சியில் சிக்கிய மற்றொரு புத்தகம். மு மேத்தா அவர்கள் எழுதியது. வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே புத்தகத்தின் முன்னுரையை அங்கேயே வாசித்தேன். புத்தகம் சோழர்களை பற்றியது என்றும் அதிலும் வீரராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்தில் நடக்கும் கதை என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் உடனே வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கோவளை வீரராஜேந்திர சோழரின் மகள். முதல் 2-3 அத்தியாயங்களில் அதிராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர், அதிராஜேந்திர சோழர் மற்றும் மேலை சளுக்க இளவரசனாகிய விக்ரமாதித்யன் ஆகியோர் அறிமுகமாகி விடுகின்றனர். குலோத்துங்க சோழனை மேல் எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. இப்புத்தகத்தில் ஏதேனும் புதிதாக இருக்குமோ என்று நினைத்து படித்தேன். குலோத்துங்க சோழரை வழக்கமான ஒரு வீரனாக, ஒரு காதலனாக சித்தரித்து உள்ளாரே தவிர ஒன்றும் புதிதாக இல்லை.

கதையும் சரி, கதையை நகர்த்தி செல்லும் விதமும் சரி ஒன்றும் புதுமையாக இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று முன்கூட்டியே யூகித்து விட முடிவது புத்தகத்தின் அதிமுக்கியமான குறை. கதையை கூறிவிட்டால் இப்புத்தகத்தை யாரும் வாங்கமாட்டீர்கள் என்பதால் கதையை கூறப்போவதில்லை.

புத்தகத்தின் ஓரிரு அத்தியாயங்கள் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் புத்தகத்தின் குறைகள் நிறைகளை தோற்கடித்து விடுகிறது. ஆங்காங்கே மு மேத்தா கதையில் இருந்து நழுவி டாக்குமெண்டரி படம் போல் பல பக்கங்களை சோழர்கள் பற்றி அவர் படித்த தகவல்களை போட்டு நிரப்பியுள்ளார். நல்ல வேளையாக புத்தகத்தின் பக்கங்கள் வளர வளர இது குறைந்து விடுகிறது.

கதையை எழுத்தாளர் முடித்த விதம் என்னை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியது. புத்தகத்தை முடிக்க தெரியாமல் முடித்துவிட்டார் என்று கூறலாம். புத்தகத்தை படிப்பவர்கள் இந்த கருத்தோடு ஒத்து போவார்கள் என்று நம்புகிறேன். இப்புத்தகத்தை மற்றவர்கள் வாசிக்கலாமா வேண்டாமா என்று கருத்து கூறும் அளவுக்கு நான் பெரிய விமர்சகன் இல்லை. வரலாறு சம்பந்தப்பட்ட புதினங்களை வாசிப்பவர்களுக்கு தெரியும் வீரராஜேந்திர சோழரை பற்றி எழுதப்பட்ட புதினங்கள் மிகவும் குறைவு என்று. எனவே வரலாறு படிப்பவர்கள் கண்டிப்பாக வாங்குவார்கள் என்றே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment